`தமிழகத்தில் முதல்முறை!’- நீலகிரியில் வரவேற்பைப் பெற்ற `ரோலர் கிராஸ் பேரிகேடுகள்’

தமிழகத்தில் கல்லட்டி மலைப்பாதையில் விபத்து ஏற்பட்டாலும், உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்க ரோலர் கிராஸ் பேரியர் அமைக்கப்பட்டுள்ளது. இதை மேலும் 8 இடங்களில் அமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
மலை மாவட்டமான நீலகிரியில் மேட்டுப்பாளையம் - குன்னூர், கோத்தகிரி - மேட்டுப்பாளையம், கெத்தை மலைப்பாதை, கல்லட்டி மலைப்பாதை ஆகிய சாலைகள் வனப்பகுதியினூடாக அமைக்கப்பட்டவையாகும். இந்தச் சாலைகளில் கொண்டை ஊசி வளைவுகள் மற்றும் செங்குத்து சாலைகள் உள்ளன.

அதிலும் குறிப்பாக கல்லட்டி மலைப்பாதை எனப்படும் தலைக்குந்தா முதல் கல்லட்டி வழியாக மசினகுடி செல்லும் இந்தச் சாலையே விபத்துகள் அதிகம் ஏற்படும் ஆபத்தான சாலையாக உள்ளது. 36 கொண்டை ஊசி வளைவுகளைக்கொண்ட 20 கி.மீ சாலையில் இதுவரை ஏற்பட்ட வாகன விபத்துகளில் பலர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது இந்தச் சாலையில் வாகனப் போக்குவரத்துக் கட்டுபாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளூர் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் கூடலூர் வழியாக அனுப்பப்படுகிறது.

ஆபத்து நிறைந்த கல்லட்டி மலைப்பாதையில் உயிரிழப்புகளை குறைக்கும் வகையில் தமிழகத்திலேயே முதல் முறையாக ரோலர் கிராஸ் பேரியர் எனப்படும் புதுவகை தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடுப்பு குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ``இந்தச் சாலையில் விபத்து அதிகம் ஏற்படும் இடங்களைக் கண்டறிந்தோம். அந்தப் பாதுகாப்பு தடுப்புகளைத் தாண்டி விபத்துகள் ஏற்படுவதால் உலகத் தரம் வாய்ந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தால் மட்டுமே, இந்தச் சாலையில் விபத்துகளைத் தடுக்க முடியும் என முடிவுசெய்தோம். இதைத் தொடர்ந்து மலேசியா நாட்டின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாலையோரங்களில் ரோலர் கிராஸ் பேரியரை அமைக்கத் திட்டமிட்டோம்.

விபத்துகள் அதிகம் ஏற்படும் 35 - 36வது வளைவுகளுக்கு இடையே இந்த ரோலஸ் கிராஸ் பேரியரை அமைத்துள்ளோம். தொடர்ந்து விபத்து நடக்கும் இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ள 8 இடங்களில் இந்தத் தொழில் நுட்பத்தில் ரோலர் கிராஸ் பேரிகார்டுகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்" என்றனர்.
இந்தத் தொழில்நுட்பம் குறித்து பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர், ``இந்தச் சாலையில் வரும் வாகனம், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தை நோக்கிச் செல்லும் நிலை வந்தால் இந்தத் தடுப்பில் மோதி அந்த வாகனம் ரோலரில் சுற்றிக் கொண்டு மீண்டும் சாலைக்கே வந்து விடும். இதனால், விபத்து நடக்கும் வாகனங்களுக்கும் சேதம் அதிகம் ஏற்படாது. அதேசமயம் லேசான காயங்களுடன் பயணிகள் உயிர் தப்பிவிட முடியும். இது இந்தியாவில் தற்போது பெங்களூரில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் ஊட்டியில் மட்டுமே முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது" என்றார்.

இது குறித்து வாகன ஓட்டிகள், ``வெளிமாநிலம் மற்றும் வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இச்சாலையில் பாதுகாப்பாக வாகனங்களை இயக்கத் தெரியாமல் அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர். இதனால், இந்தச் சாலையில் அடிக்கடி உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்தன. தற்போது விபத்தைத் தடுக்கும் வகையில் புதிய வகை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இது பயனுள்ளதாக இருக்கும்" என்கின்றனர்.