Published:Updated:

`என்னது 2.26 லட்சம் ரூபாவா?' - விவசாயக் கூலித் தொழிலாளிக்கு 'ஷாக்' கொடுத்த கரன்ட் பில்

மின்வாரியம்

ராமநாதபுரம் அருகே விவசாயக் கூலித் தொழிலாளியின் வீட்டுக்கு மின்கட்டணம் 2.26 லட்சம் எனப் பதிவானதால் அவர் அதிர்ச்சியடைந்தார்.

`என்னது 2.26 லட்சம் ரூபாவா?' - விவசாயக் கூலித் தொழிலாளிக்கு 'ஷாக்' கொடுத்த கரன்ட் பில்

ராமநாதபுரம் அருகே விவசாயக் கூலித் தொழிலாளியின் வீட்டுக்கு மின்கட்டணம் 2.26 லட்சம் எனப் பதிவானதால் அவர் அதிர்ச்சியடைந்தார்.

Published:Updated:
மின்வாரியம்

ராமநாதபுரம் மாவட்டம், முத்துப்பேட்டை ஊராட்சியைச் சேர்ந்தவர் சகாய ஆரோக்கிய பெனிட். வெற்றிலை கொடிக்கால் பறிக்கும் கூலி வேலை செய்து வருகிறார். இவரது வீட்டின் கடந்த இரண்டு மாத மின் கட்டணத்தை ரெகுநாதபுரம் துணை மின் நிலைய கணக்கீட்டாளர்கள் கணக்கீடு செய்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். இந்த நிலையில் அவரது செல்போன் எண்ணுக்கு இரண்டு மாதங்களுக்கான மின்கட்டணம் ரூ.2,26,564 என குறுஞ்செய்தி வந்திருக்கிறது. பின்னர் சந்தேகமடைந்தவர் ஆன்லைனில் மின்கட்டணம் குறித்து பார்த்திருக்கிறார். அதிலும் அதே கட்டணம் பதிவுசெய்யப்பட்டிருந்ததால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து ரெகுநாதபுரம் துணை மின் நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

`என்னது 2.26 லட்சம் ரூபாவா?' - விவசாயக் கூலித் தொழிலாளிக்கு 'ஷாக்' கொடுத்த கரன்ட் பில்

இது தொடர்பாக சகாய ஆரோக்கிய பெனிட்டிடம் கேட்டபோது, ``நடுத்தர வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களைத்தான் பயன்படுத்தி வருகிறோம். ரூ.350 முதல் 400 வரைதான் வழக்கமாக மின்கட்டணம் வரும். ஆனால் இந்த முறை பார்த்தால் ரூ.2.26 லட்சம் மின்கட்டணம் என வந்ததை பார்த்து என் இதயமே கொஞ்ச நேரம் நின்று விட்டது. இது குறித்து துணை மின் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். அவர்கள் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்" எனக் கூறினார்.

மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் வைத்துள்ள பேனர்
மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் வைத்துள்ள பேனர்

இந்த நிலையில், முத்துப்பேட்டை ஊராட்சிக்கு மின் கணக்கீடாளர்கள் கடந்த எட்டு மாதங்களாக மின்கட்டணம் கணக்கீடு செய்ய சரிவர வருவதில்லை என ரெகுநாதபுரம் துணை மின் நிலைய உதவி பொறியாளரிடம் கிராமமக்கள் புகார் மனு அளித்துள்ளனர். இதுவரை நடவடிக்கை எடுக்காததால் துணை மின் நிலைய அதிகாரிகளை கண்டித்து கிராமமக்கள் முத்துப்பேட்டை ஊராட்சியில் பேனர் வைத்துள்ளனர்.

இது தொடர்பாக ரெகுநாதபுரம் துணை மின் நிலைய உதவி பொறியாளர் குருவேல் கூறும்போது, ``கணினியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இந்த கூடுதல் கட்டணம் பதிவாகியுள்ளது. விரைவில் அது சரி செய்யப்பட்டு அவரது வீட்டிற்கு வழக்கமாக வரும் மின்கட்டணம் என்ன என்பது தெரிவிக்கப்படும். அதன் பிறகு அவர் மின்கட்டணம் செலுத்திக் கொள்ளலாம் எனக் கூறிவிட்டோம். ரூ.5 ஆயிரம் வரை கூடுதல் கட்டணம் பதிவாகி இருந்தால் துணை மின் நிலையம் மூலம் நாங்களே சரி செய்ய முடியும். இது இரண்டு லட்சத்திற்கு மேல் பதிவாகியுள்ளதால் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். விரைந்து சரி செய்யப்பட்டு அவர் வழக்கமான கட்டணத்தை செலுத்தலாம்" எனக் கூறினார். மேலும் அலட்சியமாக பணியாற்றிய மின் கணக்கீட்டாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.