Published:Updated:

‘இலவச அரிசி, பருப்புடன் ரூ.1000 நிதியுதவி!’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு #Corona

முதல்வர் பழனிசாமி
முதல்வர் பழனிசாமி

கொரோனா நடவடிக்கையால் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு அரிசி, பருப்புடன் நிதியுதவி அறிவித்துள்ளார் தமிழக முதல்வர்.

கொரோனா பாதிப்பில் இந்தியா முழுவதும் சிக்குண்டு இருக்கும் இந்த நேரத்தில் அனைத்து மாநில எல்லைகளையும் அந்தந்த மாநில அரசு முழுவதுமாக மூடியுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டுக்குள் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் அனைத்து மாநில அரசுகளும் மக்களுக்கு நிதியுதவி அறிவித்து வருகின்றன. அந்த வகையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தமிழக மக்களுக்கு நிதியுதவி அறிவித்துள்ளார்.

கொரோனா
கொரோனா

இன்று கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழகத்தில் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 1000 ரூபாய் வழங்கப்படும். நடைபாதை வியாபாரிகளுக்காக ரூ.3250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

`நாம் உழைப்பவர்கள், நமக்கு கொரோனா வராது!' - கிராம மக்கள்முன் முதல்வர் எடப்பாடி

கட்டடத் தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்களுக்குச் சிறப்புத் தொகுப்பாக தலா 1000 ரூபாயும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு மற்றும் 1 கிலோ சமையல் எண்ணெய் வழங்கப்படும். ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க டோக்கன் முறையில் பொருள்கள் வழங்கப்படும். மார்ச் மாத ரேஷன் பொருள்களை வாங்காவிட்டால் ஏப்ரல் மாதம் அதைச் சேர்த்து வாங்கிக்கொள்ளலாம்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

மேலும் பிற மாநிலத்தைச் சேர்ந்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய் வழங்கப்படும். தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்கள் தொடர்ந்து இயங்கும். ஆதரவற்றவர்கள், வீட்டை விட்டு வெளியேற முடியாதவர்களுக்குத் தேடிச் சென்று உணவு வழங்கப்படும். தேவையான அனைத்து இடங்களிலும் சமையல் கூடங்கள் அமைக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உள்ளது. இன்று மாலை முதல் மாநிலம் முழுவது 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அத்தியாவசியப் பொருள்களுக்கு எந்தத் தடையும் இருக்காது எனவும் முன்னதாக முதல்வர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு