Published:Updated:

ரூ.3 கோடி சொத்து; எழுதி வாங்கிக்கொண்டு விரட்டிய பிள்ளைகள் -நெல்லை முதியவருக்குக் கிடைத்த நீதி

77 வயது முதியவர் சுடலைமணி
77 வயது முதியவர் சுடலைமணி

நெல்லை சந்திப்பு பகுதியில், முக்கியமான இடத்தில் இருந்த வீட்டை தங்கள் பெயருக்கு எழுதி வைக்குமாறு மகனும் மகளும் நெருக்கடி கொடுத்தார்கள். அதன்படி எழுதிக்கொடுத்த பிறகு, அவரைக் கவனிக்காமல் கைவிட்டார்கள்.

நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள பாலபாக்கியா நகரைச் சேர்ந்தவர், சுடலைமணி. 77 வயதாகும் இவருக்கு காது சரியாகக் கேட்காது. இவரின் பெற்றோர் கந்தசாமி- ஜானகியம்மாள் சுதந்திரப் போராட்டத் தியாகிகள். தாயார், சுதந்திரப் போராட்டத்தில் கைதாகி, அதிக நாள்கள் சிறையில் இருந்ததால் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் கௌரவிக்கப்பட்டவர். 

ஆட்சியர் அலுவலகத்தில் சுடலைமணி
ஆட்சியர் அலுவலகத்தில் சுடலைமணி

சுடலைமணியின் சித்தப்பா சண்முக சுந்தரம் என்பவரும் சுதந்திரப் போராட்டத் தியாகி. அந்த அளவுக்கு நாட்டுக்காக பாடுபட்ட குடும்பத்தில் பிறந்த சுடலைமணிக்கு, ஒரு மகளும் மூன்று மகன்களும் உள்ளனர்.

சுடலைமணிக்குச் சொந்தமான சொத்து, பாலபாக்கியா நகரில் இருக்கிறது. தற்போதைய மார்க்கெட் மதிப்பில் மூன்று கோடி மதிப்புள்ள அந்த வீட்டை, தங்கள் பெயருக்கு எழுதிக் கொடுக்குமாறு மகன் கந்தகுமார், மகள் விஜயலட்சுமி ஆகியோர் கேட்டுள்ளனர். 

சுமார் மூன்று கோடி மதிப்புள்ள என் வீட்டை தானமாக எழுதிக் கொடுத்த பிறகு, என்னை கவனிக்காமல் புறக்கணித்தார்கள்
முதியவர் சுடலைமணி

அதன்படி, மகனுக்கும் மகளுக்கும் வீட்டை தானமாக எழுதிக் கொடுத்துவிட்டார். அதன் பின்னர், இருவரும் அவரைக் கவனிக்கவில்லை. உணவு, உடை என எதையும் கொடுக்காத அவர்கள், காது கேட்காமலும் உடல் நலப் பாதிப்பிலும் உள்ள அவரை வீட்டிலிருந்து வெளியேற்ற முயன்றுள்ளனர்.

மகனும் மகளும் சேர்ந்து தன்னை ஏமாற்றுவதை அறிந்து அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்த சுடலைமணி, இதுகுறித்து கடந்த ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி, நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷிடம் புகார் அளித்தார். அவர் அந்த மனுவை கோட்டாட்சியர் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கோட்டாட்சியருக்கு நன்றி தெரிவிக்க வந்த முதியவர்
கோட்டாட்சியருக்கு நன்றி தெரிவிக்க வந்த முதியவர்

அதன்படி, கோட்டாட்சியர் மணிஷ் நாரணவரே விசாரணை நடத்தியதில், சுடலைமணியை அவரது பிள்ளைகள் யாரும் கவனிக்காமல், அவருடைய வீட்டை திட்டமிட்டு அபகரித்துக் கொண்டது தெரியவந்தது. அந்த வீட்டை அவர் சட்டப்படி திரும்பப் பெற்றுக்கொள்ளக் கூடாது என்பதற்காக, அதை அடமானம் வைத்து வங்கிக் கடன் பெற்றிருப்பதும் உறுதிசெய்யப்பட்டது.

இது குறித்து விசாரித்த கோட்டாட்சியர், பெற்றோர் முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வுச் சட்டம் 2007-ன்படி, சுடலைக்குமாரை கவனிக்காமலும் அவருக்கு உணவு, மருத்துவ வசதிகளைச் செய்து கொடுக்காமலும் இருந்த மகன்கள் மற்றும் மகளைக் கண்டித்தார். 

ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் சுடலைமணி
ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் சுடலைமணி

அத்துடன், மகன் கந்தகுமார் மாதம் ரூ.4,000 மற்றும் இரு மகன்கள் மற்றும் மகள் ஆகியோர் தலா ரூ.2,000 ஜீவனாம்சமாக வழங்க உத்தரவிட்டார். மொத்தம் ரூ.10,000 மாதந்தோறும் நால்வரும் சேர்ந்து அவருக்கு வழங்க வேண்டும் என உத்தவிட்ட கோட்டாட்சியரான மணீஷ் நாரணவரே, அப்படி வழங்கத் தவறினால், சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டியதிருக்கும் எனவும் எச்சரித்து உத்தரவிட்டார்.

இந்தத் தீர்ப்பு வழங்கிய கோட்டாட்சியரை நேரில் சந்தித்த முதியவர் சுடலைமணி, நெகிழ்ச்சியுடன் அவருக்கு நன்றி தெரிவித்தார். நெல்லை மாவட்டத்தில் நடந்துள்ள இந்தச் சம்பவம் பலராலும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு