Published:Updated:

`8 லட்சம் தொழிலாளர்கள்; 80% பெண்கள்!' -தேங்கும் தீப்பெட்டி பண்டல்களால் கலங்கும் உற்பத்தியாளர்கள்

தீக்குச்சி அடுக்குதல்
தீக்குச்சி அடுக்குதல்

மாநில அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவினால், ரூ.100 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. போக்குவரத்து பாதிப்பினால் உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகளை வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியாததாலும், இறக்குமதி செய்ய முடியாததாலும் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், தீப்பெட்டியும் விதிவிலக்கல்ல.

இயந்திர தீப்பெட்டி உற்பத்தி
இயந்திர தீப்பெட்டி உற்பத்தி

தமிழகத்தைப் பொறுத்தவரையில் தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களின் பல பகுதிகளிலும், நெல்லை, தென்காசி, தருமபுரி, வேலூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 50 முழு இயந்திர தீப்பெட்டித் தொழிற்சாலைகளும், 400 பகுதி இயந்திர தீப்பெட்டித் தொழிற்சாலைகளும், 3,000 சிறு தீப்பெட்டித் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இத்தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில், 80 சதவிகித தொழிலாளர்கள் பெண்கள்தான்.

ஜி.எஸ்.டி வரிவிதிப்பினால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிப்பு அடைந்தனர். இவ்வரியைக் குறைக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் பலமுறை மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்நிலையில், தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான, 18 சதவீதம் விதிக்கப்பட்டிருந்த ஜி.எஸ்.டி வரியைக் கடந்த சில நாட்களுக்கு முன்பு 12 சதவீதமாகக் குறைத்து அறிவித்தது மத்திய அரசு.

தேங்கிய தீப்பெட்டி பண்டல்கள்
தேங்கிய தீப்பெட்டி பண்டல்கள்

இதனால், தீப்பெட்டி உற்பத்தியாளார்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் தமிழகத்தில் தீப்பெட்டித் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால், இத்தொழிற்சாலைகளில் ஏற்கெனவே உற்பத்தி செய்யப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளதாக கூறுகின்றனர் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர் சேதுரத்தினத்திடம் பேசினோம், “தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி பண்டல்கள் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், அரியானா போன்ற வட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதுடன், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கப்பல்களில் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

லாரிகளில் ஏற்றப்பட்டு நிறுத்தி வைக்கபட்டுள்ள பண்டல்கள்
லாரிகளில் ஏற்றப்பட்டு நிறுத்தி வைக்கபட்டுள்ள பண்டல்கள்

இந்நிலையில், எங்களின் நீண்டநாள் கோரிக்கையான ஜி.எஸ்.டி வரிவிதிப்பையும் குறைத்துள்ளது மத்திய அரசு. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், உற்பத்தி செய்யபட்ட தீப்பெட்டி பண்டல்களை வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்க முடியாமல், குடோன்களிலும் லாரி ஷெட்டுகளிலும் இருப்பு வைத்துள்ளோம்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு சில நாட்களுக்கு முன்பு வெளிமாநிலங்களுக்கு அனுப்பிய லாரிகள் மாநில எல்லைகளுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், தமிழக எல்லைப் பகுதிகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், தீக்குச்சி தயாரிப்பின் முக்கியத் தேவையான மரத்தடிகள் கேரளாவில் இருந்து கொண்டு வரப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தேக்கம் அடைந்த பண்டலகள்
தேக்கம் அடைந்த பண்டலகள்

புதுச்சேரியில் இருந்து குளோரேட் இறக்குமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களிலிருந்து வரவேண்டிய தீக்குச்சி மூலப்பொருட்களின் வரத்தும் நிறுத்தப்பட்டன. ஏப்ரல் 14-ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு உத்தரவால் சுமார் 8 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது” என்றார் வேதனையுடன்.

அடுத்த கட்டுரைக்கு