Published:Updated:

`கையில் பணமில்லை... விரக்தியில் மலைமீது தியானம்!' -ட்ரோன் கேமராவால் மீட்கப்பட்ட ரஷ்ய தம்பதி

மீட்டுவரும் எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி டீம்
மீட்டுவரும் எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி டீம்

உணவுக்கு வழியின்றி மன விரக்தியில் திருவண்ணாமலை தீபமலை மீது தியானம் செய்துகொண்டிருந்த ரஷ்ய நாட்டுத் தம்பதியை, ட்ரோன் கேமரா உதவியோடு மீட்டுள்ளனர் திருவண்ணாமலை காவல் துறையினர்.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் வீரியமடைந்துகொண்டே செல்வதால், இதைக் கட்டுப்படுத்த தேசிய அளவில் ஊரடங்கு மே 3-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியில் நடமாடுவதைக் கட்டுப்படுத்த ட்ரோன் கேமராக்களைப் பறக்கவிட்டுக் கண்காணித்து வருகிறது காவல்துறை. இந்த நிலையில், திருவண்ணாமலை தீபமலை மீது ட்ரோன் கேமராவை பறக்கவிட்டு கண்காணித்தபோது, ரமணர் குகை அருகே இரண்டு வெளிநாட்டினர் நடமாடுவது கேமராவில் பதிவாகியுள்ளது. உடனே காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. உடனே எஸ்.பி. சிபி சக்கரவர்த்தியின் டீம் மலைமீது சென்று இருவரையும் கீழே அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர்கள், ரஷ்ய நாட்டின் மாஸ்கோ மாகாணத்தைச் சேர்ந்த விக்டர் மற்றும் டாட்டியானா தம்பதி என்பது தெரியவந்தது. இவர்கள், 6 மாத விசாவில் ஆன்மிகப் பயணமாக இந்தியா வந்துள்ளனர். இவர்கள் பல மாநிலங்களில் ஆன்மிகப் பயணங்களை முடித்துக்கொண்டு, கடந்த 1 மாதத்துக்கு முன்னர் திருவண்ணாமலைக்கு வந்து, ரமணர் ஆசிரமம் அருகே உள்ள ஒரு வாடகை வீட்டில், நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் கொடுத்துத் தங்கியுள்ளனர்.

ரஷ்யா நாட்டு தம்பதி
ரஷ்யா நாட்டு தம்பதி

இந்த நிலையில், 144 ஊரடங்கு தடை அமலுக்கு வரவே, தங்களது தாய் நாட்டுக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஊரடங்கு நிலையில், தங்களின் உணவுச் செலவுக்கும் மற்றும் வாடகைக்கும் கையிலிருந்த பணம் முழுவதையும் செலவு செய்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக உணவுக்குக் கஷ்டப்பட்டுக்கொண்டு வாடகையும் கொடுக்க முடியாமல் இருந்துள்ளனர். இந்த விரக்தியில் இருவரும் தீபமலை மீது ஏறி, பசியைக் கட்டுப்படுத்த ரமணர் குகை அருகே தியானம் செய்துகொண்டு இருந்துள்ளனர். அப்போதுதான், காவல்துறையினரின் ட்ரோன் கேமராவில் சிக்கினர்.

இதுகுறித்து திருவண்ணாமலை எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி கூறுகையில், ``மாவட்டம் முழுவதும் பல முக்கியமான இடங்களில் ட்ரோன் கேமரா மூலம் மக்கள் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகிறோம். திருவண்ணாமலை தீபமலை மீது ட்ரோன் பறக்கவிட்டபோது அங்கு வெளிநாட்டினர் 2 பேர் இருப்பது தெரிந்தது. உடனே எங்களுடைய டீம் மேலே சென்று அவர்களை அழைத்துவந்து விசாரணை செய்ததில், அவர்கள் ரஷ்யாவைச் சேர்ந்த தம்பதி என்பதும் ஆன்மிகப் பயணமாகத் திருவண்ணாமலை வந்ததும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்த இந்தியப் பணம் முழுவதும் செலவானதால், உணவுக்கே வழியில்லாமல் விரக்தியில் மலைமீது சென்று அமைதியான முறையில் தியானம் செய்தது தெரியவந்தது.

அத்தியாவசியப் பொருள்கள் கொடுக்கும் எஸ்.பி.சிபி சக்கரவர்த்தி
அத்தியாவசியப் பொருள்கள் கொடுக்கும் எஸ்.பி.சிபி சக்கரவர்த்தி

தற்போது அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் தங்குவதற்கான அனைத்து வசதிகளையும் காவல்துறை மூலம் செய்து கொடுத்துள்ளோம். 144 ஊரடங்கு முடிந்து போக்குவரத்து சீரான பிறகு திருவண்ணாமலை காவல்துறையின் மூலம் அவர்கள் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்படுவர். மேலும், அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதை அறிய சோதனைக்கு உட்படுத்தியுள்ளோம்” என்றார்.

இதேபோன்று சீனப் பயணி ஒருவர் திருவண்ணாமலை தீபமலை குகையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

‘ரூம் கிடைக்கவில்லை .. மலைக் குகையில் ரகசிய வாழ்க்கை!' - வனத்துறைக்கு அதிர்ச்சிகொடுத்த சீனப் பயணி
அடுத்த கட்டுரைக்கு