Published:Updated:

`இதுதான் பிரியாணியா சார்?!' - பழங்குடியினக் குழந்தைகளை நெகிழவைத்த சேலம் தொழிலதிபர்

வேட்டையாடி உணவு உண்டு, வேட்டைச் சமூகமாக இருந்து வந்த பழங்குடிகளுக்கு, இன்றைக்கு அசைவ உணவு என்பது ஓர் அதிசயமாக மாறிப் போயிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இட்லிக்கு அடுத்து தமிழர்களின் ஃபேவரிட் உணவாக மாறிப் போயிருக்கிறது பிரியாணி. திரும்பும் திசையெங்கும் சந்துபொந்துகளில் எல்லாம் பிரியாணிக் கடைகளே நீக்கமற நிறைந்திருக்கின்றன. எந்த ஒரு நிகழ்ச்சி, விருந்து என எதுவாக இருந்தாலும் அது பிரியாணி இல்லாமல் முடிவதில்லை. இப்படி ஒரு சமூகமே பிரியாணியை ரசித்து ருசித்துக் கொண்டாட, பிரியாணியின் வாசமே தெரியாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அப்படியானவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து, சாப்பிட வைத்து அழகு பார்த்தால் எப்படியிருக்கும்.. சேலத்தைச் சேர்ந்த டெக்ஸ்டைல் ஏற்றுமதியாளரான கண்ணன் என்பவர் அப்படிப்பட்ட நெகிழ்ச்சியான ஒரு விஷயத்தைச் செய்திருக்கிறார்.

பழங்குடியின குழந்தைகளுக்காகத் தயாராகும் பிரியாணி
பழங்குடியின குழந்தைகளுக்காகத் தயாராகும் பிரியாணி

ஈரோடு மாவட்டம், பர்கூர் மலையில் உள்ள சுமார் 200 பழங்குடியினக் குழந்தைகளை ஓர் இடத்தில் திரட்டி, அவர்கள் அனைவருக்கும் பிரியாணி விருந்து கொடுத்து அசத்தியிருக்கிறார் கண்ணன்.

பழங்குடியினருக்கான செயல்பாடுகளை முன்னெடுத்து வரும் வி.பி.குணசேகரன், அந்தியூர் அன்பு மற்றும் சுடர் அமைப்பு ஆகியோர் உதவியுடன், பர்கூர் மலையில் உள்ள கொங்காடை, அக்னிபாவி, சுண்டைப்போடு, போரேதொட்டி, பேடரஒலா ஆகிய மலைக்கிராமத்துக்குச் சென்று குழந்தைகளை இந்த விருந்துக்காக அழைத்திருக்கின்றனர். பர்கூர் மலையில் உள்ள தாமரைக்கரை என்னுமிடத்தில் வைத்துதான் அனைத்துக் குழந்தைகளுக்கும் பிரியாணி விருந்து படைக்கப்பட்டிருக்கிறது.

சிக்கன் பிரியாணி, சிக்கன் வறுவல், ஸ்வீட், சாக்லேட் என அத்தனையையும் குழந்தைகளும் விரும்பிச் சாப்பிட்டு மகிழ்ந்தனர். உணவு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு கதைகளைச் சொல்லியும் படிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும் பேசியிருக்கின்றனர்.

விருந்துக்கு வந்த பல பழங்குடியினக் குழந்தைகள் இதுவரை பிரியாணியே சாப்பிட்டதில்லையாம். `இதுதான் பிரியாணியா சார்?’ என்று ஆச்சர்யமாகப் பார்த்ததுடன், `சார், எங்க வீட்டுக்கு இதைக் கொஞ்சம் எடுத்துட்டுப் போகட்டுமா!’ எனக் கேட்டு கலங்கவைத்தனர். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பழங்குடியினக் குழந்தைகள் ஒன்றாக விளையாடி, பேசி மகிழ்ச்சியடைந்தனர்.

சேலம் கண்ணனிடம் பேசினோம். ``இல்லாதவங்களுக்கு ஏதாவது செய்யணும்னு நினைக்கிறவங்க, சிட்டில இருக்கிற எதாவது ஒரு ஹோமுக்குப் போய் அவங்களுக்குப் பிடிச்சதை செய்வாங்க. நானும் அப்படித்தான் ஒருசில உதவிகளை செஞ்சுக்கிட்டு இருந்தேன். உதவிகளைத் தேவையறிந்து செய்வது என்னுடைய இயல்பு. இந்தநிலையில், ஒருநாள் என்னுடைய நண்பர் ஒருவர், `பழங்குடியினக் குழந்தைகள் நிறைய பேர் பிரியாணி சாப்பிட்டதில்லை. அவங்களுக்குச் செஞ்சு கொடுத்தா நல்லா இருக்கும்'னு சொன்னார்.

பிரியாணியுடன் பழங்குடியினக் குழந்தைகள்
பிரியாணியுடன் பழங்குடியினக் குழந்தைகள்

அப்போதான் இந்தக் குழந்தைகளுக்கு பிரியாணி விருந்து கொடுக்கணும்னு தோணுச்சு. பிரியாணியை அந்தக் குழந்தைங்கள் அவ்வளவு அதிசயமாக ரசிச்சு சாப்பிட்டாங்க. அதைப் பார்த்து கலங்கிட்டேன். உலகத்தைப் பத்தி இந்தக் குழந்தைகளுக்கு பெருசா எதுவுமே தெரியாம இருக்காங்களேன்னு வருத்தமாக இருந்துச்சு. கல்வி ஒன்றின் மூலமாகத்தான் அவங்க வாழ்க்கையில் மாற்றம் நிகழும். தொடர்ந்து என்னால் முடிந்த உதவிகளை இந்தப் பழங்குடியினக் குழந்தைகளுக்குச் செய்வேன்” என்றார் நெகிழ்ச்சியுடன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`அட, இதுல பெரிய சதி எல்லாம் இல்லீங்க..!' - `5 பைசா’ பிரியாணி ரகசியம் சொல்லும் தொப்பி வாப்பா

விருந்தில் கலந்துகொண்ட பழங்குடியினருக்கான செயல்பாட்டாளரான அந்தியூர் அன்புவோ, ``அடிப்படைத் தேவைகளைத் தாண்டி, நாம பாதுகாப்பான வாழ்க்கைக்காக ஓடிக்கிட்டு இருக்கோம். ஆனா பழங்குடிகளோட உழைப்பு உணவுக்கே போதுமானதாக இல்லை. இன்னும் ஒரு நல்ல உணவுக்காக ஏங்கக் கூடிய சூழல்லதான் இருக்காங்க.

பழங்குடியினக் குழந்தைகளுடன் கலந்துரையாடல்
பழங்குடியினக் குழந்தைகளுடன் கலந்துரையாடல்

வேட்டைச் சமூகமாக இருந்த தொன்மையான மக்கள் இந்த பழங்குடிகள். ஆனால், இன்றைக்கு அசைவ உணவு என்பது இவர்களுக்கு ஓர் அதிசயமாக மாறிப் போயிருக்கிறது. அசைவ உணவு சாப்பிட்டுட்டு இப்ப அது இல்லாம அனீமியா போன்ற சத்துக் குறைபாடுகளால் நிறைய பழங்குடிகள் பாதிக்கப்பட்டுருக்காங்க. நிறைய தனியார் அமைப்புகள் இப்படியான உதவிகளைச் செய்தாலும், அரசு இம்மக்களுக்கான தரமான, உத்தரவாதமான வாழ்க்கையைக் கொடுக்கணும்” என்றார் உறுதியான குரலில்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு