Published:Updated:

`கலெக்டர் சொல்கிறார்;ஆனா அரசு மருத்துவமனைக்குப் போக பயமா இருக்கு'-மகனைக் காக்க போராடும் சேலம் தம்பதி

``கை, கால் ஆட்டுவதில்லை. மூக்கு வழியாகத் திரவ உணவுகள் கொடுக்கிறோம்.''

குழந்தை ஹரிகுகன்
குழந்தை ஹரிகுகன் ( எம். விஜயகுமார் )

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் உள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் நோயாளிகளைக் கடமைக்குக்கூடக் கவனிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ``என் குழந்தையைக் காய்ச்சலோடு சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தேன். கவனிக்காமல் அனுப்பியதால் கோமா நிலைக்குச் சென்றுவிட்டான். மீண்டும் சேலம் அரசு மருத்துவமனைக்கு கலெக்டர் போகச் சொல்கிறார். அங்கு போகவே பயமா இருக்கு'' என்று கண் கலங்கினர் சிவதாபுரத்தைச் சேர்ந்த மணிவண்ணன் குடும்பத்தினர்.

சேலம் அரசு மருத்துவமனை
சேலம் அரசு மருத்துவமனை

இதுபற்றி மணிவண்ணனிடம் பேசினோம்.``நாங்க சிவதாபுரத்திலிருந்து வந்திருக்கிறோம். என் மனைவி பேரு மைதிலி. எங்களுக்கு 4 1/2 வயதில் ஹரிகுகன், 2 வயதில் பிரவின் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஹரிகுகன் சிவதாபுரத்தில் உள்ள எஸ்.பி.வி பள்ளியில் யு.கே.ஜி படிக்கிறான். அவனுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 8-ம் தேதி 110 டிகிரி காய்ச்சல் இருந்தது.

உடனே, சேலம் அரசு மருத்துவமனைக்கு அவனை கூட்டிப்போனோம். சாதாரண காய்ச்சல் சரியாடும். இதற்கெல்லாம் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுக்க முடியாது என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள். நேராகத் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுபோனோம். அங்கு 110 டிகிரி காய்ச்சல் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அந்த மருத்துவமனையில் இரண்டு நாள்கள் தங்கியிருந்து மருத்துவம் பார்த்தோம். காய்ச்சல் சரியாகிவிட்டது.

குழந்தையும் நன்றாக இருந்ததால் வீட்டுக்கு அழைத்து வந்துட்டோம். ரெண்டு நாள் கழித்து வலிப்பு வந்தது. உடனே சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தோம். ஊசி போட்டதும் வலிப்பு நின்றுவிட்டது. உடலை முழு ஸ்கேன் செய்ய வேண்டும். முதுகுத் தண்டுவடத்தில் ஊசிபோட்டு பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு எதுவும் செய்யவில்லை. 4 நாள்களாகச் சிகிச்சை கொடுக்காமல் தொடர்ந்து மயக்க ஊசி போட்டதால் என் குழந்தை கோமா நிலைக்குச் சென்று பல்ஸ் குறைந்தது. அங்கிருக்கும் நோயாளிகளை கடமைக்குக்கூட கவனிப்பதில்லை.

காய்ச்சல் பாதிப்புடன் குவியும் நோயாளிகள்! - திணறும் நாகை அரசு மருத்துவமனை
மணிவண்ணன்
மணிவண்ணன்

எங்க ஊர்க்காரர்கள் சேர்ந்து பணம் கொடுத்து உதவியால் பெங்களூரு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அவுங்க பரிசோதனை செய்ததில் மூளைக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. அவர்கள் சிகிச்சை அளித்ததால் பல்ஸ் நார்மல் ஆனது. ஆனால், தொடர்ந்து கோமா நிலையிலேயே இருந்தான். அங்கு ஒரு லட்சத்துக்கு மேல் செலவாகிவிட்டது. தொடர்ந்து அங்கு மருத்துவம் பார்க்கும் அளவுக்கு வசதி இல்லாததால் வந்து விட்டோம்.

குழந்தை விழித்துப் பார்க்கிறான், கொட்டாவி விடுகிறான். ஆனால், பேசுவதில்லை. கை, கால் ஆட்டுவதில்லை. மூக்கு வழியாகத் திரவ உணவுகள் கொடுக்கிறோம். அதனால் உதவி கேட்டு சேலம் கலெக்டரை பார்க்க வந்தோம். கலெக்டர் மீண்டும் எங்களைச் சேலம் அரசு மருத்துவமனைக்குப் போகச் சொல்லுகிறார். அங்கு போவதற்கே பயமாக இருக்கு'' என்றார்.