Published:Updated:

``சொத்துக்காக மகனே கரன்ட் ஷாக் கொடுத்து கொல்லப் பார்க்கிறார்!" - சேலம் முதியவர் கண்ணீர்

ராமசாமி
ராமசாமி

சேலத்தைச் சேர்ந்த முதியவர், தன் மகனிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

சேலம் மாவட்டம், காமக்காபாளையம் அருகில் உள்ள ஆரத்தி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. 74 வயதான இவர் ஒரு விவசாயி. இவருக்குத் திருமணமான நிலையில் மூன்று மகள்களும் பச்சமுத்து என்ற ஒரு மகனும் உள்ளனர். பச்சமுத்து சேலம் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.

சேலம் ஆட்சியர் அலுவலகம்
சேலம் ஆட்சியர் அலுவலகம்

இந்நிலையில் ராமசாமியிடம் இருக்கும் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து முழுவதையும் தன் பெயருக்கு மாற்றி எழுதித் தரும்படி மகன் பச்சமுத்து, முதியவருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தன் மகனிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு வேண்டும் என்றும், அவரிடம் உள்ள தன் சொத்து பத்திரங்களை மீட்டுத் தர வேண்டும் என்றும் கடந்த இரண்டு வருடமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் நிலையம் என அனைத்து இடங்களுக்கும் அலைந்து வருகிறார் முதியவர் ராமசாமி.

இன்று தன் மகன் தொடர்பாக சேலம் கலெக்டரைச் சந்தித்து மனு அளித்துள்ளார் முதியவர். அந்த மனுவில், ``என் மகனின் வேலை, திருமணம், அவனுக்குக் குழந்தை பிறந்தது என கடந்த ஐந்து வருடங்களாக என் மகனுக்கு நான்தான் செலவு செய்து வந்தேன். மேலும் அவர் சீட்டுக்காக ரூ.1,20,000 கட்டி ஏமாந்தார். அதையும் நானே சரி செய்தேன். இவை அனைத்தையும் வெளியில் கடன் வாங்கியே செய்து வந்தேன். தற்போது என் மகனுக்கு வேலை கிடைத்து, மனைவியுடன் நல்லபடியாக வாழ்ந்து வருகிறார்.

அவருக்காக வாங்கிய கடனை திருப்பிக் கேட்டால், என் மீது வரதட்சணைப் புகார் கொடுத்து விடுவேன் என மருமகள் மிரட்டுகிறாள். மகனோ, என்னையும் என் மனைவியையும் தீ வைத்துக் கொளுத்தி விடுவதாக மிரட்டுகிறார். ஏற்கெனவே 2005-ம் ஆண்டு இதேபோல் எங்கள் இருவருக்கும் தீ வைக்க முயன்றார். ஆனால், நாங்கள் தப்பிவிட்டோம். மீண்டும் அதே போன்று மிரட்டுகிறார்.

புகார் மனு
புகார் மனு

எனக்கும், என் மனைவியின் உயிருக்கும் எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் அப்படி நாங்கள் உயிரிழக்க நேர்ந்தால் அதற்கு மகனும், மருமகளும் மட்டுமே காரணமாக இருப்பார்கள். எனவே, எங்கள் உயிருக்குப் பாதுகாப்பு தரவேண்டும். மேலும் இந்த வயதான காலத்தில் நான் கடனுடன் மிகவும் சிரமப்படுகிறேன். என் சொத்துகளை விற்று கடனை அடைக்கவும் விடவில்லை அதையும் எடுத்துச் சென்றுவிட்டனர். அதனால் பச்சமுத்துவையும் அவரது மனைவியையும் அழைத்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

`இந்தக் குழந்தையால் எங்களுக்கு அவமானம்!’ -மகளுக்கே தெரியாமல் 3 லட்ச ரூபாய்க்கு விற்ற சேலம் பெற்றோர்

இதற்கிடையில் நம்மிடம் பேசிய முதியவர் ராமசாமி, ``எனக்கு ஐந்து மற்றும் இரண்டரை ஏக்கர் என 2 நிலங்கள் உள்ளன. அதைத் தன் பெயருக்கு எழுதிவைக்கும் படி தினமும் இரவு மகன் என்னை அடித்துத் துன்புறுத்துகிறான். ஒரு நிலத்தில் என் மகன் இருக்க மற்றொரு நிலத்தில் நான் குடிசை போட்டுப் பிழைத்து வருகிறேன். என்னிடமிருந்து சொத்துகளைப் பறிக்க வேண்டும் என்பதற்காகப் பல கொடுமைகளைச் செய்கிறான். என் வீட்டுக்கு அருகில் உள்ள மின் கம்பத்திலிருந்து ஒயர் மூலம் இணைப்பு கொடுத்து வீட்டில் கரன்ட் ஷாக் அடிக்கும் படி செய்துவைத்துள்ளான். உணவில் ஏதோ மாத்திரை கலந்து கொடுக்கிறான்.

தந்தை ராமசாமி
தந்தை ராமசாமி

தினமும் வீட்டுக்கு வந்து தொல்லை செய்கிறார்கள், என் குடிசையிலிருந்த உணவு, பொருள்கள், துணி போன்ற அனைத்தையும் எடுத்துச் சென்றுவிட்டனர். நான் அவனுக்குப் பயந்து ஒரு வாரமாகத் தெரு தெருவாகச் சுற்றித் திரிந்து வருகிறேன். என் சொத்துகளை விற்று கடனை அடைக்கலாம் என்றால் அதற்கும் விடவில்லை, சொத்தை வாங்கவும் யாரும் தயாராக இல்லை. கடன் அளித்தவர்கள் ஒரு புறம் என் மகன் மறு புறம் என என்னைக் கொடுமை செய்கிறார்கள்” எனக் கண்ணீருடன் பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு