Published:Updated:

`பிச்சையெடுத்து பேரக் குழந்தைக்கு மருத்துவம் பார்க்கிறோம்!' - கலங்கிய சேலம் வயதான தம்பதி

குடும்பம்
குடும்பம் ( எம்.விஜயகுமார் )

என் கணவர் கூலி வேலை செய்து குழந்தைக்கு வைத்தியம் பார்த்தோம். தற்போது அவருக்கும் காது கேட்பதில்லை. யாரும் வேலை கொடுப்பதில்லை. அதனால், பிச்சை எடுத்து குழந்தைக்கு மருத்துவச் செலவு செய்கிறோம்.

தண்டுவடம் உடைந்து நிற்க முடியாத நிலையிலுள்ள தன்னுடைய 5 வயது பேரக்குழந்தையை 60 வயதைக் கடந்த தாத்தா, பாட்டி தூக்கி வந்து கலெக்டர் அலுவலகப் படியேற்றி உதவிக் கேட்டிருப்பது காண்போரைக் கண் கலங்க வைத்துள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் பொன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ், சரஸ்வதி என்ற வயதான தம்பதியர். இவர்களின் கடைசி மகன் லோகநாதனும் அவருடைய மனைவி பிரியாவும் விபத்தில் இறந்துவிட்டார்கள். விபத்தில் தூக்கி வீசப்பட்ட பேரக் குழந்தை, முதுகுத் தண்டுவடம் உடைந்து படுத்த படுக்கையாக இருக்கிறான். அவனது மருத்துவச் செலவுக்கும் படிப்பு செலவுக்கும் உதவி கேட்டு சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு நடராஜ் - சரஸ்வதி தம்பதியர் வந்திருந்தனர்.

சரஸ்வதி
சரஸ்வதி
எம்.விஜயகுமார்

இதுபற்றி அந்தச் சிறுவனின் பாட்டி,``என் பேரு சரஸ்வதி எனக்கு 60 வயதாகிறது. என் கணவர் பெயர் நடராஜ். அவருக்கு 65 வயதாகிறது. எங்களுக்கு ரெண்டு பசங்க. ஒரு பெண். எல்லோருக்கும் திருமணம் ஆயிடுச்சு. என்னுடைய சின்ன பையன் லோகநாதன். பெருந்துறையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்தான். மருமகள் பிரியா. ரெண்டு பேரும் நல்லா இருந்தாங்க. அவுங்களுக்கு கதிஷன் என்ற மகன் பிறந்தான்.

அவனுக்கு இரண்டரை வயசு இருக்கும்போது என் மகன் லோகநாதன், மருமகள் பிரியா, பேரன் கதிஷன் ஆகியோர் டூ விலரில் சத்தியமங்கலம் சென்றுகொண்டிருந்தபோது கார் மோதி விபத்து ஏற்பட்டுச்சு. இதில், லோகநாதனும் பிரியாவும் சம்பவ இடத்திலேயே இறந்துட்டாங்க. பேரன் கதிஷனுக்கு முதுகுத் தண்டுவடம் உடைந்து படுத்த படுக்கையாகிவிட்டான். அவனைத் தூக்கி வந்து நாங்க போகாத ஊரு இல்லை... பார்க்காத வைத்தியம் இல்லை.

குழந்தை கதிஷனுடன் நடராஜ் - சரஸ்வதி தம்பதியர்
குழந்தை கதிஷனுடன் நடராஜ் - சரஸ்வதி தம்பதியர்

உடைந்த முதுகுத் தண்டுவடத்தை சரி செய்ய முடியவில்லை. தற்போது கதிஷனுக்கு 5 வயதாகிறது. இரண்டரை வருஷமா நாங்க வளர்த்துகிட்டு வருகிறோம். அழகா மணியாட்டம் பேசுவான். அவனை வேறு யாருக்கும் கொடுக்கவும் மனசு வரல. எங்களுக்கு யாருடைய உதவியும் இல்லை. என் பெரிய மகன் மதுவுக்கு அடிமையாகிவிட்டான். அவனுக்குத் திருமணம் ஆகி 17 வருடமாகியும் குழந்தைகள் இல்லை. எங்க வீட்டுப் பக்கமே அவன் வருவதில்லை.

என் கணவர் கூலி வேலை செய்து குழந்தைக்கு வைத்தியம் பார்த்தோம். தற்போது அவருக்கும் காது கேட்பதில்லை. யாரும் வேலை கொடுப்பதில்லை. அதனால், பிச்சை எடுத்து குழந்தைக்கு மருத்துவச் செலவு செய்கிறோம். `கலெக்டர் ஐயாவைச் சந்தித்தால், மருத்துவச் செலவுக்கும் படிப்பு செலவுக்கும் உதவி செய்வாங்க'னு சொன்னதால் இங்கு வந்தேன்'' என்றார் வேதனையுடன்.

அடுத்த கட்டுரைக்கு