Published:Updated:

` ஓட்டல் இருந்தா 10 எச்ச இலையாவது மிஞ்சும்..' - கொரோனா கெடுபிடியால் கலங்கும் ஆதரவற்றோர்

தங்கம்மாள்
தங்கம்மாள்

காவல்துறையினர் உணவுகளைக் கொண்டு போகக் கூட அனுமதிக்காமல் தடுக்கிறார்கள். இதனால் ஆதரவற்றவர்களுக்கு உணவு கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

``ஆதரவற்றவர்களுக்கு உணவு கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு உணவு கொடுக்காமல் இருந்தால் பசியால் இறந்து விடுவார்கள். எனவே, உணவு வழங்குவற்கு மாவட்ட ஆட்சியரோ அல்லது காவல்துறை ஆணையாளரோ எங்களுக்கு அனுமதி அட்டை வழங்க வேண்டும்'' எனக் கோரிக்கை வைக்கின்றனர் தன்னார்வலர்கள்.

ஆதரவற்றோர்
ஆதரவற்றோர்

ஊரடங்கு உத்தரவால் சேலமே முடங்கிவிட்டது. மக்கள் நடமாட்டம் இல்லாமல் பார்க்கும் இடமெல்லாம் வெறிச்சோடிக் கிடக்கிறது. ஆனால் சாமானிய மக்களை நம்பி வாழும் சாலையோரவாசிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்ற முதியவர்கள் ஆகியோர் மட்டுமே ஆங்காங்கே தென்படுகிறார்கள். அவர்களையும் காவல்துறை விரட்டுவதால் செய்வதறியாது திகைக்கின்றனர். அவர்களுக்குத் தன்னார்வலர்கள் உணவு கொடுக்கச் செல்வதற்கும் பல தடைகள் இருப்பதால் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

சேலம் ஐந்து ரோடு கோகுலம் மருத்துவமனை மதிலோரமாக அமர்ந்திருந்த மூதாட்டியிடம் பேசினோம், ''என் பேரு தங்கம்மாள். எங்க வூட்டுக்காரர் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே இறந்துட்டாரு. எனக்கு மூணு பசங்க, நாலு பொண்ணுங்க. எல்லோருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டேன். இங்கிருக்கிற மெய்யனூர் தான் எனக்குச் சொந்த ஊரு.

தங்கம்மாள்
தங்கம்மாள்

ஏழு பிள்ளைகளை பெத்து ஒருத்தர்கூட என்னைப் பார்த்துக்கல. நான் அநாதையா ரெண்டு வருஷமா இங்க இருக்கிறேன். மகராசன் யாராவது வந்து டீ, பண்ணு, பட்டசோறு வாங்கிக் கொடுப்பாங்க. அதைச் சாப்பிட்டு உயிர் வாழ்ந்துட்டு இருக்கேன். சோறு கிடைக்கலைன்னாலும் பசியோட படுத்துப்பேன். என்னன்னு தெரியல காலையிலிருந்து யாரையும் காணோம். போலீஸ்காரங்க வந்து இங்க இருக்கக் கூடாது, எழுந்திருச்சு வூட்டுக்கு போகச் சொல்லி அடிச்சி மிரட்டினாங்க.

அவுங்களுக்கு பயந்துட்டு எழுந்து தடுமாறி கீழே விழுந்து மண்டையை உடைச்சுகிட்டேன். ரத்தம் கொட்டியதால யாரோ ரெண்டு பேரு வந்து ஊசி போட்டுட்டு பட்டசோறும் தண்ணியும் கொடுத்துட்டு போனாங்க'' என்றார் கலங்கிய கண்களுடன்.

திருப்பதி சரோஜா
திருப்பதி சரோஜா

சேலம் ஜங்ஷன் பகுதியில் இருந்த ஒரு தம்பதியிடம் விசாரித்த போது, ''என்னோட பேரு திருப்பதி. என் மனைவி பேரு சரோஜா. எங்க சொந்த ஊரு ஜோலார்பேட்டை. நாங்க ரெண்டு பேருமே அநாதை. என் மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர். எங்களுக்கு வீடு வாசலோ, குழந்தை குட்டியோ எதுவும் இல்லை. நாடோடியாக வாழ்ந்துட்டுஇருக்கிறோம். யாராவது இரக்கப்பட்டுக் கொடுப்பதையும், ஹோட்டல் கடையில் கிடக்கிற எச்ச இலை பொறுக்கியும் சாப்பிடுவோம். ஹோட்டலில் பத்துப் பேரு சாப்பிட்டால் எச்ச இலையாவது கிடைக்கும். இப்ப எல்லா கடையும் சாத்தியதால் சாப்பாட்டுக்கு எதுவும் கிடைக்கல'' என்றார்.

சாலையோர வாசிகளுக்கு உணவு வழங்கிக் கொண்டிருந்த சபரிமுத்து, ''நான் யாருடைய உதவியும் இல்லாமல் எல்லா நாட்களிலும் நாலு பேருக்கு உணவு கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலையில் ஆதரவற்றவர்கள் பெரும் அவதிக்குள்ளாவார்கள் என்பதை உணர்ந்து 50 பேருக்கு வீட்டில் உணவு சமைத்து பொட்டணம் கட்டி நானும் என்னுடைய நண்பர் விஜய்மணியும் கொடுக்க வந்தோம்.

சபரிமுத்து
சபரிமுத்து

ஆனால் காவல்துறையினர் உணவுகளைக் கொண்டு போகக் கூட அனுமதிக்காமல் தடுக்கிறார்கள். இதனால் ஆதரவற்றவர்களுக்கு உணவு கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு உணவு கொடுக்காமல் இருந்தால் பசியால் இறந்து விடுவார்கள். அதனால் தன்னார்வலர்கள் எந்த ஒரு தடையும் இல்லாமல் சென்று உணவு வழங்குவதற்கு எங்களுக்கு அனுமதி அட்டை வழங்க வேண்டும்'' என்றார்.

`சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு சூடான உணவு தயாரித்து வழங்கும் வகையில் பொது சமையல் கூடம் அமைக்கப்படும்' எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு