Published:Updated:

`ஒரு மணிநேரம் பெய்த கனமழைக்கே வீடுகளுக்குள் தண்ணீர்!' - கொதிக்கும் சேலம் மக்கள்

சேலத்தில் மழைநீர் வெளியேற முடியாமல் வீட்டுக்குள் புகுந்துள்ளது.

சேலம் மாநகராட்சி
சேலம் மாநகராட்சி

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. சேலத்திலும் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் மழைநீர் வெளியேற முடியாமல் தண்ணீர் தேங்கி இருப்பதோடு, பல வீடுகளுக்குள் புகுந்திருக்கிறது.

தண்ணீர்
தண்ணீர்

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சத்திரம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டி, அடிவாரம், வங்கி ஊழியர்கள் காலனி எனப் பல பகுதிகளில் தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. மேலும், மக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் தண்ணீரில் தத்தளிக்கிறார்கள். மாநகராட்சி முன்னெச்சரிக்கைப் பணிகள் மேற்கொள்ளாததே இதற்குக் காரணம் என்று மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

வங்கி ஊழியர்கள் காலனியில் உள்ள வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்டவரும், வழக்கறிஞருமான தமயந்தி, ``நேற்று இரவு ஒரு மணி நேரம் பெய்த கனமழைக்கே தாக்குப்பிடிக்க முடியவில்லை. நான் வசிக்கும் வங்கி ஊழியர்கள் காலனியில் மழைநீர் வெளியேற முடியாமல் குளம் போலத் தேங்கியதோடு என் வீட்டுக்குள் முழங்கால் அளவு தண்ணீர் புகுந்துவிட்டது. வீட்டைவிட்டு வெளியே வர முடியவில்லை. இரவு முழுவதும் தூங்காமல் இருந்தோம்.

தமயந்தி
தமயந்தி

ஏற்கெனவே பத்து நாள்களுக்கு முன்பு இதேபோல தண்ணீர் தேங்கியது. சேலம் மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டேன். அவர்கள் வந்து பார்த்துவிட்டு `தண்ணீரை வெளியேற்ற முடியாது. கொசு, புழுக்கள் வராமல் இருக்க மீன்கள் கொண்டுவந்து விடுகிறோம்' என்று பொறுப்பில்லாமல் பதிலளித்தார்கள். `மாநகராட்சி, மீன் கொண்டுவந்து விடுவதற்கு நான் என்ன குளமா கட்டி வைத்திருக்கிறேன்' என்று கூறி அனுப்பிவிட்டேன்.

எங்க பகுதியில் மட்டுமல்ல சேலம் மாநகராட்சியில் பல பகுதிகளில் மழைநீர் வெளியேற முடியாமல் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் சாக்கடை வசதி இல்லை. சாக்கடை வசதி இருந்தால், அதைத் தூர் வாருவது இல்லை. மழைநீர் வெளியேறும் வாய்க்கால்கள் பற்றி கண்டுகொள்வதே இல்லை. மாநகராட்சி முழுவதும் பல கோடி செலவு செய்து பாதாளச் சாக்கடை திட்டம் கொண்டுவந்தார்கள். பல ஆண்டுகள் அந்தப் பணி நடைபெற்றாலும் இன்னும் கனெக்‌ஷன் கொடுக்கவில்லை. சேலம் மாநகராட்சி மந்த நிலையில் செயல்படுகிறது.

மழை நீர்
மழை நீர்

சேலம் முதல்வரின் சொந்த மாநகராட்சி என்பதால் பல கோடி நிதி ஒதுக்கிப் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் எந்த ஒரு பயனும் இல்லை. மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி இருப்பதுதான் ஸ்மார்ட் சிட்டி, டிஜிட்டல் மாநகராட்சி லட்சணமா'' என்றார்.

தனிநபர் கழிவறை கட்ட நிதி வழங்குவதில் முறைகேடு? - சர்ச்சையில் சேலம் மாநகராட்சி

இதுபற்றி சேலம் மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ``தமிழ்நாடு முழுவதும் மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கக் கூடிய 4,000 இடங்களைக் குறிப்பிட்டு அரசு முன்னெச்சரிக்கை செய்திருந்தது. அதில் சேலம் மாநகராட்சியில் 13 இடங்கள் குறிப்பிட்டிருந்தார்கள். அதையடுத்து, முன்கூடியே அப்பகுதிகளுக்குச் சென்று மக்களைக் கண்காணித்து மின் மோட்டார்கள் கொண்டுசென்று தயாராக இருந்தோம். ஏற்காடு மலையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டுள்ளதால் நேற்று இரவு 11:00 மணியிலிருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றி வருகிறோம். மற்ற பகுதிகளில் மழைநீர் தேங்காமல் கால்வாய்களில் செல்கிறது. போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி செயல்பட்டு வருகிறது'' என்றார்கள்.