Published:Updated:

`விவசாய நிலத்துக்கு 6 அடி சுற்றுச்சுவர்'- சேலம் பட்டியலின மக்களை கலங்கடிக்கும் தீண்டாமை?

ஊர் மக்கள்
ஊர் மக்கள் ( எம். விஜயகுமார் )

``அந்தச் சுவரை இடிக்க வேண்டும் இல்லையென்றால் அந்தச் சுவரால் எங்களுக்கும் எங்கள் குழந்தைகளுக்கும் எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம்.''

``சேலம் கந்தம்பட்டி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் இன்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து எங்க ஊரில் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் தீண்டாமைச் சுவர் கட்டியிருக்கிறார். அந்தச் சுவரை இடிக்க வேண்டும் இல்லையென்றால் அந்தச் சுவரால் எங்களுக்கும் எங்கள் குழந்தைகளுக்கும் எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம்'' என்றார்கள்.

சுவர்
சுவர்
எம். விஜயகுமார்

இதுதொடர்பாக சேலம் கந்தம்பட்டி எம்.ஜி.ஆர் நகரிலிருந்து வந்திருந்த சுப்ரமணி, ``கந்தம்பட்டி எம்.ஜி.ஆர் நகரில் 500-க்கும் மேற்பட்ட அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். எங்க ஊரை ஒட்டியே மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் என்பவரின் மகன்கள் வெங்கடாசலத்துக்கும், அவருடைய அண்ணன் ராமருக்கும் விவசாய நிலங்கள் இருக்கின்றன.

இந்த விவசாய நிலத்தைச் சுற்றி 6 அடி உயரத்துக்குச் சுற்றுச் சுவர் கட்டியிருக்கிறார்கள். மேற்கொண்டும் தற்போது சுற்றுச் சுவர் கட்டிவருகிறார்கள். சர்வே செய்யாமல் நடைபாதையை ஆக்கிரமித்துக் கட்டுகிறார்கள். எங்களுக்குச் சொந்தமான சுடுகாட்டில் 1 1/2 ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள். வெங்கடாசலத்திடமும், இராமனிடமும் கேட்டால் ``எங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெருக்கம். நீங்க எங்க போய் சொன்னாலும் உங்களால் ஒண்ணும் பண்ண முடியாது" என்று கூறி சாதிப் பெயரை சொல்லித் திட்டுகிறார்கள்.

சுப்ரமணி
சுப்ரமணி
எம். விஜயகுமார்

இவர்கள் கட்டியிருக்கும் தீண்டாமைச் சுவரால் எங்களுக்கும் எங்க குழந்தைகளுக்கும் எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும். அதனால் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தீண்டாமைச் சுவரை இடித்து தரைமட்டம் ஆக்க வேண்டும். அவர்களுடைய நிலத்தை சர்வே செய்து அக்கிரமித்து வைத்துள்ள எங்களுடைய நிலத்தை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்'' என்றார்.

அருகில் இருந்த பொன்னம்மாள், ``இந்த உயரமான சுவரை ஒட்டியே குடியிருப்பு வீடுகள் இருக்கிறது. குழந்தைகள் இந்தச் சுவரின் அருகே விளையாடிக்கொண்டிருப்பார்கள். நாங்கள் ஒரு நல்லது, கெட்டது என்றால் இந்தச் சுவரின் ஓரமாகச் செல்ல வேண்டும். கோவையில் நடந்ததைப்போல இந்தச் சுவர் இடிந்து விழுந்தால் பல உயிர்ப் பலியாகும். அதனால் இந்தச் சுவரை கலெக்டர் ஐயா இடிக்க வேண்டும்'' என்றார்.

பொன்னம்மாள்
பொன்னம்மாள்
எம். விஜயகுமார்

இதுபற்றி வெங்கடாசலத்திடம் கேட்டதற்கு, ``நான் 6 அடி உயரத்துக்கு சுற்றுச் சுவர் கட்டவில்லை. விவசாய நிலத்துக்குள் மது அருந்துகிறார்கள். பாட்டிலும் காட்டுள்ளேயே போட்டு விடுகிறார்கள். இதனால் விவசாயம் செய்ய முடியவில்லை. ஏற்கெனவே என்னுடைய சொந்த பட்டா நிலத்திலிருந்து 2 அடி அந்த மக்களுக்கு விட்டேன். தற்போது மேலும் 2 அடி நிலம் கேட்டார்கள் விட முடியாது என்று கூறியதால் தீண்டாமைச் சுவர் என்று புதுக் கதை விடுகிறார்கள். நான் யாரையும் மிரட்டவில்லை'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு