Published:Updated:

`10 ரூபாய்க்கு 4 இட்லி, சாம்பார்!’ - சேலத்தில் பிரபலமடைந்த மோடி இட்லி

சேலம் மாநகராட்சியின் பல பகுதிகளில் இந்த மோடி இட்லி விற்கப்படுகிறது. நான்கு இட்லிகள், 250 மி.லி சாம்பாரோடு வெறும் 10 ரூபாய்க்கு வழங்கப்படுகின்றன.

குஷ்பு இட்லியைப்போல சேலத்தில் தற்போது மோடி இட்லி பிரபலமடையத் தொடங்கியிருக்கிறது. சேலம் மாநகராட்சியின் பல பகுதிகளில் இந்த மோடி இட்லி விற்கப்படுகிறது. நான்கு இட்லிகள், 250 மில்லி சாம்பாரோடு வெறும் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

``பழைமை, புதுமையை இணைத்து, இந்தியாவை உருவாக்க எண்ணினார் பாரதி!” - பிரதமர் மோடி

இந்த மோடி இட்லியைத் தயாரித்து வழங்கும் நிறுவனரும், பா.ஜ.க பிரசாரப் பிரிவின் மாநிலத் துணைத் தலைவருமான மஹேஷிடம் பேசினோம். ``எங்கப்பா பேராசிரியர் ஶ்ரீதர். ஏழை, எளிய மக்கள் மீது அன்புகொண்டு அவர்களுக்காகத் தொண்டாற்றினார். அதனால், அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரிடம் `சிறந்த சமூக சேவகர்’ என்ற பட்டத்தைப் பெற்றார். அப்பாவின் சிந்தனை எனக்குள்ளும் சிறு வயதிலிருந்தே இருந்தது. ஏழை, எளிய மக்களுக்குப் பல உதவிகள் செய்துவந்தேன். கொரோனா காலத்தில் அது மேலோங்கியது.

கொரோனா தொடங்கியதிலிருந்து இன்று வரை ஒரு நாளைக்கு 7,500 பேர் வீதம் 3 1/2 லட்சம் பேருக்கு உணவுகள் வழங்கியிருக்கிறேன். 3 கோடி ரூபாய் மதிப்பில் துப்புரவுப் பணியாளர்கள், தெருவோர வியாபாரிகள், அடித்தட்டு மக்கள் என ஆயிரக்கணக்கான பேருக்கு இரண்டு மாதங்களுக்குத் தேவையான உணவு, மளிகைப் பொருள்கள் வழங்கியதோடு பல உதவிகளையும் செய்திருக்கிறேன். என் சமூக வலைதளத்தை மோடி, அமித் ஷா உட்பட 35,000 பேர் பின்பற்றுகிறார்கள். என்னுடைய நிதியோடு, அவர்கள் அளித்துள்ள நிதியிலிருந்தும் இந்த உதவிகளைச் செய்கிறேன்.

கொரோனா வைரஸ் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதோடு பொருளாதாரத்தையே சிதைத்துவிட்டது. இதனால் பலர் வேலை இழந்திருக்கிறார்கள். பலருக்குச் பாதியாகச் சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. அவர்களுடைய துன்பங்களில் நானும் பங்குகொண்டு, என்னால் அவர்களுக்குச் சிறு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மோடி இட்லியை அறிமுகம் செய்திருக்கிறேன்.

மஹேஷ்
மஹேஷ்

உலகத்தரத்திலான இயந்திரங்களைக்கொண்டு அரிசி அளவிடுவது, கழுவுவது, அரைப்பது, மாவைக் கலப்பது என அனைத்துப் பணிகளையும் இயந்திரங்கள்கொண்ட அதி நவீன பொதுச் சமையலறையை உருவாக்கியிருக்கிறோம். அங்கிருந்து சேலம் மாநகராட்சியிலுள்ள சேலம் ராஜாராம் நகர், அவ்வை மார்க்கெட், சாமிநாதபுரம் மாரியம்மன் கோயில், செவ்வாய்ப்பேட்டையிலுள்ள சண்முகா பஸ் ஸ்டாப், மீனாட்சி அம்மன் கோயில், போலீஸ் குடியிருப்பு, நாவலர் நெடுஞ்சாலை நகர், வீனஸ் பில்டிங், சேலம் அரசு மருத்துவமனை, சேலம் ராஜகணபதி கோயில் அருகில் என முதற்கட்டமாக 10 இடங்களில் காலை ஒருவேளை மட்டும் இட்லி வழங்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"தற்காலத் தேர்தலும் குடவோலை முறையும் ஒன்றா?"- மோடி சுட்டிய உத்திரமேரூர் கல்வெட்டுகள் சொல்வது என்ன?

அடுத்த வாரத்தில் 30 இடங்களுக்கு விரிவாக்கம் செய்யவிருக்கிறோம். ஜனவரி மாதத்திலிருந்து காலை, மாலை இரண்டு வேளையும் விற்பனை செய்யப்படும். இந்த மோடி இட்லி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது'' என்றார்.

சேவை
சேவை

மோடி இட்லி வாங்குவதற்கு வரிசையில் காத்திருந்த செல்வம், ``உண்மையிலேயே 10 ரூபாய்க்கு இப்படி இட்லியும் சாம்பாரும் எங்கேயும் கிடைக்காது. இட்லியும் சாம்பாரும் சுவையாகவும், தரமாகவும் இருக்கு. இனி காலையில் வீட்டில் சாப்பாடு செய்ய வேண்டியதில்லை. இங்கேயே வாங்கிச் சாப்பிடலாம். காலையில் சமைப்பதற்குத் தேவையான அரிசி, காய்கறிச் செலவு மீதியாகும். இந்த இட்லியை வழங்குபவர் நல்லா இருக்கணும்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு