Published:Updated:

`விபரீதம் புரியவில்லை; ஜாலியாகச் சுற்றுகிறார்கள்' -சேலம் பெட்ரோல் பங்க் உரிமையாளரின் வேதனை #corona

பெட்ரோல் பங்க்
பெட்ரோல் பங்க்

இளைஞர்கள் கூட்டம் கூட்டமாகப் பங்கிற்கு வந்து பெட்ரோல் அடித்துக் கொண்டு ஊர் ஊருக்குப் போய் கிரிக்கெட் விளையாடப் போகிறார்கள்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின்னும் கொரோனாவின் கொடூரத்தைத் தமிழக மக்கள் உணராமல் டூவீலரில் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு ஊர் சுற்றிக் கொண்டிருப்பதாக வேதனைப்படுகிறார் சேலம், தாரமங்கலத்தைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்.

தூய்மைப் பணி
தூய்மைப் பணி

எஸ்ஸார் பெட்ரோல் பங்க் உரிமையாளர் முருகேசனிடம் பேசினோம். ''கொரோனா வைரஸிடமிருந்து மக்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் கடந்த 24-ம் தேதி முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 'அனைவரும் வீட்டுக்குள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டிருக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியே வந்து கொரோனாவை வீட்டுக்குள் கொண்டு போய் விட்டு விடாதீர்கள்'' என்று எச்சரிக்கையும் செய்தார் பிரதமர்.

இத்தாலியில் கொரோனா வைரஸ் சமூகப் பரவலாகி அவர்கள் படும் துயரங்களைப் பார்க்கிறோம். அந்த நிலை இந்தியாவில் வந்து விடக்கூடாது என்று இந்த ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. ஆனால் ஊரடங்கு உத்தரவை விடுமுறை தினமாக நினைக்கிறார்கள். மக்கள் ஜோடி ஜோடியாக ஆடம்பர ஆடைகளை அணிந்து கொண்டு டூவீலரில் பெட்ரோல் நிரப்பி வெளியில் ஜாலியாகப் போவதைப் பார்க்கும்போது அவசரத் தேவைக்குப் போவதைப் போல தெரியவில்லை.

அதேபோல, இளைஞர்கள் கூட்டம் கூட்டமாகப் பங்கிற்கு வந்து பெட்ரோல் அடித்துக்கொண்டு ஊர் ஊருக்குப் போய் கிரிக்கெட் விளையாடப் போகிறார்கள். இவர்கள் இன்னும் கொரோனா வைரஸின் கொடூரத்தை உணராதவர்களாக இருக்கிறார்கள். இத்தாலியைப் போல இந்தியாவிலும் கொரோனா சமூகப் பரவலாக மாறினால் என்ன ஆகும் என்பதை நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது.

முருகேசன்
முருகேசன்

கோவை மண்டலத்தில் உள்ள எஸ்ஸார் பெட்ரோல் பங்க்-களில் அதிக வருமானம் வரக்கூடிய பெட்ரோல் பங்க் எங்களுடையது. நாங்கள் வருமானத்தை மட்டும் எதிர்பார்க்காமல் மக்களின் நலனில் அக்கறைக் கொண்டும் கொரோனாவின் தாக்கத்தை உணர்ந்தும் அவசரத் தேவையாக வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் அடிக்கிறோம். தேவையில்லாமல் வருபவர்களுக்கு அட்வைஸ் செய்து அனுப்புகிறோம்.

தமிழக அரசு டூவீலர் ஓட்டுவதற்குத் தடை விதிக்க வேண்டும். மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் அவர்களின் குடியிருப்புக்கு இரண்டு கி.மீட்டர் தூரத்திலேயே இருக்கிறது. நடந்து போய் வாங்க உத்தரவிட வேண்டும். மருத்துவத் தேவைக்குச் செல்வதாக இருந்தால் 108 ஆம்புலன்ஸைத் தொடர்புகொள்ள உத்தரவிட வேண்டும். கொரோனா சமூகப் பரவல் ஆவதற்கு டூவீலர் முக்கியக் காரணமாக இருக்கிறது. அதனால் டூவீலருக்குத் தடை விதித்தால் கொரோனா பரவலை நிச்சயம் தடுக்க முடியும். டூவீலருக்குத் தடை விதித்தால் மக்கள் யாரும் வெளியே செல்ல மாட்டார்கள்'' என்றார் உறுதியாக.

அடுத்த கட்டுரைக்கு