Published:Updated:

`மதிப்பு 15,000 கோடி; டெண்டர் 4,000 கோடி!' - சேலம் உருக்காலையை மீட்குமா இறுதிப் போராட்டம்?

salem steel plant employees
News
salem steel plant employees ( க. தனசேகரன் )

சேலம் உருக்காலையைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சி, இறுதித் தறுவாயில் இருக்கிறது. இது எங்களுக்கு வாழ்வா, சாவா என்ற போராட்டம்தான்.

இந்தியாவிலேயே அரசுக்குச் சொந்தமான மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது சேலம் உருக்காலை. இந்த உருக்காலை தனியார்மயமாவதைக் கண்டித்தும் உருக்காலைக்குள் அத்துமீறி நுழையும் தனியார் நிறுவவனங்களைத் தடுப்பதற்கும் உருக்காலையின் பிரதான நுழைவுவாயில் முன்பாக 24 மணி நேரமும் சுழற்சி முறையில் 12-வது நாளாகக் காத்திருப்புப் போராட்டம் மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் ஊழியர்கள்.

salem steel plant
salem steel plant
க. தனசேகரன்

மத்திய அரசால் 1979-ம் ஆண்டு சேலம் டு தாரமங்கலம் செல்லும் வழியில் 3,970 ஏக்கர் பரப்பளவில் சேலம் உருக்காலை நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் 2,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பைத் தருவதோடு சேலம் மாவட்டத்தின் அடையாளமாகவும் திகழ்ந்து வருகிறது. வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் இதைத் தனியார்மயமாக்கும் முயற்சி நடைபெற்றது. ஆனால் ஊழியர்கள், பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரது போராட்டத்தில் இம்முயற்சி கைவிடப்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதையடுத்து, கடந்தமுறை பிரதமராக மோடி வந்ததும் மீண்டும் சேலம் உருக்காலையைத் தனியார்மயமாக்கத் தீவிரம் காட்டப்பட்டது. ஆனாலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றதால் தனியார்மயமாக்கும் முயற்சியில் சற்று தாமதம் ஏற்பட்டது. தற்போது மீண்டும் தனிப் பெரும்பான்மையில் பிரதமராக மோடி வந்ததும் சேலம் உருக்காலையை விற்பனை செய்வதற்காக கடந்த ஜூலை 4-ம் தேதி ஆன்லைன் மூலம் உலக அளவிலான டெண்டர் விடப்பட்டது. இதையடுத்து, சேலம் உருக்காலையை வாங்க நினைக்கும் தனியார் நிறுவனங்கள், உருக்காலையைப் பார்வையிட எந்நேரமும், வருகை தர வாய்ப்புள்ளதால் இதைக் கண்டித்து உருக்காலை ஊழியர்கள் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள்.

CITU Suresh kumar
CITU Suresh kumar

இதுபற்றி சேலம் உருக்காலையின் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் சுரேஷ்குமார், ``இந்தியாவில் மக்கள் சேவைகளுக்காகவும் பயன்பாட்டுக்காகவும் பல பொதுத்துறை நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. ஆனால், படிப்படியாகப் பொதுத்துறை நிறுவனங்களை மூடி, தனியார் வசம் ஒப்படைக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. இந்தப்போக்கு சமூகத்தில் ஆபத்தை விளைவிக்கும். தற்போது ஆபத்தான சூழ்நிலையில் சேலம் உருக்காலை இருக்கிறது. இந்தியாவிலேயே துருப்பிடிக்காத இரும்பு, சேலம் உருக்காலையில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் நிரந்தர ஊழியர்களாக 950 பேரும் தற்காலிக ஊழியர்களாக 850 பேரும் வேலை பார்க்கிறோம். நன்றாகச் செயல்பட்டு வந்த இரும்பாலையை, நஷ்டத்தில் இயங்குவதாகச் சொல்லி தனியாருக்கு விற்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிறுவனம் தனியார் வசம் போனால் பொதுமக்களுக்கு நியாயமான விலையில் இரும்பு விற்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. பணி நியமனத்திலும் சமூக நீதி புறக்கணிக்கப்படும். அதேபோல இந்த உருக்காலையில் பணிபுரியும் ஊழியர்களுக்குப் பணிப் பாதுகாப்பு, நிலுவைத் தொகை, மருத்துவக் காப்பீடு, பணிக்கொடை போன்றவை கிடைக்காமல் உழைப்பு சுரண்டப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதனால் சேலம் உருக்காலையை மத்திய அரசு தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும்'' என்றார் கொதிப்புடன்.

devaraju
devaraju

சேலம் உருக்காலை ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் தேவராஜூவிடம் பேசினோம். ``அரசு நடத்தும் சேலம் உருக்காலை நஷ்டத்தில் இயங்குமானால் தனியார் மட்டும் எப்படி அதனை லாபத்தில் இயங்க வைக்க முடியும். அரசு கூறுவதுபோல, நஷ்டத்தில் இயங்கும் ஒரு நிறுவனத்தைத் தனியார் முதலாளிகள் போட்டி போட்டு வாங்கத் துடிக்கிறார்கள் என்றால் அந்தத் திறமை அரசுக்கு இல்லையா என்ற கேள்வி எழுகிறது. எனவே, சேலம் உருக்காலையை நாங்கள் தனியார் வசம் ஒப்படைக்க அனுமதிக்க மாட்டோம்.

நாங்கள் தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். தற்போது சேலம் உருக்காலைத் தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சி, இறுதித் தறுவாயில் இருக்கிறது. இது எங்களுக்கு வாழ்வா, சாவா என்ற போராட்டம்தான்'' என்றார் ஆவேசத்துடன்.

s.r.parthiban M.P
s.r.parthiban M.P

தொழிலாளர்களின் போராட்டம் குறித்துப் பேசும் சேலம் எம்.பி பார்த்திபன், ``சேலம் உருக்காலை இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமாக இருப்பதோடு சேலத்தின் வரலாற்றுச் சின்னமாகவும் இருக்கிறது. சேலம் உருக்காலையில் தயாரிக்கப்படும் இரும்புகள் 37 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிறுவனம் நஷ்டம் அடைய வாய்ப்பில்லை. உண்மையிலேயே நஷ்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு அரசே மானியம் கொடுத்து நடத்துகின்றது. 15,000 கோடி மதிப்புடைய இந்நிறுவனத்தை வெறும் 4000 கோடிக்கு டெண்டர் விட்டிருப்பதைப் பார்க்கும்போது பின்புலம் ஏதோ இருப்பதாகத் தெரிகிறது. உருக்காலையை தனியார் வசம் ஒப்படைக்க விடமாட்டோம்'' என்றார் உறுதியாக.