Published:Updated:

`போலீஸார் இரக்கம் காட்டல; எங்கம்மா மயங்கிவிழுந்து இறந்துட்டாங்க’- கலங்கும் சேலம் எலுமிச்சை வியாபாரி

போலீஸார்
போலீஸார் ( எம். விஜயகுமார் )

சேலம் காவல் நிலையத்தில் எலுமிச்சை வியாபாரியின் தாயார் மரணம்.

``மதியம் 2 மணி ஆகியும் என்னை விடவில்லை. அதனால் எங்கம்மா ஏட்டு முத்துசாமியிடம், `என் மகனை விடுங்கய்யா' என்று கதறி அழுது கெஞ்சிக் கேட்டார். `போலீஸையே எதிர்த்து பேசுறீங்களா... உன் பையனை விட மாட்டேன்’ என்று மிரட்டினார். இதனால் பதற்றம் அடைந்த எங்கம்மா காவல் நிலையத்திலேயே மயங்கி கீழே விழுந்தார். பேச்சு மூச்சு இல்லை. அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போனோம். இறந்துவிட்டதாகச் சொன்னாங்க'' என்று கண்கலங்குகிறார் சேலம் எலுமிச்சை வியாபாரி.

சேலம்
சேலம்

தமிழக காவல்துறையினர் லாக்டெளவுனை சிறப்பாக நடைமுறைப்படுத்தி கொரோனா வைரஸிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்து வருகிறார்கள். அதே வேளையில் அரசின் உத்தரவை விழிப்புணர்வு இல்லாமல் பொதுமக்கள் சிலர் அலட்சியம் செய்வதாலும், சில காவலர்களின் அலட்சிய நடவடிக்கைகளாலும் பல துயரச் சம்பவங்களும் நடைபெறுகின்றன.

சேலம் டவுன் பட்டக்கோயில் பகுதியில் எலுமிச்சை வியாபாரி ஒருவர் கடையைத் திறந்துள்ளார். அவரை விடியற்காலை டவுன் போலீஸார் பிடித்து வந்து காவல்நிலையத்தில் வைத்து வழக்கு போட்டு மதியம் ஆகியும் விடவில்லை. காவல்நிலையத்துக்கு வெளியே அந்த வியாபாரியின் தாயார் மகனை விடும்படி காவலர்களிடம் காலில் விழாத குறையாகக் கண்ணீர் விட்டுக் கதறி அழுது கெஞ்சிக் கேட்டிருக்கிறார். இரக்கப்படாத அந்தக் காவலர், `உன் மகனை விட முடியாது' என்று கூறியதாகத் தெரிகிறது. அதிர்ச்சியில் அந்தப் பெண் மயங்கி விழுந்து மரணமடைந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி அந்த எலுமிச்சை வியாபாரியிடம் பேசியபோது, ``என் பேரு வேலுமணி. எனக்கு 35 வயதாகிறது. எங்கம்மா பாலமணி. அவருக்கு சுமார் 70 வயதாகிறது. நாங்கள் பட்டக்கோயில் அருகே சத்தியமூர்த்தி தெருவில் 30 ஆண்டுகளாக எலுமிச்சை குடோன் மற்றும் கடை நடத்தி வருகிறோம். நேற்று முன்தினம் 24-ம் தேதி காலை 8.30 மணிக்கு குடோனைத் திறந்து நானும் எங்க அம்மாவும் வியாபாரம் செய்துகொண்டிருந்தோம்.

பாலமணி
பாலமணி

சேலம் டவுன் காவல் நிலையத்திலிருந்து வந்த ஏட்டு முத்துசாமி குடோனை மூடச் சொல்லி என்னை லத்தியில் அடித்தார். அதற்கு எங்கம்மா...`கடையை மூடச் சொன்னால் மூடிவிட்டுப் போகிறோம். அதற்காக என் பையனை அடிக்கறீங்க'னு கேட்டாங்க. அதனால் அம்மாவுக்கும் காவலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே குடோனை சாத்திவிட்டு வீட்டுக்குப் போயிட்டோம்.

குடோனில் இருக்கும் எலும்பிச்சைப் பழங்களெல்லாம் வீணாகப் போயிடும். வீட்டுக்குக் கொண்டு பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாமென்று நானும் அம்மாவும் அடுத்த நாள் 25-ம் தேதி விடியற்காலை 4.45-க்கு குடோனுக்கு சென்று பழங்களை மூட்டைக் கட்டிக்கொண்டிருந்தோம். சேலம் டவுன் போலீஸ் முத்துசாமியும், அவரோடு ஒரு போலீஸும் வந்து என்னை ஸ்டேஷனுக்குக் கூட்டிப்போய் கடுமையாக அடித்து வழக்கு போட்டு ஸ்டேஷனில் உக்கார வச்சிட்டாங்க. எங்கம்மா ஸ்டேஷனுக்கு வெளியே அழுதுகொண்டிருந்தார்.

வேலுமணி
வேலுமணி

நானும் எங்க அம்மாவும் காலையிலிருந்து சாப்பிடவில்லை. மதியம் 2 மணி ஆகியும் என்னை விடவில்லை. அதனால் எங்கம்மா ஏட்டு முத்துசாமியிடம், `என் மகனை விடுங்கய்யா’ என்று கதறி அழுது கெஞ்சிக் கேட்டார். `போலீஸையே எதிர்த்து பேசுறீங்களா... உன் பையனை விட மாட்டேன்’ என்று மிரட்டினார். இதனால் பதற்றம் அடைந்த எங்கம்மா காவல் நிலையத்திலேயே மயங்கி கீழே விழுந்தார். பேச்சு மூச்சு இல்லை. அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போனோம். இறந்துவிட்டதாகச் சொன்னாங்க. காவல்துறையின் இரக்கமற்ற செயலால் எங்கம்மா இறந்துட்டாங்க. எங்கம்மா இறப்பிபுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கண்ணீர் வடித்தார்.

இதுபற்றி சேலம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரிடம் கேட்டதற்கு, ``சேலத்தில் தடை செய்யப்பட்ட சின்னக்கடை வீதியில் வேலுமணி என்பவர் காய்கறி கடை திறந்து வைத்திருந்தார். ஏற்கெனவே அவரிடம் கடையை மூடச் சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து கடையைத் திறந்துள்ளார். அதனால், வேலுமணியைக் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து வழக்கு போட்டோம். மதியம் பெயில் கிடைத்து வீட்டுக்குக் செல்ல இருந்த சூழ்நிலையில், அவருடைய அம்மா மயங்கி கீழே விழுந்து இறந்துவிட்டார்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு