சேலம், வாழப்பாடியைச் சேர்ந்தவர்கள் கந்தசாமி - சுகந்தி தம்பதி. கந்தசாமி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரின் மூத்த மகள் கிருத்திகா சிங்கப்பூரில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில், வணிக மேம்பாட்டுத் துறை தலைவராகப் பணியாற்றி வருகிறார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கிருத்திகா, தன்னுடன் பணியாற்றி வந்த, ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரைச் சேர்ந்த பென்னடி - ஊ ஜோடி தம்பதியின் மகன் அசானே ஒச்சாயிட் என்பவரை காதலித்துள்ளார். இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இவர்களது காதல் குறித்து, கிருத்திகா தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்களின் திருமணத்துக்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஒச்சாயிட் உறவினர்கள் ஒரு வாரதந்துக்கு முன்பே சேலத்துக்கு வருகை புரிந்து தமிழ் முறைப்படி திருமண ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தனர். தமிழ் பாரம்பர்ய முறைப்படி சேலம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற்று முடிந்தது.

இது குறித்து கிருத்திகா உறவினர்களிடம் பேசினோம். ``இந்த திருமணம் இரு வீட்டாரின் முழு சம்மதத்தோடு, சந்தோஷத்தோடு நடந்தது. தமிழ்நாட்டில் பெண் எடுக்க நாங்க கொடுத்து வெச்சிருக்கணும்னு மாப்பிள்ளை வீட்டார் சந்தோஷப்பட்டாங்க. `மலேசியா முருகனுக்கு அடுத்து பெரிய முருகன் கோயில் உங்க ஊர்ல இருக்கு, இந்த ஊர்ல பெண் எடுத்தது எங்க பாக்கியம், தமிழ் கலாசாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது, எங்க பையன் ஒரு தமிழ்ப்பெண்ணைக் காதலித்து திருமணம் செய்திருப்பது சந்தோஷமா இருக்கு’னு அவங்க சொல்ல சொல்ல, எங்களுக்கே ஆச்சர்யம். திருமணத்துக்கு மணமகனுடைய உறவினர்கள் பலர் வந்து சந்தோஷமா கலந்துகிட்டு ஆசீர்வாதம் செய்தாங்க’’ என்றனர்.