Published:Updated:

`பதுங்கித்தான் ஆக வேண்டும், வேறு வழியில்லை!' - கொரோனா விழிப்புணர்வில் அசத்தும் சேலம் இளைஞர்

சேகர்
சேகர்

இத்தாலியில் நடந்ததைப் போல இந்தியாவில் நடந்து விடக்கூடாது. என்ற அச்சத்தில் இந்தப் பிரசாரத்தைச் செய்து வருகிறேன்.

`கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். அரசு என்பது ஒரு தேர் போன்றது. நாம்தான் தேரின் சக்கரம். தேர் கோயிலை அடைய நாம் சிறப்பாக ஒத்துழைக்க வேண்டும். இத்தாலியில் நடந்ததைப் போல இந்தியாவில் நடந்து விடக் கூடாது. என்ற அச்சத்தில் இந்தப் பிரசாரத்தைச் செய்து வருகிறேன்'' என்கிறார் சேலம் இளைஞர்.

பிரசாரம்
பிரசாரம்

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், கொரோனா வைரஸை ஒழிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கவும் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் சேகர் என்ற இளைஞர் பிரசாரம் செய்து வருகிறார். அவர் தனது பிரசாரத்தில், ` பதுங்கித்தான் ஆக வேண்டும். பதுங்குவது ஒரு ராஜ தந்திரம். அரசுடன் இணைந்து கொரோனாவை ஒழிப்போம். தேசம் காப்பது நமது கடமை' என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கட்டிக் கொண்டு நூதன முறையில் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார். இப்பிரசாரம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

விழிப்புணர்வு பிரசாரத்துக்கு இடையில் அவரிடம் பேசிய போது, ``நான் சேலம் சன்னியாசிக்குண்டு பகுதியிலிருந்து வருகிறேன். எங்கப்பா பேரு சாரங்கபாணி. அம்மா சரோஜா. என் கூடப் பிறந்தவர்கள் இரண்டு அண்ணன்கள் இருக்கிறார்கள். அப்பா, அம்மா விவசாயக் கூலித் தொழில் செய்யக்கூடியவர்கள். எங்க குடும்பத்தில் யாரும் பெருசா படிக்கலை. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நான் கோழிக் கடையில் வேலை பார்த்து வருகிறேன்.

தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று! -பாதிப்பு எண்ணிக்கை 18 ஆக உயர்வு  #NowAtVikatan

சமுதாயத்தில் மக்களுக்குப் பிரச்னைகள் ஏற்படும்போது விழிப்புணர்வு பிரசாரம் செய்வது வழக்கம். 10 ரூபாய் காயின் செல்லாது என வணிகர்கள் வாங்க மறுத்தார்கள். அதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளானார்கள். அதைக் கண்டித்து நான் 10 ரூபாய் காசுகளால் மாலைப் போட்டுக்கொண்டு ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுத்தேன். அதையடுத்து ஆட்சியர் 10 ரூபாய் காசுகளை வாங்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்தார்.

தற்போது கொரோனா வைரஸால் உலகமே பாதிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இத்தாலியில் நடந்ததைப் போல இந்தியாவில் நடந்து விடக் கூடாது என்ற அச்சத்தில் இந்தப் பிரசாரத்தைச் செய்து வருகிறேன்.

பிரசாரம்
பிரசாரம்

மக்கள் தயவு செய்து அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து அவரவர் வீட்டில் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு இருக்க வேண்டும். நாமும் நன்றாக இருக்கலாம். நாடும் நன்றாக இருக்கும். இன்று மாலையோடு 144 நடைமுறைக்கு வருவதால் மேற்கொண்டு பிரசாரங்களை எந்த வகையில் மேற்கொள்ளலாம் என்பதைக் காவல்துறையை அணுகி அவர்களின் ஆலோசனைப் பெற்று நாளையிலிருந்து பிரசார வியூகத்தை மாற்ற இருக்கிறேன்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு