Published:Updated:

தூத்துக்குடி: உப்பளங்களில் தேங்கிய மழைநீர்; முடங்கிய உப்பு உற்பத்தி - கவலையில் உற்பத்தியாளர்கள்!

உப்பளங்களில் தேங்கிய மழைநீர்

தூத்துக்குடியில் பெய்து வரும் தொடர் மழையினால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி: உப்பளங்களில் தேங்கிய மழைநீர்; முடங்கிய உப்பு உற்பத்தி - கவலையில் உற்பத்தியாளர்கள்!

தூத்துக்குடியில் பெய்து வரும் தொடர் மழையினால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Published:Updated:
உப்பளங்களில் தேங்கிய மழைநீர்

தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் பிடித்தல், விவசாயத்திற்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி பரவலாக நடைபெற்று வருகிறது. வேம்பார் முதல் ஆறுமுகநேரி வரையிலான கடற்கரையோரப் பகுதிகளில்  சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தின் தூத்துக்குடியில்தான் உப்பு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் சராசரியாக ஓர் ஆண்டுக்கு 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 15 லட்சம் டன் வரை உற்பத்தி நடைபெறுகிறது.

உப்பளங்களில் தேங்கிய மழைநீர்
உப்பளங்களில் தேங்கிய மழைநீர்

இத்தொழிலில் நேரடியாக 25 ஆயிரம் தொழிலாளர்களும், மறைமுகமாக 10  ஆயிரம் தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஆண்களைவிட பெண் தொழிலாளர்களே அதிகம்.  தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்திக்கான ஆரம்பகட்ட வேலைகள் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் உப்பு உற்பத்தி மற்றும் உப்பு அறுவடை நடைபெறும். வடகிழக்குப் பருவமழை தொடங்கிய பிறகு உப்பு உற்பத்தி சீசன் முடிவடையும்.

இந்த நிலையில், இந்தாண்டு கடந்த ஜனவரி மாதத்தில் பெய்த தொடர் மழை மற்றும் மேல்திசைக்காற்று சரிவர வீசாதது உள்ளிட்ட பல்வேறு இயற்கை இடர்பாடுகளால் உப்பு உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்பட்டது. கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையினாலும் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உப்பளங்களில் மழை நீர் தேங்கி குளம் போலக் காட்சி அளிக்கிறது. உப்பளங்களில் அறுவடை செய்த உப்புகள் மலை போல ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளது.  மழையில் உப்புக் குவியல்கள் நனையாமல் இருக்க பனை ஓலைகள், தென்னை ஓலைகள், பிளாஸ்டிக் தார்பாலின்களைக் கொண்டு மூடிவைத்திருக்கின்றனர்.

உப்பளங்களில் தேங்கிய மழைநீர்
உப்பளங்களில் தேங்கிய மழைநீர்

உப்பு உற்பத்தி முடங்கியதால் உப்பளத் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர்.  இது குறித்து உப்பு உற்பத்தியாளர்களிடம் பேசினோம். ``உப்பில்.., பருமணி (கல் உப்பு), சிறுமணி (பொடி உப்பு), தூள் உப்பு (தூளாக்கியது) என மூன்று வகைகள் உள்ளன. இதில், ’சிறுமணி’ என்ற வகை பொடி உப்பு இயற்கையாகவே இங்கு அதிகமாக விளைவதாலும், அதிக வெண்மை நிறம் உடையது என்பதாலும் தூத்துக்குடி உப்பிற்கு தனி மவுசு உண்டு.  

இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தோணிகள் மற்றும் சரக்குக்கப்பல்கள் மூலம் இலங்கை, மலேசியா, இந்தோனேஷியா, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு 15 லட்சன் டன் வரை உப்பு உற்பத்தி செய்யப்படும் நிலையில், தற்போது 6 டன் உப்பு மட்டுமே இருப்பு வைக்கப்பட்டுள்ளது.  

உப்பளங்களை மூழ்கடித்த மழைநீர்
உப்பளங்களை மூழ்கடித்த மழைநீர்

பருமணி உப்பு  ஒரு டன் ரூ.3,000, சிறுமணி உப்பு ரூ.3,500 ஆகவும், தூள் உப்பு ரூ.4,000 எனவும் உள்ளது. பெய்து வரும் தொடர் மழையினால் உப்பின் தேவை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டினைவிட இந்தாண்டு உப்பின் விலை உயரும் என நம்புகிறோம். இருப்பினும் வெளி மாவட்ட, வெளி மாநில வியாபாரிகள் உப்பினைக் கொள்முதல் செய்ய முன்வந்தால் மட்டுமே கூடுதல் விலை கிடைப்பது சாத்தியம்” என்கிறார்கள்.