Published:Updated:

`விவசாயிகள் திருவிழா இது!' தூத்துக்குடி சமத்துவப் பொங்கல் விழாவில் நெகிழ்ந்த பஞ்சாபி சப் கலெக்டர்

உழவு செய்யும் சப் - கலெக்டர்
உழவு செய்யும் சப் - கலெக்டர்

தூத்துக்குடியில் பொதுமக்கள், காவல்துறை இணைந்து கொண்டாடிய சமத்துவப் பொங்கலில் வயலில் ஏர்கலப்பை பிடித்து உழுது, பெண்களோடு நாற்று நட்டு அசத்தினார் சப் - கலெக்டர் சிம்ரான்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைப் பொறுத்தவரையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை பொங்கல் பண்டிகையின் பொழுது ஆண்டுதோறும் பொதுமக்கள் சாதி மத பேதமின்றி தாமிரபரணி ஆற்றில் உள்ள மணலில் குடும்பத்தினர்களுடன் விளையாடி மகிழ்ந்தனர். காலப்போக்கில் கருவேல மரங்களின் வளர்ச்சியால் மணல் பகுதி வெளியில் தெரியாமல் மறைந்தது.

வயலில் மேளதாள ஊர்வலம்
வயலில் மேளதாள ஊர்வலம்

தாமிரபரணி பாசனத்தின் கடைசி தடுப்பணையான இந்த ஸ்ரீவைகுண்டம் அணைப் பகுதியில் படகு குழாம், சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட மக்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் போதிய பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இல்லாத வளர்ச்சி அடையாத நகரமாகக் காணப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு இரண்டு பாலங்களின் இடைப்பட்ட பகுதியில் அடர்ந்து வளர்ந்திருந்த கருவேல மரங்களை அகற்றி, பொதுமக்கள் பொங்கல் பண்டிகையையும் சித்திரை திருவிழாவையும் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது இவ்விடத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

சமத்துவப் பொங்கல்
சமத்துவப் பொங்கல்

இந்த நிலையில், ஸ்ரீவைகுண்டத்தில் முதல்முறையாக ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்திய மும்மதத்தினர்கள் பங்கேற்ற சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் சப் - கலெக்டர் சிம்ரான் ஜித்சிங் ஹாலேன், ஸ்ரீவைகுண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.

தாமிரபரணி ஆற்றங்கரையோரம், வரிசையாக வைக்கப்பட்டிருந்த 21 பானைகளில் பெண் காவலர்களும், மக்களும் இணைந்து பொங்கலிட்டனர். பின்னர், மேளதாளம் முழங்க கரகாட்டம், கணியான் கூத்துகளுடன் கரும்புகளை ஏந்திய சிறுவர்கள் அணிவகுக்க ஊர்மக்கள் அனைவரும் அருகிலுள்ள வயலுக்கு அழைத்து வரப்பட்டனர்.

வழுக்குமரம்
வழுக்குமரம்

அங்கு சப் - கலெக்டர் சிம்ரான்ஜித்சிங் ஹாலேன், டிஎஸ்பி சுரேஷ்குமார் ஆகியோர் அருகில் உள்ள வயலில் மாடு பூட்டி உழவு செய்தனர். பின்னர், பெண்களுடன் இணைந்து நெல் நாற்றுகளை நட்டனர். இதைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு புத்தாடை, கரும்பு வழங்கப்பட்டது.

இப்பொங்கல்விழா குறித்து சார் ஆட்சியர் சிம்ரான்ஜித்சிங் ஹாலேன் பேசுகையில், ``பஞ்சாப் மாநிலம்தான் எனக்குச் சொந்த மாநிலம். அங்கேயும் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் 13-ம் தேதி `லோஹ்ரி’ எனும் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை குளிர்கால பயிர்களின் அறுவடையுடன் தொடர்புடையது. இக்காலம் கரும்பு அறுவடைக்கு ஏற்ற பருவமாகக் கருதப்படுகிறது. லோஹ்ரிக்கு அடுத்தநாள் கொண்டாடப்படுவதுதான் மகி. இது, பஞ்சாபில் விவசாயிகளால் நிதி புத்தாண்டாக அனுசரிக்கப்படுகிறது. அந்நாளன்று சில பகுதிகளில் காற்றாடி பறக்கவிடுவார்கள்.

விளையாட்டுப் போட்டிகள்
விளையாட்டுப் போட்டிகள்

இரவில், தீ மூட்டி நெருப்பைக் கடவுளாக வணங்குவார்கள். அந்த விழாவும் இதைப்போன்று விவசாயிகளைப் போற்றும் விழாதான். இங்கு பொங்கல் திருவிழா, விவசாயிகள் திருவிழாவாக கொண்டாப்படுகிறது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. வயலில் இறங்கி ஏர் பிடித்து விவசாயியாக உழவு செய்ததை பெருமையாக நினைக்கிறேன்” என்றார்.

தொடர்ந்து நடந்த மேடை நிகழ்ச்சியில் ஒவ்வொருவரும் தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தினார்கள். ``ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது” என்ற சினிமா பாடலை டி.எஸ்.பி சுரேஷ்குமார் முழுமையாகப் பாடினார். பாடலைத் தொடர்ந்து அவரை மாட்டுவண்டியில் ஏற்றி மைதானத்தில் சுற்றி வந்தனர்.

நாற்று நடுதல்
நாற்று நடுதல்

இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவை மேம்படுத்தும் விதமாக வழுக்குமரம் ஏறுதல், ஸ்பூனில் எலுமிச்சம்பழம் ஏந்திச் செல்லுதல், சைக்கிள் பந்தயம், கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. போலீஸாரும் தங்களது பணிச்சுமையை மறந்து குடும்பத்தினருடன் இணைந்து பொது மக்களோடு விளையாடி மகிழ்ந்தனர்.

அடுத்த கட்டுரைக்கு