Election bannerElection banner
Published:Updated:

கீழடி: `6-ம் கட்டத்தில் தென்பட்ட உறை கிணறு’ - அகரத்தில் ஆய்வாளர்கள் உற்சாகம்

கீழடி - அகரம்
கீழடி - அகரம்

கீழடி 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் வரும் செப்டம்பர் மாத இறுதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

`கீழடி என்ற ஒற்றைச் சொல் தமிழர்களிடம் ஆழமாகப் பதிந்துள்ளது. 5-ம் கட்ட அகழாய்வின் தொடக்கத்தின் முதலே அதிகளவு பேசப்பட்டு வருகிறது. உலகத் தமிழர்களால் கீழடி கொண்டாடப்படும் ஒன்றாக உள்ளதால் தமிழக அரசு இதற்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

கீழடி - அகரம் உறைகிணறு
கீழடி - அகரம் உறைகிணறு

சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்டு மதுரை அருகே அமைந்துள்ள கீழடியில் 2014-ம் ஆண்டு முதல் அகழாய்வு முதல் மூன்று கட்டம் இந்திய தொல்லியல் துறை மூலமாக நடைபெற்று வந்த நிலையில் 4, 5, 6-ம் கட்ட அகழாய்வுகள் தமிழக தொல்லியல் துறையால் நடத்தப்பட்டு வருகிறது. 6-ம் கட்ட அகழாய்வில் கீழடி மட்டுமல்லாமல் கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் அகழாய்வு நடைபெறுவது சிறப்பு.

இந்நிலையில் ஏற்கனவே தமிழக அரசு கீழடியில் உலகத்தரம் வாய்ந்த கள அருங்காட்சியகம் ரூ.12.21 கோடி செலவில் அமைக்கப்படும் என அறிவித்திருந்தது. இதற்கிடையே கீழடியில் நான்கு, ஐந்தாம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருள்களைக் கொண்டு மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் தற்காலிக அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்நிலையில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் கீழடி அரசு மேல்நிலைப் பள்ளி கூடுதல் கட்டடம் அருகில் அமைப்பது என்று முடிவாகி, அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது பணிகள் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

கீழடி
கீழடி

இந்நிலையில் தொன்மையான மனிதர்களின் வாழ்விடப்பகுதியாக கருத்தப்படும் அகரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் புதிதாக 5 அடுக்கு கொண்ட உறை கிணறு கண்டறியப்பட்டுள்ளது. கூடுதலாக அடுக்குகள் இருக்கலாம் என்பதால் அதனை முழுமையாகத் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த உறை கிணறு சுமார் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் எனத் தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் முதல் முறையாக அகரத்தில் உறை கிணறு கிடைத்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உறைகிணறு
உறைகிணறு

கீழடி 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் வரும் செப்டம்பர் மாத இறுதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு