Published:Updated:

`தூய்மைப் பணியாளரை கொடியேற்றச் செய்த குன்னூர் நகராட்சி!' - பார்வதி பாட்டியால் நெகிழ்ந்த நீலகிரி

குன்னூர் நகராட்சி
குன்னூர் நகராட்சி

அனைவரும் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்த பார்வதி பாட்டியும் சல்யூட் அடித்துவிட்டு இருகரங்களைக் கூப்பி, பயபக்தியுடன் தேசியக்கொடியை வணங்கினார்

நாட்டின் 71வது குடியரசு தின விழா நாடுமுழுவதும் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், குன்னூர் நகராட்சியில் நடைபெற்ற குடியரசு தினவிழா மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குன்னூர் நகராட்சி
குன்னூர் நகராட்சி

மலை மாவட்டமான நீலகிரியில் காலை 10 மணிக்கு கொடியேற்றுவதுதான் வழக்கம். மாவட்டத் தலைமையிடமான ஊட்டியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கொடியேற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதேபோல் அனைத்து அரசு அலுவலகங்கள் பள்ளி, கல்லூரிகளிலும் கொடியேற்றம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியிலும் குடியரசு தின விழா ஏற்பாடுகள் காலை முதல் நடைபெற்று வந்தன. நகராட்சிப் பணியாளர்கள், அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். தேசியக்கொடியை ஏற்றப்போகும் கடைசி நிமிடத்தில் நகராட்சி ஆணையர் பாலு, கூட்டத்தில் பச்சை நிறப்புடவையில் கடைசியில் நின்றுகொண்டிருந்த நகராட்சி தூய்மைப் பணியாளரான பார்வதி பாட்டியை அருகில் அழைத்து கொடியேற்றச் செய்தார்.

பார்வதி பாட்டி
பார்வதி பாட்டி

இதைச் சற்றும் எதிர்பாராத அவர், காலணியை கழற்றிவிட்டு பதற்றத்துடன் கயிற்றைப் பிடித்து நடுக்கத்துடன் கொடியை ஏற்றினார். பிறகு அனைவரும் கைகளைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அனைவரும் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்த பார்வதி பாட்டியும் சல்யூட் அடித்துவிட்டு இருகரங்களைக் கூப்பி பயபக்தியுடன் தேசியக்கொடியை வணங்கினார். இந்தச் சம்பவம் அனைவரிடமும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய நகராட்சி நிர்வாகத்தினர், ``குன்னூர் நகராட்சியில் கடந்த 25 ஆண்டுகளாக தூய்மைப் பணியாளராக பணியாற்றிவருகிறார் இந்தப் பார்வதி பாட்டி. மூத்த தூய்மைப் பணியாளரான அவரை கொடியேற்றச் செய்தோம். தூய்மைப் பணியாளர்களுக்கு நாம் செய்யும் மரியாதை, நன்றியாகக் கருதி தேசியக்கொடியை தூய்மைப் பணியாளரான பார்வதி பாட்டியை ஏற்றச் செய்தோம். 120 ஆண்டுகள் பழைமை வாய்ந்த குன்னூர் நகராட்சியில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததேயில்லை" என்றனர்.

குன்னூர் நகராட்சி
குன்னூர் நகராட்சி

கொடியேற்றத்துக்குப் பிறகு பார்வதி பாட்டி கையால் பள்ளி மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கச் செய்தனர் நகராட்சி அதிகாரிகள். இந்தச் சம்பவத்தால் மனம் நெகிழ்ந்துபோன பார்வதி பாட்டி, ஆனந்தக் கண்ணீரோடு அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தார். குன்னூர் நகராட்சி அதிகாரிகள் இந்த செயல் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு