Published:Updated:

`மகளின் வளைகாப்புக்காக வைத்திருந்த பணம் அது..!' - தூய்மைப் பணியாளர்களை நெகிழவைத்த சேலம் தொழிலதிபர்

கண்ணன் குடும்பத்தினர்
கண்ணன் குடும்பத்தினர்

`சமூகத்தில் மிகவும் நலிவுற்றவர்களாக இருக்கும் இந்தத் தூய்மைப் பணியாளர்களுக்கு உதவ வேண்டும்' என என் மகள் சொன்னது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

`` நாம் அனைவரும் பாதுகாப்பாக வீட்டுக்குள் இருக்கிறோம். ஆனால் அன்றாடம் சாக்கடைக்குள் இறங்கி வேலை செய்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள். அவர்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தன் இன்னுயிரையும் குடும்பத்தினர் உயிரையும் பொருட்படுத்தாமல் தூய்மைப் பணிகளைச் செய்து வருகிறார்கள். எனக்கு வளைகாப்பு செய்வதற்குப் பதிலாக ஒரு லட்சத்தை அவர்களுக்கு நிதியாகக் கொடுக்கலாம்'' எனக் கூறி நெகிழவைத்திருக்கிறார் சேலம் தொழிலபதிரின் மகள்.

உதவி
உதவி

சீமந்தம் என்று அழைக்கப்படும் வளைகாப்பு, மகளுக்குத் தாய் வீட்டால் நடத்தப்படும் ஒரு சடங்கு. இது தமிழ்ச் சமூகத்தில் மிகவும் சென்டிமென்டாக நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் மகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவதற்காக வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாயை சேலம் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கியிருக்கிறா சேலம் தொழிலதிபர்.

சேலத்தில் பிரபலமான ஜி.ஜி.பேஷன் நிறுவனத்தின் உரிமையாளர் கண்ணன். இவர் தொழிலதிபராக இருந்தாலும் தொண்டுள்ளம் மிக்கவர். சாலையோரவாசிகள், மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதோடு, அவ்வப்போது மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குச் சென்று மலைவாழ் குழந்தைகளுக்கு உதவிகள் செய்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

கண்ணனிடம் பேசினோம், ``என் மனைவி பெயர் வெண்ணிலா. எங்களுக்கு நிவேதா, சுவேதா என இரண்டு மகள்கள். மூத்த மகள் நிவேதாவிற்குத் திருமணமாகிவிட்டது. அவருடைய கணவர் பெயர் பாலகுமார். நிவேதா 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். சொந்த பந்தங்கள், நண்பர்கள் என அனைவரையும் அழைத்து நிவேதாவின் வளைகாப்பைச் சிறப்பாக நடத்தத் திட்டமிட்டிருந்தோம்.

இந்தச் சூழலில் கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழலை உணர்ந்து, `வளைகாப்பு நிகழ்ச்சிக்கான தொகையைத் தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக உதவலாம்' என என் மகள் நிவேதா கூறினார்.

கண்ணன்
கண்ணன்

சமூகத்தில் மிகவும் நலிவுற்றவர்களாக இருக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு உதவ வேண்டுமென என் மகள் சொன்னது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதை என் குடும்பத்தினர் அனைவரும் ஒரு மனதாக வரவேற்றார்கள். அதையடுத்து ஒரு லட்ச ரூபாயில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருள்கள், 4000 முகக் கவசம் என வாங்கிக் கொடுத்திருக்கிறேன். இதைத் தூய்மைப் பணியாளர்கள் மகிழ்ச்சியாகப் பெற்றுக் கொண்டார்கள். இது எங்கள் குடும்பத்தினர் அனைவரையும் சந்தோஷமடைய வைத்தது'' என்றார்.

தொழிலதிபர் கண்ணன் செய்த உதவி குறித்துப் பேசிய தூய்மைப் பணியாளர்கள், ''நாங்க இந்த வேலையைச் செய்யலைனா எங்க குழந்தைகள் பசியால் வாடும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், மக்கள் ஆரோக்கியம் இல்லாமல் நோய் பரவி ரொம்ப கஷ்டப்படுவாங்க. நாங்க இந்தக் குப்பைகளை அள்ளுவதால் எங்ககிட்ட முகம் கொடுத்துக்கூட பேச மாட்டாங்க. ஆனால் இந்த நல்ல மனிதர் எங்களை அழைத்து இவ்வளவு பெரிய உதவிகளைச் செய்திருக்கிறார்'' என நெகிழ்ந்தனர்.

அடுத்த கட்டுரைக்கு