கொரோனா பெருந்தொற்று பரவல் கடந்த ஓராண்டாகப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில், தற்போது இரண்டாம் அலையும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இந்த பெருந்தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் எனப் பல்வேறு அரசுத்துறையினரும் முன்களத்தில் நின்று போராடிவருகின்றனர்.

தூய்மைப் பணியாளர்களைப் பொறுத்தவரையில் கடந்த ஓராண்டாகக் கடுமையான பணிச் சுமையில் இருக்கிறார்கள். பணி நேரம் நீட்டிப்பு, முறையான பாதுகாப்பு உபகரணங்களின்மை, ஒப்பந்தப் பணியாளர்களுக்கு முறையான ஊதியம் மற்றும் விடுமுறைகள் இல்லை, பணிப் பாதுகாப்பின்மை எனப் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பணியாற்றிவருகின்றனர்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தநிலையில், ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குத் தூய்மைப் பணியாளர்களை அழைத்துச் செல்வதற்கு எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாமல் குப்பை வண்டியைப் பயன்படுத்தவதையே வாடிக்கையாகக்கொண்டுள்ள ஊட்டி நகராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள்நலச் செயற்பாட்டாளர்கள் கொதிக்கின்றனர்.

இந்த அவலம் குறித்து நம்மிடம் பேசிய உதகை நகர நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் ஜனார்த்தனன், ``தூய்மைப் பணியாளர்களின் மீது எந்த அக்கறையும் காட்டாத ஊட்டி நகராட்சி, இந்தப் பணியாளர்களை மிகவும் மோசமாகவே நடத்திவருகிறது. பணிக்கு அழைத்துச் செல்லும்போதுகூட இவர்கள் திறந்தவெளி குப்பை வண்டியில் கூட்டம் கூட்டமாக ஏற்றிச் செல்லப்படுகின்றனர். இவர்களுக்கு சமூக இடைவெளியேதும் கிடையாதா?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சிறிய வாகனத்தின் பின்னால் இத்தனை பெண்களை நிற்கவைத்து அழைத்துச் செல்வது யார் கண்ணுக்கும் தெரியவில்லையா? இன்றைக்குக்கூட அரசு தாவரவியல் பூங்காவுக்குள் குப்பை வண்டியில் பெண்களை ஏற்றி அடைத்துச் செல்கின்றனர். கொரோனாவைக் காரணம் காட்டி இன்னும் கூடுதலாக இவர்களைச் சுரண்டுகின்றனர்" எனக் கோபமாகத் தனது ஆதங்கத்தைத் தெரிவித்தார்.
இது குறித்து ஊட்டி நகராட்சி நிர்வாகத்திடம் பேசினோம். ``இவங்களைக் கூட்டிட்டுப் போறதுக்குனு தனியா எந்த வண்டியும் இல்லை. அவரசத்துக்கு வேலை இடத்துக்குப் போக இந்த வண்டியைப் பயன்படுத்த வேண்டியிருக்கு. சீக்கிரமா மாற்று ஏற்பாடு செய்யப்படும்" என சம்பிரதாயத்துக்கு பதில் அளித்தனர்.