Published:Updated:

போராட மட்டுமல்ல; கோலத்தை இதற்கும் பயன்படுத்தலாம் - விழுப்புரம் நகராட்சி ஊழியர்களின் அசத்தல் முயற்சி

துப்புரவு பணியாளர்கள்
துப்புரவு பணியாளர்கள்

விழுப்புர நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மேற்கொண்டு வரும் புதிய யுக்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நம் வீட்டில் சிறிதளவு குப்பை சிதறிக் கிடந்தாலும் அவற்றை துடைப்பம் கொண்டோ, ஈரமான துணியைக் கொண்டோ, உடனடியாகச் சுத்தம் செய்தபின்தான் அடுத்த வேலையைத் செய்யத் தொடங்குவோம். குறைந்தபட்சமாகக் காலையிலும், மாலையிலும் அப்பணியைக் கட்டாயம் செய்வோம். வீடுகளில் சேரும் குப்பைகளைத் தெருக்களில் உள்ள நகராட்சி குப்பைத் தொட்டிகளில் கொட்டுவோம். பெரும்பாலானோர் முறையாக குப்பைதொட்டியில் குப்பைகளைக் கொட்டினாலும் அவசரத்திலும், சிறு சோம்பலாலும் சிலர் பத்தடி தூரத்தில் நின்றபடியே குப்பைத்தொட்டி அருகே குப்பைகளை வீசிவிட்டு சென்றுவிடுகின்றனர். அதனால் நெகிழி காகிதங்கள் சிதறி பறப்பதோடு மட்டுமன்றி குப்பையிலிருந்து வீசும் துர்நாற்றம் அவ்வழியே நடந்து செல்லும் மக்களையும் முகம்சுளிக்க வைக்கிறது.

விழுப்புரம்
விழுப்புரம்

மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம்பிரித்து பச்சை, சிவப்பு நிறத் தொட்டிகளில் குப்பைகளைக் கொட்டும்படி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பெரும்பாலான இடங்களில் அது சரியாகப் பின்பற்றப்படுவதில்லை. சரி, குப்பைகளைப் பொதுவாக ஒரே தொட்டியிலாவது போடுவார்களா எனப் பார்த்தால் அதுவும் இல்லை. சில நகராட்சிகளில் குப்பைகளை அங்குமிங்கும் கொட்டாமல் இருக்க துப்புரவு ஊழியர்களே வீடு வீடாகச் சென்று சேகரித்துக் கொள்கின்றனர். அப்படி இருந்தும் பல்வேறு இடங்களில் சாலையின் முக்கிலும், மின்கம்பங்கள் அருகிலும் குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.

இது போன்ற அவலங்களைத் தடுப்பதற்காக விழுப்புர நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மேற்கொண்டு வரும் புதிய யுக்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்படுவது குறைந்ததோடு மட்டுமல்லாமல் மக்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. மக்கள் அதிகம் வசிக்கும் நகராட்சிகளில் விழுப்புரம் நகராட்சியும் ஒன்று. இந்த நகராட்சியில் 157 நிரந்தர மற்றும் 150 தற்காலிகத் துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தப் பணியாளர்களின் சுமையைக் குறைக்கவும் விரைவாக குப்பைகளை அகற்றவும் கடந்த வருடம் விழுப்புரம் நகராட்சி சார்பில் துப்புரவுப் பணிக்காக ரூபாய் 92.2 லட்சம் மதிப்பில் 24 வாகனங்கள் வழங்கப்பட்டன. அதில் 16 பேட்டரி வாகனங்கள், 7 இலகுரக வாகனங்கள், 1 பொக்லைன் எந்திரமும் அடக்கம். அதைத் தொடர்ந்து துப்புரவுப் பணிகள் துரிதமாக நடக்கத் தொடங்கின. ஆனால், தெருக்களில் குப்பைகள் கிடப்பது மட்டும் குறைந்தபாடில்லை. அப்போதுதான், போராட்டத்துக்காக மட்டுமல்ல, சுகாதாரத்துக்கும் கோலத்தைப் பயன்படுத்தலாம் என புது ஐடியாவை முன்வைத்தார்கள் விழுப்புரம் நகராட்சி அருந்ததி தெரு துப்புரவு ஊழியர்கள்.

விழுப்புரம்
விழுப்புரம்
``என் காதலி நல்லவள். ஆனால் அவளுடைய அலுவலக நண்பர்கள்..?'’’- வாசகர் பிரச்னைக்கு நிபுணரின் ஆலோசனை

தெருக்களிலும் தெருமுற்றிலும் கண்டபடியாக அதிக அளவில் கொட்டப்படும் குப்பைகளை அதிகாலையிலேயே அகற்றிவிட்டு அந்த இடத்தில் தண்ணீர் தெளித்து விதவிதமான கோலங்களை போடும் பழக்கத்தை கையில் எடுத்தனர். இது மார்கழி மாதமாகவும் இருக்கவே பல வண்ணங்களில் கோலங்களைப் போட்டு அசத்தினர். இச்செயல் நல்ல பலனைத் தரவே விழுப்புரம் நகராட்சியின் பல்வேறு பகுதியிலும் இம்முறையை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது விழுப்புரம் நகராட்சி.

இதுதொடர்பாக, விழுப்புரம் நகராட்சி அருந்ததி தெரு துப்புரவுப் பணியாளர்களின் மேற்பார்வையாளர் இளங்கோவனிடம் பேசினோம்.

"'தெருக்களில் குப்பைகளைக் கொட்டாதீர்கள்’ எனப் பலமுறை மக்களிடம் கூறியுள்ளோம். ஆனால், சிலர் இரவு நேரங்களில் குப்பைகளைத் தொட்டியில் போடாமல் வெளியிலேயே வீசிவிட்டுச் சென்று விடுகின்றனர். இதனால் துர்நாற்றம் ஏற்படுவது ஒருபுறமிருந்தாலும் குப்பைகள் சாலையோரம் உள்ள கழிவுநீர் கால்வாயில் விழுந்து அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. இதனால் மக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர்.

விழுப்புரம்
விழுப்புரம்

இந்த நிலைமாற வேண்டும் என்பதற்காக, ஜனவரி 1-ம் தேதியன்று அதிகமாகக் குப்பை கொட்டப்படும் ஒரு இடத்தில், குப்பைகளை அகற்றி சுத்தம் செய்துவிட்டு கலர்கோலம் போட்டோம். அன்று முதல் அங்கு யாரும் குப்பைகள் கொட்டுவதில்லை. அதைத் தொடர்ந்து நகராட்சியின் பல்வேறு பகுதியில் தற்போது செயல்படுத்தத் தொடங்கிவிட்டோம். கோலமாவு வாங்குவதற்குக் குறைந்த அளவில்தான் செலவாகும். அதையும் அப்பகுதியில் உள்ள சிலர் பாராட்டி அன்பளிப்பாக வழங்குகின்றனர். அப்படி இல்லாத சமயத்தில் நாங்களே வாங்கிக்கொள்கிறோம். எங்களுக்கு ஒரே ஒரு ஆசைதான், மக்களுக்கு நல்ல சேவை செய்து மக்களிடம் பாராட்டு வாங்க வேண்டும் என்பது மட்டும்தான்” என்கிறார் இளங்கோவன்.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் சிலரிடம் பேசினோம்,

"குப்பைகள் கொட்டப்படும் இடங்களில் சுத்தம் செய்து கோலம்போடும் துப்புரவு பணியாளர்களின் முயற்சி மகிழ்ச்சி அளிக்கிறது. இனி சாலை ஓரங்களில் குப்பைகள் கொட்டப்படுவது குறையும். முன்பெல்லாம் வீட்டுக்கு வரும் விருந்தினர்கள்கூட, எங்கள் வீதியில் கிடக்கும் குப்பைகளைப் பார்த்துவிட்டு கேலி பேசுவார்கள். அப்பகுதிகளில் கொசுக்களும் அதிகமாக இருக்கும். குறிப்பாக, மழைக்காலங்களில் நடப்பதற்கு மிகவும் சங்கடமாக இருக்கும். இனி அப்படி இருக்காது என நினைக்கிறோம்” என்கின்றனர் மகிழ்ச்சியாக.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் 1234 செவிலியர் பணியிடங்கள்... உடனே அப்ளை பண்ணுங்க! #EmploymentNews

சுகாதாரச் சீர்கேடுகளால் நாளுக்கு நாள் நோய்கள் பெருகிக்கொண்டே வருகின்றன. இது போன்ற சிறிய முயற்சிகள் மக்களைப் பெரிய பாதிப்புகளிலிருந்து நிச்சயம் காக்க வல்லவை என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

அடுத்த கட்டுரைக்கு