Published:Updated:

`இத்தாலி, அமெரிக்காவைப் போல பாதிப்பு ஏற்படலாம்!' -டாஸ்மாக் கடை திறப்பை எதிர்க்கும் சசிபெருமாள் மகன்

சசிபெருமாள்
சசிபெருமாள்

``மதுவுக்கு எதிரான போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்தார், என் தந்தை. அந்தத் தியாகத்திற்காக பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும்.''

`` மதுக்கடைகளைத் திறக்கும் ஆர்வத்தைப் பார்த்தால் மதுவிலக்கு கொண்டு வர வாய்ப்பில்லை. மக்களை, மது போதையில் தள்ளாடவைக்க நினைக்கிறார்கள். மதுக்கடைகள் மூலம் கொரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறப் போகிறது. இத்தாலி, அமெக்காவைப் போல பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது'' என்கிறார், சசிபெருமாளின் மூத்த மகன் விவேக்.

விவேக்
விவேக்

சேலம் சசிபெருமாள், தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கை வலியுறுத்திப் போராடிய காந்தியவாதி. அவர், 2015 ஜூலை 31-ம் தேதி, கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலை மதுக்கடையை மூடக் கோரி, டவர் மீது ஏறி போராடி உயிர் நீத்தார். தன் தந்தையின் வழியில் அவரின் மூத்த மகன் விவேக்கும் மதுவுக்கு எதிராகப் போராடிவருகிறார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு விதிக்கப்பட்டதையடுத்து, கடந்த 40 நாள்களுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், நாளை தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கு, சமூக ஆர்வலர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சசிபெருமாளின் மகன் விவேக்கும் மதுக் கடைகளைத் திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்.

டாஸ்மாக்
டாஸ்மாக்

இதுபற்றி சசிபெருமாளின் மகன் விவேக், ''கொரோனா வைரஸைவிடக் கொடூரமானது மது. தனி மனிதனுக்கு மட்டுமல்ல சமுதாயத்திற்கே கேடானது. இந்த மோசமான மதுவை எதிர்த்து பலரும் போராடிவருகிறார்கள். அந்த வகையில், என் தந்தை சசிபெருமாள் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராடினார். இறுதியில், மதுவுக்கு எதிரான போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்தார். என் தந்தையின் உயிர்த் தியாகத்திற்காக பூரண மது விலக்கு கொண்டுவர வேண்டும்.

’தமிழகத்தில் இன்று மட்டும் 771 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று’ – சுகாதாரத்துறை தகவல் #NowAtVikatan

ஊரடங்கால், 40 நாள்களுக்கும் மேலாக மக்கள் குடிப்பழக்கத்திலிருந்து விலகி இருக்கிறார்கள். நாட்டில் குற்றங்கள் குறைந்து உடல்நலம் பெருகியிருக்கிறது. பூரண மதுவிலக்கு கொண்டு வர, இது அற்புதமான தருணம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 2016 தேர்தலில் படிப்படியாக பூரண மதுவிலக்கு கொண்டுவருவதாகக் கூறினார். அவர் வழியில் ஆட்சி செய்வதாகக் கூறும் ஆட்சியாளர்கள், பூரண மது விலக்கைக் கொண்டு வர வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா வைரஸால் ஒரு உயிர்கூட பலியாகக் கூடாது என்கிறார். அதேபோல மதுவினாலும் ஒரு உயிர்கூட பலியாகக்கூடாது.

விவேக்
விவேக்

ஆனால், இவர்கள் மதுக்கடைகளைத் திறக்கும் ஆர்வத்தைப் பார்த்தால் மதுவிலக்கு கொண்டுவர வாய்ப்பில்லை. மதுக்கடைகள் மூலம் கொரோனா வைரஸ் சமூகப பரவலாகப் போகிறது. இத்தாலி, அமெரிக்காவைப் போல பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்கக் கூடாது'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு