Published:Updated:

தொடர் சர்ச்சையில் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம்: முதல்வர் ஸ்டாலினின் திடீர் விசிட்! -விடிவு பிறக்குமா?

முதல்வர் ஸ்டாலின்
News
முதல்வர் ஸ்டாலின்

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முடிந்ததும், முதல்வர் ஸ்டாலின் திருச்சி செல்லப்போகிறார் என்றுதான் நினைத்திருந்தார்கள். ஆனால் திடீர் விசிட்டாக, சரஸ்வதி மகால் நூலகம் செல்ல முடிவெடுத்தது, அதிகாரிகள் மத்தியில் பரபரப்பான சூழலை உருவாக்கியது.

உலக அளவில் புகழ்பெற்ற, மிகவும் பழைமையான நூலகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மகால் நூலகம். இங்கு கடந்த பல ஆண்டுகளாக, பல்லாயிரக்கணக்கான ஓலைச்சுவடிகளும், மிகவும் அரிதான நூல்களும் பாதுகாக்கப்பட்டுவருகின்றன. இவை, பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட, பல துறை சார்ந்த மிகவும் அரிதான நூல்கள். எதிர்காலத் தலைமுறைகள் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டிய அறிவுக்களஞ்சியமாக விளங்கும் இந்த நூலகத்திலிருந்து பல அறிவுப் பொக்கிஷங்கள் காணாமல்போவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டிவருகிறார்கள்.

நிர்வாகச் சீர்கேட்டினாலும் இந்த நூலகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவருவதாக பலரும் ஆதங்கம் தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில்தான் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கு திடீர் விசிட் செய்தது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

சரஸ்வதி மகால் நூலகத்தில் ஸ்டாலின்
சரஸ்வதி மகால் நூலகத்தில் ஸ்டாலின்

தஞ்சாவூர் ஆற்றுப்பாலத்தில் இயங்கிவரும் திமுக மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு, தமிழக அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா டிசம்பர் 29, 30 ஆகிய நாள்களில் நடைபெறவிருப்பதாகவும் இதில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்ளவிருப்பதாகவும்தான் நிகழ்ச்சி நிரலில் சொல்லப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சி செல்வார் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. நேற்று காலை தஞ்சாவூர் சரபோஜி கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முடிந்ததும், முதல்வர் ஸ்டாலின் திருச்சி செல்லப்போகிறார் என்றுதான் அனைவரும் நினைத்திருந்தார்கள். ஆனால் திடீர் விசிட்டாக, சரஸ்வதி மகால் நூலகம் செல்ல அவர் முடிவெடுத்தது, அதிகாரிகள் மத்தியில் பரபரப்பான சூழலை உருவாக்கியது. குறிப்பாக சரஸ்வதி மகால் நூலக அதிகாரிகளும் ஊழியர்களும் பரபரப்பானர்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முதலமைச்சர் ஸ்டாலினுடன், அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சை மாவட்ட ஆட்சியரும், இந்நூலகத்தின் இயக்குநருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டவர்களும் சென்றார்கள். நூலகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்ற ஸ்டாலின், அங்கு வைக்கப்பட்டுள்ள ஓலைச்சுவடிகள், காகிதச் சுவடிகள், பழங்கால நூல்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டார். இவை எப்படிப் பராமரிக்கப்படுகின்றன என்பதையும் ஆர்வத்துடன் கேட்டறிந்தார். நூலத்தின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் விசாரித்தார். சுமார் ஒரு மணி நேரம் அங்கு இருந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இது குறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலரும், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகப் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான சமுத்துவன், ``முதலமைச்சர் இங்க திடீர் விசிட் செஞ்சது, பாராட்டப்படவேண்டிய விஷயம். இதுக்கு முன்னாடி வேற எந்த முதலமைச்சரும் இவ்வளவு அக்கறையா, ஆர்வமா, திடீர் விசிட் செஞ்சு இவ்வளவு நேரம் இங்க இருந்ததில்லை. இந்த நூலகத்தின் நிர்வாகச் சீர்கேடுகளாலும், இங்க வேலை பார்க்கும் சில ஊழியர்களின் சுயநலத்தாலும், இந்த நூலகத்தோட எதிர்காலமே கேள்விக்குறியாகிக்கிட்டு இருந்துச்சு. தமிழில் அச்சிடப்பட்ட முதல் அச்சு நூலான `வேத ஆகமம்’கிற நூல் நீண்டகாலமா இங்க இருக்குற அருங்காட்சியகத்துல பாதுகாக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சுமார் 15 வருசத்துக்கு முன்னாடி அது இங்கருந்து திருடு போயிடுச்சு. இது மாதிரி இன்னும் பல அரிய நூல்கள், ஓலைச்சுவடிகளெல்லாம் காணாமல் போயிருக்கு, ஓலைச்சுவடிகள்ல உள்ள தகவல்களை புத்தகங்களாக வெளியிடத்தான், பல்வேறு மொழி சார்ந்த பண்டிதர்கள் நியமிக்கப்பட்டிருக்காங்க. ஆனால் அந்தப் பணிகள் முறையாக நடக்கவே இல்லை. இது மாதிரி இன்னும் பல நிர்வாகச் சீர்கேடுகளால் இதன் எதிர்காலமே கேள்வ்குறியாகிக்கிட்டு இருந்துச்சு. இது தொடர்பாக, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டவங்களுக்கு புகார்கள் அனுப்பியிருந்தோம். இந்த நூலகத்து மேல அக்கறைகொண்ட ஆய்வாளர்கள், பேராசிரியர்களும்கூட தமிழக அரசுக்கு இது தொடர்பாக புகார் மனுக்கள் அனுப்பியிருக்காங்க. இந்தச் சூழ்நிலையிலதான் முதலமைச்சர் ஸ்டாலின் இங்க திடீர் விசிட் செஞ்சுருக்கார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

இந்த நூலகத்தின் நிர்வாகச் சீர்கேடுகளுக்குக் கூடிய சீக்கிரமே விடிவுகாலம் பிறக்கும்னு நம்புறோம். காணாமல்போன பழங்கால அறிவுப் பொக்கிஷங்கள் மீட்கப்படும், கட்டமைப்பு வசதிகள், செயல்பாடுகள்ல முன்னேற்றம் ஏற்படும்னு எதிர்பார்க்குறோம்’ எனத் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலினின் திடீர் விசிட் குறித்து இங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் நாம் கேட்டபோது, ``இந்த நூலகம் சிறப்பா செயல்பட்டுக்கிட்டு இருக்கு. ஆனால் நிதிப் பற்றாகுறையால் நெருக்கடியான சூழல் உருவாகியிருக்கு. இது தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்த நூலகத்தை எப்படி மேம்படுத்தலாம்கறதுக்கான திட்டங்களும் அரசுக்கு அனுப்பப்பட்டிருக்கு. இதனால்தான் தமிழக முதல்வர் இங்க திடீர் விசிட் செஞ்சிருக்காருனு நினைக்குறோம்’’ எனத் தெரிவித்தார்கள். எது எப்படியோ, முதலமைச்சர் ஸ்டாலினின் தீடீர் வருகையால், சரஸ்வதி மகால் நூலகத்துக்கு பொற்காலம் பிறக்கட்டும்!