Published:Updated:

சாத்தான்குளம்: `பென்னிக்ஸ் இல்லனா அன்னைக்குப் பெரிய பிரச்னை ஆயிருக்கும்!’- கல்லூரி நண்பர்களின் நினைவுகள்

பென்னிக்ஸ்
பென்னிக்ஸ்

சாத்தான்குளம் சம்பவத்துக்குப் பிறகு, பென்னிக்ஸ், ஜெயராஜை அறிந்தவர்களே துக்கம் பொறுக்க முடியாமல் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்படியென்றால், இந்த சம்பவத்துக்கு முன்பே பென்னிக்ஸ் ஜெயராஜை தெரிந்தவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வியாபாரிகளான தந்தை, மகன் லாக்அப் மரணம், அனைவரது மனங்களையும் ரணமாக்கியுள்ளது. பேரதிர்ச்சி கொடுத்த ஆதாரங்கள், நீதிபதியின் அறிக்கை, பெண் காவலரின் சாட்சி, அடுத்தடுத்து கைதாகும் போலீஸ்கள் என்று சாத்தான்குளம் வழக்கு பல்வேறு திருப்பங்களைச் சந்தித்துவருகிறது. ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்துக்கு நீதி கேட்டு, சமூகத்தின் பல்வேறு தரப்பிலிருந்தும் குரல்கள் ஓங்கி ஒலித்துவருகின்றன.

பென்னிக்ஸ், ஜெயராஜ்
பென்னிக்ஸ், ஜெயராஜ்
சாத்தான்குளம்: `நீண்ட விசாரணை; 15 நாள் காவல்!’- 3 பேர் கைது விவகாரத்தில் என்ன நடந்தது?

ஜெயராஜ், பென்னிக்ஸை இதுவரை பார்த்தறிந்திராதவர்களே துக்கம் பொறுக்க முடியாமல் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்படியென்றால், இந்த சம்பவத்துக்கு முன்பே ஜெயராஜ், பென்னிக்ஸை தெரிந்தவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில்தான் பென்னிக்ஸ் MSW முதுகலை பட்டப்படிப்பை முடித்துள்ளார். பென்னிக்ஸின் மரணம், அவரது கல்லூரி நண்பர்களை சோகத்தில் மூழ்கடித்துள்ளது. அவர்களிடம் பேசினோம்.

“நாங்கள் 2009-11 பேட்ச். நானும், பென்னிக்ஸும் வேறு வேறு கல்லூரி. என்னுடன் யூ.ஜி படித்த நண்பர்கள், அவருடன் பி.ஜி படித்தனர். அதனால் எல்லோரும் நண்பர்களானோம். எல்லோருமே ஜாலியாக இருப்போம். பென்னிக்ஸ் மிகவும் அமைதியாக இருப்பார்.

பாலகுமரன்
பாலகுமரன்

இரண்டாண்டுகளில், எங்களுடன் இரண்டுமுறை மட்டுமே வெளியில் வந்துள்ளார். நான் அந்தளவுக்கு அவருடன் பழகியதில்லை. ஆனால், அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் சொல்வதைக் கேட்கும்போது, இவருக்கா இப்படி ஒரு நிலை என்று மிகவும் வேதனையாக இருக்கிறது” என்றார் பாலகுமரன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பென்னிக்ஸின் வகுப்பு நண்பர் அருண், “பென்னிக்ஸ் ஒருவார்த்தை கூட யாரையும் தவறாகப் பேசமாட்டான். நாம் 10 வார்த்தை பேசினால், பதிலுக்கு 1 வார்த்தைதான் வரும். அவ்வளவு அமைதியான பையன். அதிர்ந்துகூட பேசமாட்டான். அவனைப் பற்றி யாராவது குறை சொன்னால்கூட, கண்டு கொள்ளாமல் திரும்பிவிடுவான். உதவும் மனப்பான்மை கொண்டவன். ஒருமுறை எங்கள் வகுப்புக்குள் அனைவரும் சண்டை போட்டோம்.

அருண்
அருண்

அப்போது, எல்லோரிடமும் சமாதானம் பேசிய ஒரே நபர் பென்னிக்ஸ்தான். அதனால், எங்கள் எல்லோருக்குமே அவன் மீது அன்பும், மதிப்பும் அதிகம். நண்பன் என்பதற்காகச் சொல்லவில்லை. அதுதான் அவனின் சுபாவம். ஒன்றரை மாதம் முன்பு எனக்கு அவன் போன் செய்தான். திருமணத்துக்கு பெண் பார்த்துவருவதாகச் சொன்னான். இப்படிப்பட்ட ஒரு முடிவை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை” என்றார்.

பென்னிக்ஸின் மற்றொரு நண்பர் கமல்ராஜ், “அவன் உருவத்துக்கும் பேச்சுக்கும் சம்பந்தமே இருக்காது. எங்களது வகுப்பில் இருக்கும் அனைவரையும் வாங்க, போங்க என்றுதான் கூப்பிடுவான். எங்களது வகுப்பிலேயே அவன்தான் மிகவும் அமைதியானவன். தூத்துக்குடியில் மிகவும் சராசரியான குடும்பத்திலிருந்து படிக்க வந்ததால், படிப்பைத் தவிர வேறு எதிலுமே கவனம் செலுத்த மாட்டான்.

கமல்ராஜ்
கமல்ராஜ்

அவனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. கட் அடித்துவிட்டு எல்லோரும் சினிமாவுக்கு செல்லும்போதுகூட, அவன் வர மறுத்துவிடுவான். ஆசிரியர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பான். அதனால், ஆசிரியர்களும் அவன்மீது தனி அன்பு வைத்திருந்தனர்.

பயிற்சிக்காக 6 மாதம் நானும் அவனும் ஒன்றாக இருந்தோம். அங்கு ஒரு ஊழியருக்கு பிரச்னை. அந்தப் பிரச்னைக்கும், இவனுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால், அந்தப் பிரச்னையை தீர்த்துவைத்தான். அதுகுறித்த எந்த அலட்டலும் இல்லாமல் வேலையைப் பார்க்க திரும்பிவிட்டான்.

கல்லூரியில் பென்னிக்ஸ்
கல்லூரியில் பென்னிக்ஸ்

நான் வேகமாக பைக் ஓட்டுவேன். அதனால் என் பைக்கில் கூட ஏறமாட்டான். மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பான். சில சமயங்களில் நான் அவனை திட்டியுள்ளேன். அப்போதுகூட, சிரித்த முகத்துடன் நகர்ந்துவிடுவான். நல்ல நண்பனை இழந்துவிட்டோம் என்பதைவிட, மிகச்சிறந்த மனிதனை இழந்துவிட்டோம் என்பது வலிக்கிறது” என்று முடித்தார்.

பென்னிக்ஸின் நெருங்கிய வகுப்பு நண்பரான கமலக்கண்ணன், “எனக்குப் பின்இருக்கையில் பென்னிக்ஸ் அமர்ந்திருப்பான். வகுப்பில் எல்லாரையும்விட, என்னுடன் அதிக நெருக்கமாக இருப்பான். வகுப்புக்குள் முதல்முறை நுழைந்தபோது, அவனது உருவத்தைவைத்து பயங்கர டெரராக இருப்பான் என்று நினைத்தேன். ஆனால், பழகப்பழகத்தான் அவன் மிகவும் இளகிய மனதைக் கொண்டவன் எனத் தெரிந்தது. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன்.

கமலக்கண்ணன்
கமலக்கண்ணன்

குடும்பத்தை நல்ல நிலைக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதைக் கனவாகக் கொண்டவன். இப்போதுதான், படிப்படியாக முன்னேறிக்கொண்டிருந்தான். எங்கள் வீட்டுக்கு பலமுறை வந்துள்ளான். என் அப்பா அம்மாவுக்கு அவனை மிகவும் பிடிக்கும். அதேபோல, அவனது அப்பாவிடம் நான் பேசுவேன். மிகவும் வெள்ளந்தியானவர். அவன் அம்மாவும், ‘அவனுக்கு எதும் தெரியாது. நல்லா பார்த்துக்கோங்கப்பா’ என்று சொல்வார்.

கல்லூரி காலகட்டத்தில், பொதுமக்கள் முன்பு நாங்கள் ஒரு நாடகம் நடத்தினோம். அதில், மிகவும் நெகட்டிவான ஒரு ரோலில் நடிக்க யாருமே முன்வரவில்லை. நாங்கள் பென்னிக்ஸிடம் அதுகுறித்து எதுவும் கேட்கவில்லை. ஆனால், அவன் தானாகவே முன்வந்து நடித்தான். மிகவும் அரிதாகத்தான் எங்களுடன் வெளியில் வருவான். அப்படி ஒருமுறை வரும்போது, நாங்கள் ஒரு காட்டில் யானையிடம் சிக்கிவிட்டோம்.

கல்லூரி நண்பர்களுடன் பென்னிக்ஸ்
கல்லூரி நண்பர்களுடன் பென்னிக்ஸ்
சாத்தான்குளம்:`எதிர்காலத்தை நினைத்து பயப்படுகிறேன்' - கதறிய எஸ்ஐ பாலகிருஷ்ணன்

எல்லோரும் பயந்து கதறிக்கொண்டிருந்தோம். பென்னிக்ஸ் மட்டும் அந்த நேரத்தில் பதறாமல், ’எல்லோரும் அமைதியா இருங்க. நம்ம அமைதியா இருந்தா அதுவும் அமைதியா காட்டுக்கு போய்டும்’ என்று சொல்லி அந்தச் சூழ்நிலையை நிதானமாகக் கையாண்டு எந்தப் பிரச்னையும் இல்லாமல் எங்களைக் காப்பாற்றினான். அதனால், எங்கள் எல்லோருக்குமே அவன் மீது தனி மரியாதை இருந்தது.

பென்னிக்ஸ் எந்த அளவுக்கு அமைதியானவனோ, அந்த அளவுக்கு உறுதியான மனதைக் கொண்டவன். அவன்மீது தவறு இல்லை என்றால், எந்தக் காரணத்துக்காகவும் இறங்கிப்போக மாட்டான். அவன் தவறே செய்ய மாட்டான். அதனால், எந்தக் காரணத்துக்காகவும் பொய்யான ஒரு விஷயத்தை ஏற்கவும் மாட்டான்.

கல்லூரியில் பென்னிக்ஸ்
கல்லூரியில் பென்னிக்ஸ்

எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், ‘என் மீது தவறில்லை’ என்று உறுதியான நிலையில் இருப்பான். அதுதான், இப்போதும் பிரச்னையாகிவிட்டது என்று நினைக்கிறேன். நல்லவர்களுக்கு பிரச்னைகளும் வலிகளும் அதிகமாக இருக்கும். அதுதான் பென்னிக்ஸுக்கும் நடந்துள்ளது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு