Published:Updated:

`சாத்தான்குளம் சம்பவம் காவல்துறைக்கு கரும்புள்ளி!’ - நல்லுறவுக் கூட்டத்தில் எஸ்.பி

கூட்டத்தில் எஸ்.பி ஜெயக்குமார்
கூட்டத்தில் எஸ்.பி ஜெயக்குமார்

``சாத்தான்குளம் சம்பவம் காவல்துறைக்கு கரும்புள்ளிதான். ஆனால், வியாபாரிகள் போலீஸாருடன் நல்லுறவில் ஈடுபட்டு சமுதாயத்துக்கு பல நற்பணிகளைச் செய்ய வேண்டும்” தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இச்சம்பவத்தால் காவல்துறை மீது மக்களுக்கு பெரும் அதிருப்தியையும் நம்பிக்கை இன்மையையும் ஏற்படுத்தியதாகப் பல தரப்பினரும் குற்றச்சாட்டை எழுப்பினர். தந்தை, மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், சிறப்பு உதவிஆய்வாளர் பால்துரை உள்ளிட்ட 10 போலீஸாரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கூட்டத்தில் எஸ்.பி ஜெயக்குமார்
கூட்டத்தில் எஸ்.பி ஜெயக்குமார்

தொடர்ந்து, இவ்வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. இதில், சி.பி.ஐ அதிகாரிகள் மற்றும் கைது செய்யப்பட்ட போலீஸார் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உடல்நலக்குறைவால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

சாத்தான்குளம் இரட்டைக்கொலை சம்பவம் நடந்த அடுத்த சில நாள்களிலேயே தூத்துக்குடியில் எஸ்.பி-யாக இருந்த அருண் பாலகோபாலன் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு அவருக்கு சென்னை சைபர் கிரைம் பிரிவு எஸ்.பி பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி-யாக இருந்த ஜெயக்குமார், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டார்.

கூட்டத்தில் எஸ்.பி., ஜெயக்குமார்
கூட்டத்தில் எஸ்.பி., ஜெயக்குமார்

இவர் எஸ்.பி-யாகப் பொறுப்பேற்ற முதல்நாளிலேயே தூத்துக்குடியில் வியாபாரிகளை அழைத்து நல்லுறவு கூட்டம் நடத்தினார். தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள காவல்நிலையங்களில் பணிபுரியும் ஆய்வாளர்களுக்கு யோகா, மனஅழுத்தத்திலிருந்து விடுபடுதல், பிரச்னைகளை நேர்த்தியாகக் கையாளுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அத்துடன், விருப்பத்தின் அடிப்படையில் போலீஸாருக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்தார்.

இந்நிலையில், ஸ்ரீவைகுண்டத்தில் வியாபாரிகளுடனான நல்லுறவுக் கூட்டத்தில் பேசிய எஸ்.பி ஜெயக்குமார், ``காவல்துறையினரும் வியாபாரிகளும் எப்போதும் நல்லுறவில் இருக்க வேண்டும். வியாபாரிகளுக்கு ஏற்படும் பிரச்னைகள், இடையூறுகள் குறித்து போலீஸாரிடம் தயக்கமின்றி வியாபாரிகள் கூறலாம். பல ஊர்களில் பொது இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்துதல், கபசுரக்குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட பல நல்ல காரியங்களில் இருக்கும் தங்களைப் போன்ற வியாபாரிகளின் பங்களிப்பை வரவேற்கிறோம்.

கூட்டத்தில் எஸ்.பி ஜெயக்குமார்
கூட்டத்தில் எஸ்.பி ஜெயக்குமார்

இதுபோன்ற நற்பணிகளும் போலீஸாருடனான நல்லுறவும் தொடர வேண்டும். சாத்தான்குளம் சம்பவம் நடக்கக் கூடாத ஒன்று. காவல்துறைக்கு அது கரும்புள்ளி என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை. அப்பாவி வியாபாரிகளை அடிக்க வேண்டிய அவசியமே இல்லை. தவறு செய்த போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி இதுபோன்ற ஒரு விரும்பத்தகாத சம்பவம் நடக்காது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு