Election bannerElection banner
Published:Updated:

நீலகிரி: `மாட்டுப் பொங்கல் அதுவுமா இப்படி ஒரு வேதனையா..?’ - கண்ணீரில் பழங்குடியின மக்கள்

அடுத்தடுத்து மடியும் விலையில்லா மாடுகள்
அடுத்தடுத்து மடியும் விலையில்லா மாடுகள்

பழங்குடியின மக்களுக்கு மாடு வழங்கியது தொடர்பான திட்டத்தில் ஏற்பட்டிருக்கும் முறைகேடுகள் தொடர்பாக முழுமையான அறிக்கை வரப் பெற்றுள்ளது. இது தொடர்பாக அந்தப் பணியில் ஈடுபட்ட பெண் அதிகாரி விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

நீலகிரி மாவட்டத்தில் இருளர், குறும்பர், பணியர், கோத்தர், தோடர், காட்டுநாயக்கர் ஆகிய ஆறு வகையான பழங்குடி இன மக்கள் வாழ்ந்துவருகின்றனர்.

இவர்களில் பணியர் உள்ளிட்ட சில பழங்குடியின மக்கள் இன்றளவும் எந்த அடிப்படை வசதிகளும் சென்றடையாமல், மிகவும் பின்தங்கிய நிலையிலேயே தவித்துவருகின்றனர்.

விலையில்லா கறவை மாடுகள்
விலையில்லா கறவை மாடுகள்

வறிய நிலையில் தவிக்கும் இத்தகைய மக்களை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் நலத் திட்டங்களை உருவாக்கிவருகின்றன. ஆனால், அந்தத் திட்டங்கள் முறையாக அந்த மக்களிடம் சென்று சேர்கின்றனவா என பழங்குடியினச் செயல்பாட்டாளர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

இந்தநிலையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பழங்குடியின மக்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூர் ஆகிய பகுதிகளிலுள்ள பழங்குடியின மக்களுக்கு தற்போது கறவை மாடுகள் வழங்கப்பட்டன.

கறவை மாடுகள்
கறவை மாடுகள்

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் பணியை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலராக இருந்த பெண் அதிகாரி ஒருவர் மேற்கொண்டார். மசினகுடி, தொரப்பள்ளி, நிலாக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் 1,079 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, விலையில்லா கறவை மாடுகளை வழங்கினர்.

கறவை மாடுகள் என்ற பெயரில், இறைச்சிக் கடைகளுக்கு அனுப்பப்படும் அடி மாடுகளை வழங்கிவிட்டதாகவும், இவற்றில் நூற்றுக்கணக்கான மாடுகள் இறந்துவிட்டதாகவும், ஒவ்வொரு பயனாளிகளிடமிருந்தும் ரூ.5,000 லஞ்சமாக பெற்றுக்கொண்டே மாடுகள் வழங்கப்பட்டதாகவும்,

விலையில்லா கறவை மாடுகள்
விலையில்லா கறவை மாடுகள்

மேலும், 300 பயனாளிகளுக்கு மாடுகள் வழங்கப்படாமலேயே வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது எனவும் அடுக்கடுக்கான முறைகேடுகள் நடந்திருப்பதாக பழங்குடிகள் மற்றும் பழங்குடியினச் செயல்பாட்டாளர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

இந்த முறைகேடு குறித்து நம்மிடம் பேசிய பழங்குடியின ஆர்வலர் ஒருவர், ``இந்தத் திட்டத்தில் ஒரு மாட்டுக்கு அரசு 30,000 ரூபாய்க்கும் அதிகமான தொகையை வழங்கியிருக்கிறது. மேலும், போக்குவரத்து, காப்பீடு போன்ற எந்த காரணத்துக்காகவும் பழங்குடிகளிடம் பணம் வசூலிக்கக் கூடாது. ஆனால், பயனாளிகளிடம் ரூபாய் 5,000 வரை வசூலித்திருக்கிறார்கள். கன்று ஈன்ற இளம் வயதுடைய கறவை மாடுகளை மட்டுமே வழங்க வேண்டும். ஆனால், இவர்களோ இறைச்சிக் கடைகளுக்கு அனுப்பும் அடி மாடுகளை வழங்கினர்.

விலையில்லா கறவை மாடுகள்
விலையில்லா கறவை மாடுகள்

இவற்றில் பல நாள்பட்ட நோய்களில் பாதிக்கப்பட்டவை. தற்போதே நூற்றுக்கணக்கான மாடுகள் இறந்துவிட்டன. பெரும்பாலான பயனாளிகளுக்கு கறவை வற்றிய, வயது முதிர்ந்த மாடுகளையும், சினை பிடிக்காத கிடாரிகளையும் வழங்கியிருக்கிறார்கள். 300 பேருக்கு மாடுகளை வழங்காமலேயே வழங்கியதாக கணக்கு காண்பித்திருக்கிறார்கள். அந்த 300 பயனாளிகள் யார் என்றும் தெரியவில்லை. அந்த மாடுகள் எங்கே என்றும் தெரியவில்லை. இந்தத் திட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இதில் கால்நடைத்துறை மாவட்ட அதிகாரிகளுக்கும் பங்கு உண்டு. உரிய விசாரணை மேற்கொண்டு முறைகேடு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோபத்தைக் கொப்பளித்தார்.

கூடலூர் பகுதியைச் சேர்ந்த பழங்குடி ஒருவரிடம் பேசினோம். ``நாங்க, எங்க பாட்டுக்குத்தான் இருந்தோம். இவங்களா வந்து மாடு தர்றோம்முனு எழுதிக்கிட்டு போனாங்க. அப்புறம் எலும்பும் தோலுமா ஒரு மாட்டைக் குடுத்துட்டு, போட்டோ எடுத்துட்டு போனாங்க. அது கால் லிட்டர் பால்கூட கறக்கலை.

அடுத்தடுத்து மடியும் விலையில்லா மாடுகள்
அடுத்தடுத்து மடியும் விலையில்லா மாடுகள்

ஒரு வாரத்துலயே செத்து போச்சு. எனக்காவது பரவாயில்லை. பக்கத்து ஏரியால இவங்க குடுத்த மாட்டுல மூணு மாடு முந்தா நேத்து ஒரே நைட்ல செத்துப்போச்சு. மாட்டுப் பொங்கல் அதுவுமா எங்களுக்கு இப்படி ஒரு வேதனையா? ஊரே மாட்டுப் பொங்கல் கொண்டாடிக்கிட்டு இருக்காங்க. நாங்க மாட்டுக்குக் குழி வெட்டிக்கிட்டு இருக்கோம்" எனக் கண்ணீர் வடிக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, ``பழங்குடியின மக்களுக்கு மாடு வழங்கியது தொடர்பான திட்டத்தில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் தொடர்பாக முழுமையாக அறிக்கை வரப்பெற்றுள்ளது. இது தொடர்பாக அந்தப் பணியில் ஈடுபட்ட பெண் அதிகாரி விடுவிக்கப்பட்டிருக்கிறார். அவர்மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பான அறிக்கை அந்த அதிகாரி பணியாற்றும் துறைக்கு அனுப்பப்பட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அடுத்தடுத்து மடியும் விலையில்லா மாடுகள்
அடுத்தடுத்து மடியும் விலையில்லா மாடுகள்

முறைகேட்டில் ஈடுபட்டதாகச் சொல்லப்பட்டு, பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட குறிப்பிட்ட அந்தப் பெண் அதிகாரி, தற்போது அரியலூர் மாவட்டத்தில் இதே துறையில் அதிகாரியாக பொறுப்பேற்றிருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு