Published:Updated:

`5 லட்சம் ஓட்டு பெருசா... 5 ஆயிரம் ஓட்டு பெருசா?’ - பள்ளி விழாவில் திமுக, அதிமுக-வினர் வாக்குவாதம்

எம்.எல்.ஏ சித்ரா

மேடையில் சிறப்பு விருந்தினர்களை வரவேற்ற பள்ளி ஆசிரியர் ஒருவர் சட்டமன்ற உறுப்பினர் பெயரைக் குறிப்பிடாமல், முன்னதாக மாவட்ட கவுன்சிலர் பெயரைக் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

`5 லட்சம் ஓட்டு பெருசா... 5 ஆயிரம் ஓட்டு பெருசா?’ - பள்ளி விழாவில் திமுக, அதிமுக-வினர் வாக்குவாதம்

மேடையில் சிறப்பு விருந்தினர்களை வரவேற்ற பள்ளி ஆசிரியர் ஒருவர் சட்டமன்ற உறுப்பினர் பெயரைக் குறிப்பிடாமல், முன்னதாக மாவட்ட கவுன்சிலர் பெயரைக் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

Published:Updated:
எம்.எல்.ஏ சித்ரா

சேலம், ஏற்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவுக்குத் தலைமை தாங்க ஏற்காடு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சித்ரா, ஏற்காடு ஊராட்சி மன்றத் தலைவர் சிவசக்தி, திமுக-வைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் புஸ்பராணி மற்றும் திமுக கவுன்சிலர்களுக்குப் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது . இலவச சைக்கிளுக்காக 43 மாணவ, மாணவிகள் காத்திருந்தனர்.

இந்த நிலையில் திமுக மற்றும் அதிமுக இரு தரப்பினரும் விழாவுக்கு வந்ததால் யாருக்கு முன்னுரிமை கொடுப்பது, யார் சைக்கிள் வழங்குவது என வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் மேடையில் சிறப்பு விருந்தினர்களை வரவேற்ற பள்ளி ஆசிரியர் ஒருவர், சட்டமன்ற உறுப்பினர் பெயரைக் குறிப்பிடுவதற்கு முன்பு, மாவட்ட கவுன்சிலர் பெயரைக் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக சைக்கிள் நிகழ்ச்சி தாமதமாக, மாணவ, மாணவிகள் வெகு நேரம் வெயிலில் காத்திருந்தனர். ‌இதைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் தரப்பினர், `எம்.எல்.ஏ-வை அவமானப்படுத்தும் வகையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக’க் கூறி பள்ளித் தலைமை ஆசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது எம்.எல்.ஏ-வின் ஆதரவாளரான மாயவன் என்பவர் தலைமையாசிரியரிடம், `5 லட்சம் ஓட்டு வாங்கி எம்.எல்.ஏ-வானவங்க பெருசா, வெறும் 5 ஆயிரம் ஓட்டு வாங்குனவங்க பெருசா?’ என்று பேசியதால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றியது.

அதன் பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியை, பள்ளிக் குழந்தைகளை வெகு நேரம் காக்க வைக்க வேண்டாம் என்று கூறி உடனடியாக அங்கு காத்திருந்த மாணவர்களை அழைத்து சைக்கிளைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்துபோகச் செய்தார்.

`5 லட்சம் ஓட்டு பெருசா... 5 ஆயிரம் ஓட்டு பெருசா?’ - பள்ளி விழாவில் திமுக, அதிமுக-வினர் வாக்குவாதம்

இது குறித்து ஏற்காடு அதிமுக எம்.எல்.ஏ சித்ராவிடம் பேசியபோது, ``சைக்கிள் வழங்கும் விழாவுக்கு உரிய நேரத்தில் வராமல் காலம் தாழ்த்தியது தி.மு.க-வினர்தான். அதுவும், வந்தவுடனே ஏன், அதிமுக-வினரை இந்த நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டீங்கனு தலைமையாசிரியரிடம் சண்டைக்குப் போறாங்க. அதுமட்டுமில்லாம சைக்கிளை நாங்கதான் கொடுப்போம்னு சர்ச்சையை ஏற்படுத்துற மாதிரி பேசினாங்க” என்றார்.

மேலும் தி.மு.க ஒன்றியச் செயலாளர் ராஜாவிடம் பேசியபோது, “பள்ளி நிகழ்ச்சியை 3 மணிக்கு ஆரம்பிப்பதாகக் கூறித்தான் தலைமையாசிரியர் எங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் இவர்கள் முன்னதாக வந்துவிட்டு பிரச்னை செய்யும் நோக்கில் பேசினர். மாணவர்கள் நீண்ட நேரமாக வெயிலில் நின்றதாகக் கூறப்படுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது” என்றார்.

தி.மு.க ஒன்றியச் செயலாளர் ராஜா
தி.மு.க ஒன்றியச் செயலாளர் ராஜா

மேலும் இது தொடர்பாக பள்ளித் தலைமையாசிரியர் மாலதி பேசியபோது, ``பள்ளி நிகழ்ச்சிக்கு இரு தரப்பினரையும் அழைத்ததே மற்ற பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக இரு கட்சியினரும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க வந்துள்ளனர் என்ற நல்ல எண்ணத்தில்தான். ஆனால் சிலர் தேவையில்லாமல் பேசி இந்த நிகழ்ச்சியை திசைதிருப்பிவிட்டனர். மாணவர்களுக்கு தேர்வு நடந்துவருவதால் மதியவேளையில் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியை வைத்துக்கொள்ளலாம் என்றுதான் சிறப்பு விருந்தினர்களை 3 மணியளவில் வருமாறு அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால் முன்னதாகவே எம்.எல்.ஏ வந்துவிட்டார். அதன் பிறகு தி.மு.க-வைச் சேர்ந்த கவுன்சிலர்கள் வந்தனர். இதற்கிடையில் அவர்களுக்குள் யார் இவங்களையெல்லாம் கூப்பிட்டது என்று வார்த்தைகளை விடவும் அது பிரச்னையாக மாறியது” என்றார்.