Published:Updated:

`உடைந்த ஃபிரிட்ஜ் கண்ணாடி; உயிரை விட்ட மாணவன்!’ - தம்பி கண்முன்னால் நேர்ந்த சோகம்

Representational Image
Representational Image

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் ஃபிரிட்ஜ், கண்ணாடி உடைந்த சம்பவத்தில் பெற்றோர் திட்டுவார்கள் எனப் பயந்த மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிழக்குக் கடற்கரை சாலை நீலாங்கரையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பெத்தேல்நகரைச் சேர்ந்தவர் பூபாலன் (38). லேத் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி உஷா (35). வீட்டு வேலை செய்து வருகிறார். இந்தத் தம்பதிக்கு தஷ்வந்த் (11), பிரமோத் (9) என 2 மகன்கள். வழக்கம் போல இன்று பூபாலனும் உஷாவும் வேலைக்குச் சென்றுவிட்டனர். வீட்டில் தஷ்வந்த், பிரமோத் ஆகிய இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்தச் சமயத்தில் வீட்டிலிருந்த ஃபிரிட்ஜின் கதவைத் தஷ்வந்த் திறந்துள்ளார். அப்போது ஃபிரிட்ஜ்ஜில் பொருள்களை வைக்கப்பயன்படுத்தப்படும் கண்ணாடி ட்ரே, கை தவறி கீழே விழுந்து உடைந்துள்ளது.

Representational Image
Representational Image
`எந்தப் பெண்ணுக்கும் இந்த நிலை வரக்கூடாது' -திருமணமான 11 மாதத்தில் விபரீத முடிவெடுத்த மனைவி

அதைப்பார்த்த தஷ்வந்த் அதிர்ச்சியடைந்தார். பின்னர், அவர் சோகமாகவே இருந்துள்ளார். தஷ்வந்த், தன்னுடைய தம்பியிடம் `அம்மா, அப்பா வீட்டுக்கு வந்தால் நிச்சயம் என்னை அடிப்பார்கள், என்ன செய்வது என்று தெரியவில்லை' என்று புலம்பியபடி அழுதுகொண்டே இருந்துள்ளார்.

இதையடுத்து பெற்றோருக்குப் பயந்து தற்கொலை செய்து கொள்ள தஷ்வந்த் முடிவு செய்துள்ளார். உடனே வீட்டிலிருந்த நைலான் கயிற்றை எடுத்து மின்விசிறியில் தொங்கவிட்டுள்ளார். அதைப்பார்த்த பிரமோத், அண்ணனைச் சத்தம் போட்டுள்ளார். ஃபிரிட்ஜ் கண்ணாடி உடைந்ததற்காக அம்மாவும் அப்பாவும் அடிக்க மாட்டார்கள் என அண்ணனுக்கு ஆறுதல் கூறியுள்ளார். இந்தச் சமயத்தில் கழிவறைக்கு பிரமோத் சென்றுள்ளார். உடனே மீண்டும் மின்விசிறியில் கயிற்றைப் போட்டு தஷ்வந்த் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது.

மாதிரிப் படம்
மாதிரிப் படம்
கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து தற்கொலை! -சென்னையில் அதிர்ச்சி #Corona

கழிவறைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பிரமோத், அண்ணன் தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்துள்ளனர். தஷ்வந்த்தை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில் தஷ்வந்த்தின் தற்கொலை குறித்து அவரின் பெற்றோருக்கும் நீலாங்கரை காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தஷ்வந்த்தின் சடலத்தைப் பார்த்து அவரின் பெற்றோர் கதறி அழுதனர்.

நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீஸார் தஷ்வந்த்தின் சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், நடந்த சம்பவம் குறித்து பிரமோத்திடம் விசாரித்தனர். அப்போது அவர் மழலை மொழியில் நடந்த விவரத்தைக் கூறியுள்ளார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``அண்ணனும் தம்பியும் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்துள்ளனர். அப்போது தஷ்வந்த், ஃபிரிட்ஜை திறந்துள்ளார்.

மாணவன் தஷ்வந்த்
மாணவன் தஷ்வந்த்

அப்போது ஃபிரிட்ஜ்ஜின் ட்ரே கண்ணாடி கீழே விழுந்து உடைந்துள்ளது. அதனால் மனமுடைந்த தஷ்வந்த், கட்டில் மேல் ஏறி மின்விசிறியில் நைலான் கயிற்றைப் போட முயற்சி செய்துள்ளார். அப்போது அவரால் கயிற்றைப் போட முடியவில்லை. அதனால் கட்டிலின் மேல் உயரத்துக்கு சேர் மற்றும் தலையணையை வைத்து கயிற்றை மின்விசியில் போட்டுள்ளார். பின்னர் அவர் தற்கொலை செய்துள்ளார்" என்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், `தற்கொலை செய்து கொண்ட தஷ்வ்ந்த், அந்தப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து விட்டு 6-ம் வகுப்பு செல்ல இருந்தார். சுட்டிப் பையனான அவன், எல்லோரிடமும் அன்பாகப் பேசுவான். அவன், தற்கொலை செய்துகொண்டதை எங்களால் மனதளவில் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என்றனர் கண்ணீருடன்.

அடுத்த கட்டுரைக்கு