தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாகக் கொட்டித்தீர்த்த கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில், மங்கலம் , ஆத்துமூடு, காரணி, மணலி உள்ளிட்ட ஒன்பது கிராமங்கள் மழையால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்திருக்கின்றன. இந்த கிராமங்களில் மக்கள் வேலைகளுக்கும், பள்ளி கல்லூரிகளுக்கும் ஆரணி ஆற்றைக் கடந்துதான் செல்லவேண்டும். ஆனால், மழைக்காலங்களில் ஆறு நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால், ஆபத்தான முறையில் பரிசலில் பயணித்து ஆற்றைக் கடந்து செல்கிறார்கள்.

அந்த வகையில், இந்த வடகிழக்கு பருவமழைக்கும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால், பள்ளி கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் பரிசல் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். இது தொடர்பாக, ஆரணி ஆற்றில் பரிசல் இயக்கிக் கொண்டிருக்கும் மங்கவரதம் நம்மிடம் பேசினார். ``ஏறக்குறைய 1,000 பேர் தினமும் வருவாங்க. லீவு நாள் மாதிரி ஒண்ணுமே இல்லைனாலும் 200 பேராச்சும் வருவாங்க. தண்ணி அதிகமா இருக்கறதால பஞ்சாயத்துல பரிசல் ஏற்பாடு பண்ணாங்க. கடந்த 3 வாரமா நாங்க இந்தத்தொழில்தான் செஞ்சுட்டு வரோம்” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அந்த ஏரியைப் பரிசலில் கடக்காமல் இரு சக்கர வாகனத்தில் கடக்க வேண்டும் என்றால், சுமார் 12 கி.மீ கடந்து செல்லவேண்டும். மங்களம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் இது தொடர்பாக நம்மிடம் பேசுகையில், ``மங்களத்தில் விவசாயம் செய்கிறேன். எங்கள் ஊரில் பெரும்பாலும் அனைவரும் விவசாயம்தான் செய்கிறார்கள். ஆரணியில் ஆற்றுக்கு அந்த பகுதியில் தான் 6-ம் வகுப்பு வரை படிக்கப் பள்ளி உள்ளது. அதனால் குழந்தைகள் ஆரணிக்குப் படிக்கச் செல்வார்கள். காலை 6 மணிக்குப் பரிசல் சவாரி தொடங்கும். சாயங்காலம் 7 மணி வரை இருக்கும். ஒவ்வொரு வருடமும் மழைக்காலங்களில் அரசாங்கம் பரிசல் சவாரிக்கு ஏற்பாடு செய்கிறதே தவிர, இதற்கு நிரந்தர தீர்வு காணும் முயற்சிகளை மேற்கொள்வதில்லை” என்றார்.

ஆரணியிலிருக்கும் தனியார்ப் பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவர் ஜெயகணேஷிடம் பேசினோம். ``என் வீடு மங்கலம் கிராமத்திலிருக்கிறது. அங்கிருந்து பள்ளிக்குச் சைக்கிளில் செல்வேன். ஆனால் மழையால் ஏரி நிறைந்து விட்டதால், பரிசலில் தான் செல்கிறேன். இதைக்கடக்க ஒரு பாலம் இருந்தால் சுலபமாக இருக்கும்” என்றார்.

கடும் சிரமத்துக்கு மத்தியில் ஆபத்தான முறையில் பரிசல் மூலம் ஆற்றைக் கடக்கும் மக்கள், இரவு 7 மணிக்கு மேல் பரிசல் சேவையும் நிறுத்தப்பட்டு விடுவதால், அவசர மருத்துவத் தேவைகளுக்குக் கூட மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் பரிதவிக்கின்றனர்.
9 கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம், உடனடியாக பாலம் அமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.