போதிய பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் படியில் தொங்கியபடி பயணிக்கும் மாணவர்கள் ஒருபுறமிருக்க, பேருந்துக்குள் இடம் இருந்தாலும் படியில் நின்றுகொண்டும், ஜன்னலில் பின்புற ஏணியில் தொங்கியபடியும், மேற்கூரையில் அமர்ந்தபடியும் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு காலத்தில் கல்லூரி மாணவர்கள் செய்து வந்தததை தற்போது பள்ளி மாணவர்களும் செய்யத்தொடங்கிவிட்டனர். இதுமட்டுமல்லாமல் பேருந்துக்குள்ளே வர அறிவுத்தும், நடத்துநர், ஓட்டுநர்களை பள்ளி மாணவர்கள் கூட்டாக சேர்ந்து தாக்கும் காணொலிகளும் சமூக வலைதளங்களில் பரவி, பார்ப்பவர்களை கவலைகொள்ளச் செய்கின்றன.

கடந்த மார்ச் 24-ம் தேதி, சென்னை பெரம்பூர் அருகே மாநகரப்பேருந்து ஒன்றில் ஏறிய பள்ளி மாணவர்கள், படிக்கட்டில் தொங்கியும், பேருந்தின் மேற்கூரையில் ஏறியும் ரகளையில் ஈடுபட்டிருக்கின்றனர். இதைக்கண்டித்த நடத்துநர், ஓட்டுநர் பேருந்தை பாதி வழியில் நிறுத்தி ரகளையில் ஈடுபட்ட மாணவர்களை கீழே இறக்கிவிட்டதுடன், போக்குவரத்து காவல்துறையினருக்கு தகவலும் தெரிவித்திருக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், நடத்துநர் காளிதாஸை சரமாரியாக கன்னத்தில் அறைந்துவிட்டு தப்பியோடியிருக்கின்றனர். பின்னர், ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நான்கு +2 மாணவர்களைப் பிடித்து, எச்சரித்து அனுப்பியிருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅதேபோல, கடந்த மார்ச் 29-ம் தேதி, கும்பகோணம் அருகே அரசுப் பேருந்தில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை உள்ளே வர அறிவுறுத்திய நடத்துநர், ஓட்டுநரை மாணவர்கள் கூட்டாக சேர்ந்து தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. புதுக்கோட்டை, திண்டுக்கல் வேடசந்தூர், வடமதுரை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணிக்கும் வீடியோக்கள் அடுத்தடுத்து சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின.

பேருந்துகள் மட்டுமல்லாமல், சென்னையில் இயங்கும் மின்சார ரயில்களிலும் மாணவர்கள் மட்டுமல்லாது மாணவிகளும் சேர்ந்து படிக்கட்டில் தொங்கியும், ஒரு காலை ரயில் படிக்கட்டில் வைத்தும் மற்றொரு காலை ரயில்வே நடைபாதை தரையில் தேய்த்தபடியும் சாகசப் பயணம் செய்யும் வீடியோக்களும் அவ்வப்போது இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பிவருகின்றன.

உச்சபட்சமாக, கடந்த மார்ச் 22-ம் தேதி செங்கல்பட்டு அருகே அரசுப்பேருந்தில் பயணித்த மாணவ, மாணவிகள் இருபாலரும் கூட்டாகச்சேர்ந்து மது அருந்தியபடி ரகளையில் ஈடுபடும் வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து பள்ளி மாணவர்களால் நிகழ்த்தப்படும் இதுமாதிரியான சம்பவங்கள் பொதுமக்களுக்கும், பேருந்தில் பயணிக்கும் சக பயணிகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தச் சம்பவங்கள் குறித்து கருத்துதெரிவிக்கும் சமூகச் செயற்பாட்டாளர்கள், குழந்தைகள் நல ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள், `அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், பேருந்து வசதி குறைவாக உள்ள பகுதிகளில் கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டும்' என அரசுக்குக் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஏற்கெனவே, கடந்த ஆண்டு டிசம்பரில், சென்னை அருகே மின்சார ரயிலில் ஒரு மாணவனும், ஒரு மாணவியும் சேர்ந்து ஓடி வந்து ஏறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து மாணவர்கள் பேருந்துப் படிக்கட்டில் பயணம் செய்தால் சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால், படிக்கட்டில் மாணவர்கள் தொங்கிச்செல்வதை தட்டிக்கேட்டால் தாங்களே தாக்குதலுக்குள்ளாகிறோம் என ஓட்டுநர், நடத்துநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், இதுகுறித்து பதிலளித்துப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ``பள்ளி மாணவர்கள் சரியான நேரத்தில் பேருந்தில் பயணம் மேற்கொண்டால் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால், ஒரு சில பள்ளி மாணவர்கள் ஸ்டைலாக செல்வதாக நினைத்துக்கொண்டு பேருந்தின் படியில் தொங்கிக் கொண்டும், பேருந்துகளின் பின்னால் ஓடிச்சென்று ஏணியிலும் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றார்கள்.'' என கருத்து தெரிவித்தார்.

மேலும், `` அப்படிப் பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்வதைக் கண்டால் உடனே நடத்துநர்கள் பேருந்தை நிறுத்தி, அவர்களை கீழே இறக்கிவிட வேண்டும்! மேலும் இதற்கு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களையே குறைகூறி கொண்டிருக்கக்கூடாது. பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும்!" எனவும் அறிவுறுத்தியிருக்கிறார்.