தமிழகத்தில் கடந்த சில நாள்களாக அரசுப் பள்ளி மாணவர்களின் செயல்பாடுகள் தலைப்பு செய்திகளாக வந்தபடி இருக்கின்றன. மாணவர்களின் இத்தகைய செயல்கள் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது. வகுப்பறையில் ஆசிரியர்களை அவமரியாதை செய்வது, அவர்கள் முன் மரியாதையின்றி நடனமாடுவது, சக மாணவர்களை ரேகிங் செய்வது என ஒழுக்கக் கேடான செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவது தொடர்கதையாகி இருக்கிறது. பள்ளி வளாகத்துக்குள் இத்தகைய ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள், பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் மேற்கொள்வது, சில சமயங்களில் அவர்கள் உயிருக்கே ஆபத்தாகவும் முடிந்து விடுகிறது.
மாணவ-மாணவிகள் பள்ளி செல்லும் நேரங்களிலும், அங்கிருந்து வீடு திரும்பும் நேரங்களிலும் அவர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதி இல்லாததால், ஒரே பேருந்தில் அனைவரும் சேர்ந்து பயணிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்று ஜன்னலைப் பிடித்துக்கொண்டு தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றனர்.

மாணவர்கள் இத்தகைய பயணத்தை ஹீரோயிசமாகக் கருதிப் பயணிப்பது, அவர்களின் அறியாமையை வெளிப்படுத்துகிறது. ஆனால், இவ்வாறு அலட்சியமாகப் பயணிப்பதால் உருவாகக்கூடிய ஆபத்தான விளைவுகளை அவர்கள் உணர மறுக்கிறார்கள்.
ஆபத்தை உணராமல் பேருந்தின் படிக்கட்டுகளில் நின்றவாறு பயணிக்கும் மாணவர்களால் பல விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் ஏற்படும் பாதிப்பு மாணவர்களுக்கு மட்டும் இல்லை அந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோருக்கும்தான்.
பல நேரங்களில் பேருந்துகள் நெரிசலின்றி வரும்போதும், மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடிதான் பயணம் செய்கிறார்கள். இதனைப் பேருந்தில் பயணிக்கக்கூடிய சக பயணிகளும், நடத்துநரும் கேட்டால், அவர்களுடன் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
சில சமயங்களில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கும்போது, பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டு மாணவர்கள் பேருந்தினுள் சென்றால்தான் பேருந்தை இயக்குவேன் எனக் கூறுவதும் உண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதனைத் தடுக்க சம்பந்தப்பட்ட மாணவர்கள் குறித்து அவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கும், தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கவனத்துக்கும் பல முறை கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இருப்பினும் பல மாணவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் இன்னும் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள்.
பேருந்து படிக்கட்டுகளில் பயணிப்பது உயிருக்கே ஆபத்தாக முடியும் என விழிப்பு உணர்வு பிரசாரங்கள் மூலம் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டாலும், அதைப் பலரும் ஏற்றுக்கொள்வதில்லை.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதும் மாணவர்களின் இத்தகைய செயல்களுக்குக் காரணம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
அதனால், பள்ளிக் கல்லூரி நேரங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.