Published:Updated:

இறந்தபிறகும் மரியாதை வேண்டும்! கொரோனாவால் இறந்த 35 பேர்; இறுதிச் சடங்கில் உதவும் அமைப்பு

கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை தூக்கி வரும் எஸ்டிபிஐயினர்
கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை தூக்கி வரும் எஸ்டிபிஐயினர்

சென்னை டாக்டர் மரணம், புதுச்சேரி சம்பவத்துக்குப் பிறகுதான் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களுக்கு உரிய மரியாதை செலுத்தி அடக்கம் செய்து வருகிறோம் என்கின்றனர் எஸ்டிபிஐ நிர்வாகிகள்.

கொரோனா மரணங்கள்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை சுகாதாரத்துறையினர், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் அடக்கம் செய்துவருகின்றனர். இறந்தவரின் உறவினர்கள்கூட இறுதி அஞ்சலி செலுத்த முடியாத சூழல் நிலவுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அடக்கம், தகனம் செய்யப்படுகின்றன. சென்னையைச் சேர்ந்த டாக்டர் ஒருவரின் சடலத்தை கீழ்ப்பாக்கத்தில் அடக்கம் செய்யவிடாமல் சிலர் தடுத்தனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு வேலங்காடு மயானத்தில் டாக்டரின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.

அடக்கம் செய்யும் எஸ்டிபிஐயினர்
அடக்கம் செய்யும் எஸ்டிபிஐயினர்

இதையடுத்து புதுச்சேரியில் கொரோனாவால் இறந்தவரின் சடலம் குழிக்குள் வீசப்பட்டது. அதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. கொரோனா மரணங்களால் மனிதநேயம் மரணித்து விட்ட சூழலில் தன்னார்வத்துடன் எஸ்டிபிஐ கட்சியினர் கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம், தகனம் செய்துவருகின்றனர். இதுவரை தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் 35 சடலங்களை அடக்கம், தகனம் செய்துள்ளதாக எஸ்.டி.பி.ஐ-யின் மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் ஏ.கே. கரீம் நம்மிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நம்மிடம் கூறுகையில், ``கொரோனாவால் இறந்த சென்னை டாக்டரின் சடலத்தை அடக்கம் செய்ய எதிர்ப்புகள் கிளம்பியபோதே எங்கள் கட்சியில் அதுதொடர்பாக ஆலோசனை நடத்தினோம். சமீபத்தில் புதுச்சேரியில் கொரோனாவால் இறந்தவரின் சடலம் வீசிய சம்பவத்துக்குப் பிறகுதான் எஸ்.டி.பி.ஐ- சார்பில் சடலங்களை அடக்கம், தகனம் செய்ய முடிவு செய்தோம். இதையடுத்து ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகள் மூலம் இந்தப் பணிகளை சேவையாக செய்துவருகிறோம்.

`இறைவனுக்குத்தான் தெரியும்!’ -கொரோனா முடிவுக்கு வருவது குறித்து முதல்வர் பழனிசாமி
அடக்கம் செய்யும் எஸ்டிபிஐ-யினர்
அடக்கம் செய்யும் எஸ்டிபிஐ-யினர்

கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய முடியாமல் தவிப்பவர்கள் எங்களின் மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டால் அவர்களின் விருப்பப்படியும் குலவழக்கப்படியும் இறுதி அஞ்சலியை செலுத்திவருகிறோம். உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டியபடி தனிமனித கவச உடைகளை அணிந்து செல்லும் எஸ்டிபிஐ-யின் நிர்வாகிகள் தங்களின் உயிரையும் பணயம் வைத்து இந்தச் சேவையை செய்துவருகின்றனர்.

தனிமனித கவச உடை மட்டுமல்லாமல் அணிந்திருக்கும் ஆடைகளையும் அகற்றிவிடுவோம். இதற்கான செலவை எஸ்டிபிஐ ஏற்றுக்கொள்கிறது. மேலும் இந்தச் சேவைக்கு சிலரும் உதவி செய்துவருகின்றனர். கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களுக்கு உறவினர்கள்கூட இறுதி மரியாதை செலுத்த முடியாத மனவேதனையில் இருந்துவருகின்றனர். இறந்தபிறகும் அவர்களுக்குரிய மரியாதையை செலுத்த வேண்டும் என்றுதான் இந்தச் சேவையில் ஈடுபட்டுவருகிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு