Published:Updated:

தலைமைச் செயலகத்தில் மீண்டும் மரம் முறிந்து விழுந்தது! - உடனே அப்புறப்படுத்திய பணியாளர்கள்

புது பில்டிங் அருகே 6 மரங்கள், முதல்வர் சேம்பர் வழியில் 4 மரங்கள், வாகனங்கள் நிறுத்தப்படும் பகுதியில் 3 மரங்கள்... என 13 மரங்கள் பழைமையானவை. அவற்றில் பல மரங்களின் உள் பகுதிகளை பூச்சி அரித்துவிட்டதாம்.

தலைமைச் செயலகத்தில் ஒருமரம் விழுந்து, பெண் காவலர் ஒருவர் இறந்துவிட்டார். அடுத்த மரம் தற்போது விழுந்துவிட்டது. நல்லவேளையாக யாருக்கும் சேதமில்லை. மூன்றாவது மரம் விழுவதற்குள் முதல்வர் கவனிப்பாரா என்கிற வினா சென்னை தலைமைச் செயலக அதிகாரிகள் மத்தியில் பேசப்படுகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குக்கூட தெரிவிக்காமல் விழுந்த மரத்தைப் படுவேகமாக அப்புறப்படுத்தி, சுத்தம் செய்துவிட்டனராம் அதிகாரிகள்.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

தினமும் நான்காயிரம் பணியாளர்கள், ஆயிரக்கணக்கில் விசிட்டர்கள் என்று பிஸியாக இயங்குகிறது தலைமைச் செயலகம். முதல்வரின் தனிப்பிரிவு அலுவலக வளாகத்தில் கோரிக்கை மனு கொடுக்க பல ஊர்களிலிருந்தும் மக்கள் வருவார்கள். அந்த இடத்துக்கு அருகே இருந்த பழைமையான மரம் நவம்பர் 2-ம் தேதியன்று அடைமழை நேரத்தில் திடீரென விழுந்தது. அங்கே நின்றிருந்த பெண் போலீஸ் பரிதாபமாக இறந்தார். இருவர் படுகாயமடைந்தார்கள்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகும், நவம்பர் 10-ம் தேதி காலை 8:30 மணி அளவில் தலைமைச் செயலகப் பணியாளர்கள், விசிட்டர்கள் அவர்களது இருசக்கர வானங்களை பார்க்கிங் செய்யும் இடத்தருகே இருந்த பெரிய மரம் ஒன்று சாய்ந்தது. அந்த மரம் விழுந்த இடத்தருகே கேன்டீன், வங்கி ஒன்றும் உள்ளன. அலுவலக நேரமாக இருந்திருந்தால், வாகனங்கள் அல்லது மனிதர்கள்மீது விழுந்திருக்கும். நல்லவேளையாக அப்படி ஏதும் அசம்பாவிதம் நடக்கவில்லை.

விழுந்த மரம்
விழுந்த மரம்

மரம் விழுந்த தகவல் தெரிந்தவுடன், தலைமைச் செயலக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, பணியாளர்கள் பணிக்கு வரும்முன்பே, இயந்திரங்களின் உதவியுடன் அந்த மரத்தை அப்புறப்படுத்திவிட்டார்கள். இது பற்றி வெளியில் யாருக்கும் தகவல் சொல்லாமல் அடக்கிவாசித்தனர். இருந்தபோதிலும், இது தொடர்பான தகவலும் படங்களும் நமக்குக் கிடைத்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிங்காரச் சென்னை... மழை பெய்தால் தீவு... என்னதான் தீர்வு?

இன்னும் எத்தனை மரங்கள் இப்படி விழும் நிலையில் நிற்கின்றன?

ராணுவத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது தலைமைச் செயலகம். அங்குள்ள மரங்கள், கட்டடங்களை மத்திய தொல்லியல்துறை, தமிழக அரசுத் தரப்பில் பொதுத்துறையின் பில்டிங் பிரிவு, தோட்டக்கலைத்துறை எனப் பல்வேறு துறைகள் தலைமைச் செயலக வளாகத்திலுள்ள பில்டிங்குகள், மரங்கள் அனைத்தையும் கண்காணிக்கும் பணியைச் செய்துவருகின்றன. பெயரளவில்தான் இவை இருக்கின்றனவே தவிர, இந்தத் துறையினர் இடையே ஒருங்கிணைப்பு இல்லை. அதனால்தான், அடுத்தடுத்து மரங்கள விழுகின்றன என்கிறார்கள் தலைமைச் செயலகப் பணியாளர்கள்.

தலைமைச் செயலகத்தில் விழுந்த மரம்
தலைமைச் செயலகத்தில் விழுந்த மரம்

புது பில்டிங் அருகே 6 மரங்கள், முதல்வர் சேம்பர் வழியில் 4 மரங்கள், வாகனங்கள் நிறுத்தப்படும் பகுதியில் 3 மரங்கள்... என 13 மரங்கள் பழைமையானவை. அவற்றில் பல மரங்களின் உள் பகுதிகளை பூச்சி அரித்துவிட்டதாம். அதனால், ஸ்திரத்தன்மை இழந்து நிற்கின்றனவாம். இவற்றை யார் பராமரிப்பது, யார் நடவடிக்கை எடுப்பது என்கிற கச்சேரி தலைமைச் செயலக வளாகத்தில் உரக்கக் கேட்கிறது.

இது பற்றி தலைமைச் செயலக உயரதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ``இன்று (நவம்பர் 11) காலைகூட ரவுண்ட்ஸ் போனோம். சில மரங்களின் கிளைகள் சரிந்துகிடந்தன. வேறு சில மரங்கள் தாழ்வாக இருந்தன. அவற்றையெல்லாம் முன்னெச்சரிக்கையாக அப்புறப்படுத்தினோம். மழையும் காற்றும் பலமாக வீசுவதால் மரங்கள் விழுகின்றன. உடனுக்குடன் நடவடிக்கை எடுத்துவருகிறோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு