Published:Updated:

`தமிழகத்தில் உச்சநிலை; இரண்டாவது அலைக்கும் வாய்ப்பு!’ - மருத்துவ நிபுணர்கள் குழு

மருத்துவ நிபுணர்கள் குழு
மருத்துவ நிபுணர்கள் குழு

``முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல் மற்றும் எச்சில் உமிழாமல் இருப்பது போன்ற வழிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்காதது வரை இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்.”

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. தமிழகத்தில் நேற்று மட்டும் 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,661 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 1,415 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,896 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் 435-ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

 முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் மருத்துவ நிபுணர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``நோய் பரவலைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து நாங்கள் ஆலோசித்தோம். எந்தவொரு வைரஸ் தொற்று பாதிப்பும் அதன் உச்சநிலையை அடைந்த பிறகுதான் படிப்படியாகக் குறையும். தற்போது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சநிலையை அடைந்துள்ளது. இனிமேல் இந்த பாதிப்புகள் குறையத் தொடங்கும். உச்சநிலையை அடையும்போது அதிகமான பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். சென்னையில் அதிகமான பாதிப்புகள் ஏற்படுவதால், இங்கு பரிசோதனைகளை அதிகரித்து வருகிறோம். சென்னையில் மட்டும் 17,500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகம் முழுவதும் 75,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 5,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் 12,500 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சுமார் 253 நடமாடும் மருத்துவமனைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆக்ஸிஜன் சிலிண்டர் தொடர்பான கூடுதல் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன” என்றனர்.

`தலைமைச் செயலக ஊழியர்; முதல்வர் நிகழ்ச்சிகளை கவர் செய்தவர்!’- அரசு புகைப்படக் கலைஞருக்குக் கொரோனா

``முதல் அலை குறைந்தால்கூட மூன்று மாதங்கள் கழித்து இரண்டாவது அலை உருவாக வாய்ப்பு உள்ளது. மக்களிடம் அச்சம் அதிகமாக உள்ளது. ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றவில்லை. சிறிய அளவில் அறிகுறிகள் இருந்தால்கூட வைரஸ் தொற்று இருக்கலாம். எனவே, மக்கள் அதை அலட்சியப்படுத்த வேண்டாம். தனிமைப்படுத்துதலில் இருப்பது அவசியம்” என்றும் கூறினர்.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்ட மருத்துவர்கள், `` பரிசோதனைகள் அதிகரித்தால் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகும். இறப்பு எண்ணிக்கையைக் குறைக்க முயற்சி செய்து வருகிறோம். நீரிழிவு, ரத்த அழுத்தம், டி.பி மற்றும் புற்றுநோயால் பாதிப்படைந்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அதிகளவில் இறப்பதால் அவர்களுக்கான சிகிச்சை முறைகளை மேம்படுத்தியுள்ளோம்” என்று கூறினர்.

மருத்துவ நிபுணர்கள் குழு
மருத்துவ நிபுணர்கள் குழு

அதேபோல, சென்னை அதிகமாக பாதிப்படைந்துள்ளதால் மருத்துவ ரீதியிலான அனைத்து நடவடிக்கைகளும் கூடுதலாக இங்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னையில் லாக் டௌன் தொடர்பான நடவடிக்கைகளைக் கடுமையாக்குவது குறித்தும் முதல்வருக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

தமிழகத்தில் இறப்புகள் அதிகமாவது குறித்து பேசிய மருத்துவர்கள், ``பாதிப்பு எண்ணிக்கைகள் அதிகரிக்கும்போது இறப்புகள் அதிகமாகும் என்பது முதலிலேயே தெரிந்ததுதான். அரசின் நடவடிக்கைகளால் மட்டும் இந்த பாதிப்புகள் குறையப்போவது இல்லை. முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல் மற்றும் எச்சில் உமிழாமல் இருப்பது போன்ற வழிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்காதது வரை இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்.

மருத்துவர்கள்
மருத்துவர்கள்
`அது மத்திய அரசின் திட்டம்; மாநில அரசு உதவுகிறது’ - 8 வழிச்சாலை குறித்து முதல்வர் பழனிசாமி
அடுத்த கட்டுரைக்கு