Published:Updated:

சீர்காழி அருகே கரை ஒதுங்கிய இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டு!

வெடிகுண்டு
வெடிகுண்டு

துருப்பிடித்திருந்த காரணத்தினால் அது எந்த நாட்டின் தயாரிப்பு என்பது தெரியவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

சீர்காழி அருகே கரை ஒதுங்கிய மர்மப் பொருளை ஆய்வு செய்த அதிகாரிகள், அது இரண்டாம் உலகப் போரின்போது தயாரிக்கப்பட்ட வெடிகுண்டாக இருக்கலாம் என்று தெரிவித்தனர்.

வெடிகுண்டு
வெடிகுண்டு

நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கடற்கரையில் கடந்த ஏப்ரல் மாதம் 15 -ம் தேதி சிலிண்டர் வடிவிலான மர்மப்பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் உடனடியாக சீர்காழி காவல் நிலையம் மற்றும் கடலோரக் காவல் படையினருக்குத் தகவல் தந்தனர். விரைந்து வந்த போலீஸார் அந்த மர்மப் பொருளைக் கைப்பற்றிப் பாதுகாப்பான இடத்தில் மண்ணில் புதைத்து வைத்தனர்.

இந்நிலையில் திருச்சி மற்றும் நாகப்பட்டினத்திலிருந்து வெடிகுண்டு நிபுணர் குழுவினர் வரவழைக்கப்பட்டு, அந்த மர்மப் பொருளைச் சோதனை செய்தனர். அப்போதுதான் அவர்களுக்கு அந்த மர்மப் பொருளின் விபரீதம் தெரிந்தது. அந்த மர்மப் பொருள் விமானம், கப்பல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் உள்ளிட்ட எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கப் பயன்படும் வெடிகுண்டு என்றும், வாயு மற்றும் வெடி மருந்துகளுடன் கலந்து வெடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு என்றும் தெரியவந்தது. இந்த வகை வெடிகுண்டுகள் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டது என்றும், துருப்பிடித்திருந்த காரணத்தினால் அது எந்த நாட்டின் தயாரிப்பு என்று தெரியவில்லை என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.

வெடிகுண்டு
வெடிகுண்டு

இந்நிலையில் இத்தகைய பயங்கர வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கை வெடிகுண்டு நிபுணர்களால் திருமுல்லைவாசல் கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டது. அந்த வெடிகுண்டை மண்ணுக்கு அடியில் பாதுகாப்பாக வைத்து மின்சார பேட்டரி இணைப்புகளுடன் இணைப்புகள் தந்து வெடிக்கச் செய்தனர். பொதுமக்கள் சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் நிறுத்தப்பட்டனர். இதனையடுத்து பெரும் புகை மண்டலத்துடனும், பயங்கர சத்தத்துடனும், வெடித்துச் சிதறி மணலை வாரி வீசியது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.

அடுத்த கட்டுரைக்கு