Published:Updated:

நடுக்கடல் மோதல்; ஆயுதங்களால் தாக்குதல்! - புதுச்சேரி எல்லை மீனவ கிராமங்களில் ஒருமாதம் 144 தடை

இந்தப் பிரச்னையை முடித்து வைப்பதற்காக மீன்வளத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

கிராம மக்களுடன் காவல்துறை
கிராம மக்களுடன் காவல்துறை

புதுச்சேரி - கடலூர் சாலையில் இருக்கும் கிராமம் வீராம்பட்டினம். அதையொட்டிய தமிழகப் பகுதியில் இருக்கிறது நல்லவாடு கிராமம். இந்த இரு கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இடையே சுருக்குவலைகள் தொடர்பாக அவ்வப்போது மோதல் ஏற்படுவதும், அதனைத் தொடர்ந்து அங்கு கலவரம் வெடிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. அப்படி கடந்த மாதம் இருதரப்பு மீனவர்களும் நடுக்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது இரு தரப்பினருமே அருகருகே வலையை விரித்ததால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நல்லவாடு கிராம பஞ்சாயத்தார் சமரச முயற்சியை முன்னெடுத்தனர். தொடர்ந்து தவளகுப்பம் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

காவல்துறை
காவல்துறை

இந்நிலையில்தான் கடந்த 1-ம் தேதி நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் திரைப்படம் பார்த்துவிட்டு, தங்களின் இருசக்கர வாகனங்களில் கடற்கரையோரமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வீராம்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்த நடராஜ் என்பவருக்குச் சொந்தமான ரூ.25 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைக்கு தீ வைத்துவிட்டுத் தப்பியோடினர்.

இந்த விவகாரம் மீண்டும் அங்கே பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து புதுச்சேரி மற்றும் தமிழகக் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். மேலும், புதுச்சேரி, கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் தலைமையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையால் அப்போது நடக்க இருந்த மோதல் தடுக்கப்பட்டது. தொடர்ந்து மீன்பிடி வலைக்கு தீ வைத்ததாக கவி மற்றும் சாமுவேல் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கவி என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பணிகளே நிறைவடையாமல்  எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்த மூக்கையூர் துறைமுகம்... குமுறும் மீனவர்கள்!

தொடர்ந்து இந்தப் பிரச்னையை முடித்து வைப்பதற்காக மீன்வளத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதனால், எந்த நேரத்திலும் அங்கு மோதல் ஏற்படலாம் என்ற சூழல் நிலவியதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று அதிகாலை வீராம்பட்டினம் மற்றும் நல்லவாடு மீனவர்கள் நடுக்கடலில் அருகருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மீண்டும் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.

பாதுகாப்பு
பாதுகாப்பு

அப்போது இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். கரையில் கிராமத்தில் இந்தத் தகவல் கசிந்ததால் இரண்டு கிராம மீனவர்களும் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் படகில் சென்று, நடுக்கடலிலேயே கத்தியால் சரமாரி தாக்கி மோதலில் ஈடுபட்டனர். அந்தத் தாக்குதலில் நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பன், ரவி, மன்னன், மஞ்சினி ஆகியோரும், வீராம்பட்டினத்தைச் சேர்ந்த சுரேந்தர் என்பவரும் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் நூற்றுக்கணக்கான புதுச்சேரி காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.

கடற்கரையோரத்தில் இரண்டு கிராம மீனவர்களும் ஆக்ரோஷமாகக் குவிய ஆரம்பித்தனர். நிலைமை மோசமடைவதை உணர்ந்த காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். ஆனால், அவர்கள் மறுத்த நிலையில் வானத்தை நோக்கி 10 முறை துப்பாக்கியால் சுட்டதோடு, 3 கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசினர்.

கிராம மக்கள்
கிராம மக்கள்

அதனால், கூட்டம் அங்கிருந்து கலைந்தது. தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் இரு கிராமங்களிலும் இன்று மதியம் 144 தடை உத்தரவை பிறப்பித்த மாவட்ட நிர்வாகம், உடனே அமலுக்கு வரும் இந்த உத்தரவு ஒரு மாதம் வரை நீடிக்கும் என்று அறிவித்திருக்கிறது. இதுதொடர்பாக சுமார் 600 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.