Published:Updated:

`ரயில்நிலையங்கள் மூடல்; வெறிச்சோடிய பஸ் ஸ்டாண்டுகள்; மாவட்ட எல்லைகள் சீல்!’- தமிழகத்தில் 144 தடை

சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம்
சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் ( வி.ஸ்ரீனிவாசுலு )

தமிழக அரசு அறிவித்தபடி மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது கொரோனா வைரஸ். சமீபத்திய தரவுகளின்படி உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,91,962 ஆக உயர்ந்திருக்கிறது. இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17,138 ஆக இருக்கிறது. அதேநேரம், கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து 1,02,844 பேர் மீண்டிருக்கிறார்கள். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் இன்று (24.3.2020) மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்
வெறிச்சோடிய கோயம்பேடு பேருந்து நிலையம்

இந்தத் தடை காலத்தில் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே வருமாறு போலீஸார் அறிவுறுத்தியிருக்கிறார்கள். இந்த நிலையில், இன்று மாலை முதல் தடை உத்தரவு அமலாகும் என்று தமிழக அரசு நேற்றே அறிவித்திருந்த நிலையில், மளிகைப் பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்க பொதுமக்கள் காலை முதலே கடைகளில் குவிந்தனர். ஆனால், மாலை 6 மணியாகியும் மக்கள் கூட்டம் சாலைகளில் குறையவில்லை என்பதுதான் சோகம்.

144 தடை உத்தரவு அமலாவதை ஒட்டி மாலை 6 மணி முதல் தமிழகத்தின் மாவட்ட எல்லைகளை போலீஸார் பேரிகார்டுகள் மூலம் தடுப்பை ஏற்படுத்தினர். அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களிடம் அரசின் உத்தரவை எடுத்துக் கூறி திரும்ப அனுப்பி வைத்தனர். சில இடங்களில் பொதுமக்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகின. தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்ட எல்லையிலும் மற்ற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால், பல மாவட்ட எல்லைகள் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்துக் கிடந்தன.

மதுரை - திண்டுக்கல் எல்லை
மதுரை - திண்டுக்கல் எல்லை
ஈ.ஜெ.நந்தகுமார்
`மார்ச் 24 மாலை 6 மணி முதல் ஏப்ரல் 1 காலை 6 மணி வரை!’- தமிழக அரசு தடை உத்தரவு அரசாணை சொல்வதென்ன?

ரயில் போக்குவரத்து ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், 144 தடை உத்தரவை அடுத்து சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரயில்நிலையங்கள் மூடப்பட்டன. அந்த ரயில்நிலையங்களுக்குள் செல்ல மக்கள் அனுமதிக்கப்படவில்லை. ரயில்நிலைய வாயில்களில் பேரிகார்டு தடுப்புகள் போடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. 144 தடை உத்தரவால் நேற்று மக்கள் வெள்ளத்தில் மிதந்த சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், இன்று மக்கள் யாருமின்றி வெறிச்சோடியது. தடை உத்தரவு தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். அதையும் மீறி உரிய காரணங்களின்றி வெளியே வருவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு