Published:Updated:

`10 நாள்கள்... 120 கிராமங்கள்' - கலைக்குழுவினரின் வித்தியாசமான கொரோனா விழிப்புணர்வு

பிரசார பயணத்தைத் தொடங்கி வைக்கும் ஆட்சியர்
பிரசார பயணத்தைத் தொடங்கி வைக்கும் ஆட்சியர்

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வார்கள். அவர்களுக்கு உதவுவதற்காக அரும்புகள் அமைப்பு சார்பாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. 

நெல்லை மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நகரப் பகுதிகளில் மட்டும் இருந்த நோய்த்தொற்று பரவல், கிராமங்களுக்கும் ஊடுருவத் தொடங்கியது. அதனால், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் `அரும்புகள்’ அமைப்பினர் ஈடுபட்டனர்.

மக்களுக்கு விழிப்புணர்வு
மக்களுக்கு விழிப்புணர்வு

கடந்த 20 வருடங்களுக்கும் மேலாகக் கிராமப் பகுதி மக்களின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வரும் அரும்புகள் அமைப்பினர் கொரோனா நோய்த் தடுப்பு பணிக்காக வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தார்கள்.

2,157 வாகனங்கள் பறிமுதல்.. ஆட்டோக்களில் விழிப்புணர்வு பிரசாரம்... #Day15 #Curfew

அரும்புகள் அமைப்பின் கலைக்குழுவைச் சேர்ந்த சுமார் 30 பேர் ஒவ்வொரு கிராமமாகச் சென்று கொரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் எடுத்துக் கூறினார்கள். மாவட்ட ஆட்சியர் ஷில்பாபிரபாகர் சதீஷ் தொடங்கி வைத்த இந்த விழிப்புணர்வு பிரசாரம் 10 நாள்கள் நடந்தது.

கலைக்குழு பிரசாரம்
கலைக்குழு பிரசாரம்

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்ற கலைக்குழுவினர் 120 இடங்களில் விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டார்கள். மக்களுக்குக் கைகழுவும் அவசியத்தை விளக்குவது, சமூக இடைவெளியின் அவசியம், கொரோனா நோய்த் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருப்பது குறித்து வீதி நாடகங்கள் மூலம் விளக்கினார்கள்.

கலைக்குழுவினர் தன்னார்வத்துடன் பங்கேற்ற இந்தப் பணிகள் குறித்து அரும்புகள் நிறுவனர் மதிவாணன், நிர்வாக இயக்குநர் லதா மதிவாணன் ஆகியோர் கூறுகையில், ``நாட்டின் பெரும் அச்சம் ஏற்படுத்தும் நோய்த்தொற்றாக உள்ள கொரோனாவை கட்டுப்படுத்தும் கடமை அனைவருக்கும் இருக்கிறது. எல்லோரும் சேர்ந்தால் மட்டுமே நோய்த்தொற்று பரவாமல் பாதுகாக்க முடியும்.

மதிவாணன், அரும்புகள் நிறுவனர்
மதிவாணன், அரும்புகள் நிறுவனர்

அதனால் கிராமப் பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாகக் கிராமங்களில் விழிப்புணர்வு பிரசாரம் செய்தோம். சாதாரணமாக நோட்டீஸ் கொடுப்பது, பிரசாரம் செய்தால் மக்கள் ரசிக்க மாட்டார்கள் என்பதால் அவர்கள் விரும்பும் வகையில் கலைக்குழு உறுப்பினர்களைப் பயன்படுத்தினோம்.

பொதுமக்கள் கூடும் இடங்களில், `அக்கா கேட்டீங்களா? நாம் ஒருவருக்கொருவர் இடைவெளி விட்டு இருந்தால் நோய்த் தொற்று ஏற்படாது. முகக் கவசம் அணிவது அவசியம். அடிக்கடி கை கழுவுவதன் மூலம் இந்த நோய்த் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்’ என்பது போன்ற கருத்துகளை வித்தியாசமான வேடம் அணிந்தவர்கள் மூலம் சொல்லும்போது மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

பிரசார வாகனம் மற்றும் விழிப்புணர்வு பிரசாரம்
பிரசார வாகனம் மற்றும் விழிப்புணர்வு பிரசாரம்

வனக் குழுக்கள் உதவியுடன் வனப் பகுதிகளையொட்டிய கிராமங்களில் பிரசாரம் செய்தோம். திருக்குறுங்குடி, களக்காடு வனப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் எங்கள் குழுவினருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள காணி இன மக்கள் வசிக்கும் கிராமங்களிலும் எங்களின் பிரசார விழிப்புணர்வு பயணம் இருந்தது. காணி குடியிருப்புகளில் வசிக்கும் குடும்பத்தினருக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவற்றையும் வழங்கினோம். 

காணி  இன மக்களுக்கு விழிப்புணர்வு பணி
காணி இன மக்களுக்கு விழிப்புணர்வு பணி

எங்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முதல் சாமானிய மக்கள் வரை எங்களின் பிரசார பயணத்துக்கு உதவினார்கள். அதன் மூலம் இந்தப் பயணத்தின் வெற்றியைப் புரிந்துகொள்ள முடிகிறது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள்.

அடுத்த கட்டுரைக்கு