Published:Updated:

`நீர் எங்கள் உரிமை... சூயஸே வெளியேறு!’ - கோவை மாநகராட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த செல்ஃபி போராட்டம்

எம்.புண்ணியமூர்த்தி

சமூக வலைதளத்தில் சூயஸ் நிறுவனத்துக்கான எதிர்ப்புக்குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது. அதற்குக் கடிவாளம் போடும் நோக்கில், அப்துல் ரசாக்கை கைது செய்துள்ளனர்.

Selfie protest
Selfie protest

கோவை மாநகராட்சி, பிரான்ஸ் நிறுவனமான சூயஸ் மூலம் செயல்படுத்த இருக்கும் 24*7 குடிநீர் திட்டத்துக்கு எதிரான ஒரு வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் ஷேர் செய்ததற்காக அப்துல் ரசாக் என்கிற இளைஞர் கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து சூயஸே வெளியேறு என்கிற முழக்கத்தை முன்வைத்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்யும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

Coimbatore corporation
Coimbatore corporation

சிறுவாணி, பில்லூர் 1, பில்லூர் 2, ஆழியார் கூட்டுக்குடிநீர் திட்டம், வடவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டங்கள் ஆகியவை கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இங்குள்ள 100 வார்டுகளில் 60 வார்டுகளுக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்வதற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் என்ற நிறுவனத்துடன் கடந்த ஆண்டு ரூ. 3,167 கோடி மதிப்பில் ஒப்பந்தம் போட்டது கோவை மாநகராட்சி. அந்த அறிவிப்பு வெளியானது முதலே சூயஸுக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கிவிட்டன.

`சில மாற்றங்களுடன் குடிநீர் கட்டணத்தை சூயஸ் நிறுவனம் நிர்ணயித்துக்கொள்ளலாம்' என்றும் `தேவை ஏற்பட்டால் குடிநீர் கட்டணத்தை உயர்த்தலாம்' என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனைச் சுட்டிக்காட்டி, சூயஸ் நிறுவனத்திடம் குடிநீர் விநியோகத்தை ஒப்படைத்தால் 1200 பொது குடிநீர் குழாய் மூடப்படும் அபாயமும் குடிநீர் கட்டணமும் உயரும் அபாயமும் ஏற்படலாம். ஆகையால், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு கோவை மாநகராட்சியே குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள வேண்டும்' என்ற குரல்கள் வலுத்தன.

ஆனால், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாத நிர்வாகம், திட்டத்தைச் செயல்படுத்துவதில் முனைப்புக் காட்டியது. உள்ளாட்சித்துறை அமைச்சர், `இது வளர்ச்சிக்கான திட்டம், எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியே தீருவோம்' என்று மேடைகளில் முழங்கினார்.

Selfie protest
Selfie protest

`இந்தத் திட்டத்தைப் பற்றி அவதூறு பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று மாநகராட்சி எச்சரித்தது. ஆனாலும், சமூக வலைதளத்தில் சூயஸுக்கான எதிர்ப்புக்குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது. அதற்குக் கடிவாளம் போடும் நோக்கில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சூயஸுக்கு எதிராக யாரோ ஒருவர் உருவாக்கிய வீடியோவை ஷேர் செய்ததற்காக அப்துல் ரசாக் என்பவர் மீது வழக்குப் பதிவுசெய்து கைது செய்தனர் உக்கடம் போலீஸார். இது கோவை வாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தநிலையில் நேற்று மாலை இதைக் கண்டித்து `சூயஸே வெளியேறு’ என்கிற முழக்கத்தை முன்வைத்து செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்யும் போராட்டத்தை நடத்தியுள்ளனர் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர். இது கோவை மாநகராட்சிக்கு மேலும் நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது.

Vikatan

போராட்டத்தைத் தொடங்கி வைத்த ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, ``உலகப் புகைப்பட தினத்தில் `சூயஸ் நிறுவனமே வெளியேறு' என்ற முழக்கம் பொறிக்கப்பட்ட பேனர் முன்பு நின்று செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றும் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம். சூயஸ் நிறுவனம் கோவைக்கு வந்தால் என்ன ஆகும் என்று யாரோ ஒருவர் தயாரித்த வீடியோவை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்ததற்காகக் கோவையைச் சேர்ந்த அப்துல்ரசாக் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதுபோன்ற அச்சுறுத்தலால் ஒருபோதும் போராட்டத்தை ஒடுக்கிவிட முடியாது என்பதை அறிவிக்கின்ற வகையில் செல்ஃபி போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்
ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா

ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் 25,000-க்கும் மேற்பட்டோர் இதேபோன்று செல்ஃபி எடுத்து முகநூலில் பதிவிட ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறோம். உடனடியாக சூயஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு மாநகராட்சியே குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் சூயஸுக்கு எதிரான எங்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம். வழக்குகளுக்கும் கைதுகளுக்கும் அஞ்சமாட்டோம். நீர் எங்கள் உரிமை அதைத் தனியாருக்குத் தாரை வார்க்க ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டோம்’ என்றார் உறுதியான குரலில்.