Published:Updated:

ஆற்று மணலுக்குள் மூழ்கிப்போன ஏழு இளம் உயிர்கள், கலங்கவைக்கும் கடலூர் சோகம்; சில பாடங்கள்!

கடலூர் சோகம்

கெடிலம் ஆற்றில் அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட ஆழமான பள்ளத்தில்தான் எங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகள் மூழ்கி விட்டார்கள் என்று கிராமத்தினர் குற்றம் சாட்ட, அதுகுறித்து விசாரணை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் காவல் துறையினர்.

ஆற்று மணலுக்குள் மூழ்கிப்போன ஏழு இளம் உயிர்கள், கலங்கவைக்கும் கடலூர் சோகம்; சில பாடங்கள்!

கெடிலம் ஆற்றில் அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட ஆழமான பள்ளத்தில்தான் எங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகள் மூழ்கி விட்டார்கள் என்று கிராமத்தினர் குற்றம் சாட்ட, அதுகுறித்து விசாரணை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் காவல் துறையினர்.

Published:Updated:
கடலூர் சோகம்

வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற அந்த சிறுமிகளின் சடலங்களைப் பார்க்கையில் மனசு விட்டுப் போகிறது. ஒருநாள் முன்னால் வரைக்கும் கோடை விடுமுறையை ஆடி, பாடி, ஆற்றில் குளித்து என விளையாடிக்கொண்டிருந்தவர்கள் இப்போது சடலங்களாக அரசு மருத்துவமனையில் அசையாது கிடக்கிறார்கள். கோடை விடுமுறையும், அதில் எதிர்பாராத கோடை மழையும் சொல்லொண்ணா மகிழ்வை தருபவை. ஆனால், அந்தப் பெண் குழந்தைகளுக்கு இந்த வருடத்தின் கோடையும் மழையுமே இறுதி மகிழ்ச்சியாக முடிந்துவிட்டன.

கடலூர் சோகம்
கடலூர் சோகம்

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்து இருக்கும் கீழ் அருங்குணம், குச்சிப்பாளையம் பகுதியைக் கடந்து செல்கிறது கெடிலம் ஆறு. இந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் தற்போது பரவலாகக் கோடைமழை பெய்து வருவதால், இந்தத் தடுப்பணையில் தண்ணீர் தேங்கியிருக்கிறது. கோடைக் காலங்களில் கடலைக் கண்டாலும், ஆற்றில் புதுத்தண்ணீர் வந்தாலும் காலை நனைக்கும் ஆசையிலிருந்து நீச்சலடிக்கும் ஆசை வரைக்கும் அனைவருக்கும் வரும். கெடிலம் ஆற்றின் தடுப்பணையைச் சுற்றியிருக்கும் கிராமங்களைச் சேர்ந்த இளம் பெண்களுக்கு ஆற்றுத் தண்ணீரில் நீந்தி விளையாடும் ஆசை வந்திருக்கிறது. அவர்களுடன் மூன்று சிறுமிகளும் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். தினம்தோறும் ஆற்று நீரில் குளித்து வந்தவர்கள், தங்கள் வாழ்க்கையின் இறுதி நாளென்று தெரியாமல் நேற்று காலையும் ஏழு பேரும் ஒன்றாகக் குளிக்க இறங்கியிருக்கிறார்கள். தண்ணீரில் நீந்திக்கொண்டே இருந்தவர்கள் சிறிது நேரத்தில் அவர்களையறியாமல் ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்று விட்டிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மெள்ள மெள்ள ஆற்றுத்தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தவர்கள் உயிர் பயத்தில் `காப்பாத்துங்க... காப்பாத்துங்க...' என்று அலற ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்களுடன் வந்த, கரையில் அமர்ந்துகொண்டிருந்த பெண்ணும் உதவிகேட்டு குரல் கொடுக்க ஆரம்பிக்க, சத்தம் கேட்டு ஓடி வந்திருக்கிறார்கள் கிராம மக்கள். தடுப்பணையில் மூழ்கி, மயங்கிக் கிடந்த சிறுமிகளையும், இளம்பெண்களையும் காப்பாற்றி கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். ஆனால், 7 பேரும் ஏற்கெனவே மூச்சுத் திணறி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

பிரதமரின் இரங்கல்
பிரதமரின் இரங்கல்

சற்று முன்பு சந்தோஷமாகக் குளிக்கச் சென்ற பெண்கள் இப்போது உயிரோடு இல்லையென்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் கதறிக்கொண்டிருக்கின்றன கெடிலம் அணையையொட்டிய கிராமங்கள். கெடிலம் ஆற்றில் அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட ஆழமான பள்ளத்தில்தான் எங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகள் மூழ்கி விட்டார்கள் என்று கிராமத்தினர் குற்றம் சாட்ட, அதுகுறித்து விசாரணை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் காவல் துறையினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரே நாளில், ஒரே நேரத்தில்... 7 உயிர்கள் பறிபோனதையடுத்து, `தமிழகத்திலுள்ள கடலூரில் 7 பேர் உயிரிழந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்தத் துயரமான நேரத்தில் என் நினைவுகள் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடனே உள்ளன' என்று தன்னுடைய இரங்கலை ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார் பிரதமர் மோடி. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 7 குடும்பத்துக்கும் தலா 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றிருக்கிறார். ஆறுதல் வார்த்தைகளும், நிவாரணமும் சம்பந்தப்பட்ட குடும்பங்களை நொடி நேரம் தேற்றும் என்றாலும், எதைக் கொண்டும் ஆற்று மணலுக்குள் மூச்சுக்குத் தவித்து அவர்கள் போராடிய நொடிகளை ஆற்றுப்படுத்தவே முடியாது.

கடலூர் சோகம்
கடலூர் சோகம்

இறந்தவர்கள் ஏழு பேரும் 10 வயதில் ஆரம்பித்து 20 வயது வரையான இளம் வயதினர். அவர்கள் தங்கள் வீட்டுக்கு ஒற்றைப்பிள்ளையாக இருந்திருக்கலாம்; படித்து முடித்து வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருந்திருக்கலாம்; உயர்கல்வி கனவுகளுடன் இருந்திருக்கலாம்; நல்லதொரு காதலில் இருந்திருக்கலாம்... எல்லாம் நொடி நேரத்தில் நீருக்குள் மூழ்கிவிட்டன.

அரசுக்கு ஒரு வேண்டுகோள். சட்ட விரோதமாக ஆறுகளில் மணல் எடுக்கப்படுவது குறித்து அறிக்கைகள், புகார்கள், தடை, தடை ரத்து என பேப்பரிலேயே வேலை செய்யாமல், செயலில் இறங்குங்கள்.

சக மனிதர்களுக்கு ஒரு வார்த்தை. அது ஆறோ, கடலோ... மிக கவனமாக இருங்கள். எப்போதும் தண்ணீரைக் கண்டால் பிள்ளைகள் துள்ளத்தான் செய்வார்கள். அதில் இருக்கும் ஆபத்தை கண்களைத் தாண்டியும் மூளையால் உனர்ந்து, அவர்களை எப்போதும் பாதுகாப்பு வளையத்துக்கு வெளியே சென்றுவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism