Published:Updated:

`காவல்துறையினரே கைதட்டி உற்சாகமளித்தபோது..!'- எஸ்.பி-யின் பாராட்டால் நெகிழும் சாந்தி அம்மா

சாந்தி
சாந்தி

`என்னுடைய பணம் தொலைந்தால் நான் எப்படி துடித்திருப்பேன். அதைப்போலத்தான் அந்தத் தம்பியும் மனம் கலங்கி இருக்கும்!' - சாந்தி அம்மா

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர் 21,000 பணம் மற்றும் ஆவணங்களைத் தொலைத்துவிட்டார். அவர் தொலைத்த பணத்தைக் கண்டெடுத்த சாந்தி அம்மா என்பவர், அதை மணிகண்டனிடம் ஒப்படைத்தார்.

சிவகங்கை எஸ்.பி., பாராட்டு
சிவகங்கை எஸ்.பி., பாராட்டு

இதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் சாந்தி அம்மாவுக்கு பாராட்டுகள் குவிந்தன. பணத்தைத் தொலைத்த மணிகண்டன் மற்றும் உதவி செய்த சாந்தி அம்மாவிடமும் பேசி ``அடுத்தவர் பணம் நமக்கெதுக்கு?' - வாட்ஸ்அ ப் துணையுடன் இளைஞரைத் தேடி பணத்தை ஒப்படைத்த சாந்தி அம்மா" என்ற தலைப்பில் விகடன் இணையத்தில் கட்டுரை வெளியிட்டோம்.

இந்த நிலையில் இந்தச் செய்தியை அறிந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித்நாதன், சாந்தி அம்மாவின் நற்செயலைப் பாராட்டி, ஊக்குவிக்க நினைத்து, அதிகாரிகள் மூலம் நம்மை தொடர்புகொண்டு சாந்தி அம்மாவின் தொலைபேசி எண்ணை பெற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வருடாந்திர படைக்கலைப்பு கவாத்து நாள் (Demobilization Day) விருந்துக்கு (Bhara Khana) சாந்தி அம்மாவை அழைத்து பாராட்டி கௌரவித்தார்.

சாந்தி அவர்களூக்கு பாராட்டு
சாந்தி அவர்களூக்கு பாராட்டு

இது குறித்து சாந்தி அம்மாவிடம் பேசினோம்..., ``நான் பிறர் பணத்துக்கு எப்போதும் ஆசைப்பட்டதில்லை. அதனால் அன்று கண்டெடுத்ததும் உடனடியாக பணத்தைத் திருப்பிக் கொடுத்தேன். இது இயல்பாகத்தான் செய்தேன். என்னுடைய பணம் தொலைந்தால் நான் எப்படி துடித்திருப்பேன்.

அதைப்போலத்தான் அந்தத் தம்பியும் மனம் கலங்கி இருக்கும். இதற்காகதான் பணத்தை உடனடியாகக் கொடுத்தேன். எனக்கு போலீஸ் எஸ்.பி-யே பாராட்டு தெரிவிப்பார் என்று நினைக்கவில்லை. மேடையில் எனக்கு சால்வை அணிவித்து எஸ்.பி சார் பாராட்டும்போது சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் அனைவரும் கைதட்டி உற்சாகப்படுத்தினர். இது என்னை நெகிழ்ச்சி அடையச் செய்துவிட்டது" என்றார்.

விகடன் இணையத்தில்
விகடன் இணையத்தில்

இது குறித்து சிவகங்கையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், ``பணத்துக்கு ஆசைப்படாதவர்கள் நாட்டில் குறைவான நபர்களே. சொந்த உறவுகளின் பணத்தையே திருப்பிக்கொடுக்க மனம் இல்லாத நபர்களின் மத்தியில் யார் என்று தெரியாத நபரின் பணத்தை ஒப்படைத்தது பாராட்டக் கூடிய விஷயம். சிவகங்கை எஸ்.பி, சாந்தி அம்மாவை அழைத்து பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு