Published:Updated:

`போலி முகவரி; கவரிங் நகைகள்!' - அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நெல்லை கூட்டுறவு வங்கி

நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி
நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி

நகைகளை அடமானம் வைத்தவர்கள் திருப்புவதற்கு வராததால் அவர்களின் முகவரிக்குச் சென்று விசாரித்தபோது அவை போலியானவை என்பது தெரியவந்துள்ளது.

நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. சுமார் 50 பேர் பணியாற்றும் இந்த வங்கியின் தலைவராக நெல்லை மாநகர மாவட்ட அ.தி.மு.க செயலாளரான தச்சை கணேசராஜா பொறுப்பு வகித்து வருகிறார். ஆனால், கடந்த 2017 முதல் 2019 செப்டம்பர் வரையிலான காலத்தில் இந்தக் கூட்டுறவு வங்கியில் முறைகேடு நடந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. 

`போலி ஆவணங்கள்; கூட்டுறவு வங்கியில் ரூ. 1 கோடி மோசடி!’ - தென்காசியில் முன்னாள் துணைச் செயலாளர் கைது

அந்த வங்கியில் நகைகளை அடமானம் வைத்த பலர், உரிய காலக்கெடு முடிந்த பின்னரும் திருப்புவதற்கு வரவில்லை. மேலும், பலர் வட்டி கூடச் செலுத்தாமல் நகைகளைத் திருப்பவும் வராமல் இருந்துள்ளனர். அதனால் அத்தகைய நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

வங்கியிலிருந்து அனுப்பிய நோட்டீஸ், தவறான முகவரி எனத் திரும்பியுள்ளன. அதனால் வங்கிப் பணியாளர்களே நேரில் சென்று, நகைகளை அடமானம் வைத்தவர்களிடம் பேசச் சென்றுள்ளனர். ஆனால், அந்த முகவரிகளில் பல போலியானவை என்பது தெரியவந்திருக்கிறது. 

கூட்டுறவு வங்கி
கூட்டுறவு வங்கி

அதனால் சந்தேகம் அடைந்த வங்கி அதிகாரிகள், இதுகுறித்து சென்னையில் உள்ள கூட்டுறவுத் துறையின் உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். அதனால் சென்னையிலிருந்து வந்த தணிக்கை அதிகாரிகள் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை ஆய்வு செய்தனர். அப்போது அவை போலியானவை என்பது தெரியவந்துள்ளது.

நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் இதுபோன்று போலியான முகவரியுடன் சுமார் 200 சவரன் நகை அடமானம் வைக்கப்பட்டுள்ளது. நகை மதிப்பீட்டாளர் மற்றும் வங்கி அதிகாரிகளின் துணை இல்லாமல் இந்த மோசடி நடந்திருக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. 

Vikatan
போலியான முகவரியுடன் சுமார் 200 சவரன் நகை அடமானம் வைக்கப்பட்டுள்ளது. நகை மதிப்பீட்டாளர் மற்றும் வங்கி அதிகாரிகளின் துணை இல்லாமல் இந்த மோசடி நடந்திருக்க வாய்ப்பில்லை.
வங்கி அதிகாரிகள்

அதனால் வங்கிகளில் உள்ள நகைகள் அனைத்தையும் ஆய்வு செய்ய வங்கித் தலைவரான தச்சை கணேசராஜா உத்தரவிட்டுள்ளார். எவ்வளவு ரூபாய் மோசடி நடந்துள்ளது என்பதைக் கண்டறிந்த பின்னர் காவல்துறையில் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் தற்போது நகைகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு