Published:Updated:

`மரத்தடிகளும் மூலப்பொருள்களும் வரவில்லை..' - ஊரடங்கு தளர்விலும் மூடப்படும் தீப்பெட்டி ஆலைகள்?

தீக்குச்சிகள்
தீக்குச்சிகள்

ஊரடங்கால் வெளிமாநிலங்களில் இருந்து வரவேண்டிய தீக்குச்சி மரத்தடிகள், மூலப்பொருள்கள் வரத்து நிறுத்தப்பட்டதால் தீக்குச்சி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும், மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளையுடன் நிறைவடையும் நிலையில், மேலும் ஊரடங்கை நீட்டிப்பதா இல்லையா என்பது குறித்து பிரதமர் அனைத்து மாநில முதல்வர்களுடனும், முதல்வர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

தீக்குச்சி மரத்தடிகள்
தீக்குச்சி மரத்தடிகள்

இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட தளர்வால் பல தொழில்கள், 50 சதவிகித தொழிலாளர்களுடன் செயல்பட்டு வருகின்றன. தளர்வு அளிக்கப்பட்டாலும் தீப்பெட்டித் தொழிலின் முக்கிய மூலப் பொருள்களான தீக்குச்சி மரத்தடிகள், மருந்துப் பொருள்கள் வரத்து இல்லாததால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தீப்பெட்டி ஆலைகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக வேதனையுடன் கூறுகிறார்கள் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சுரேஷிடம் பேசினோம், ``தமிழகத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தீப்பெட்டி உற்பத்தி நடந்து வருகிறது. முழு இயந்திர தீப்பெட்டித் தொழிற்சாலைகளும், 400 பகுதி இயந்திர தீப்பெட்டித் தொழிற்சாலைகளும், 3,000 சிறு தீப்பெட்டித் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இத்தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மருந்து முக்கப்பட்ட தீக்குச்சிகள்
மருந்து முக்கப்பட்ட தீக்குச்சிகள்

இதில், 80 சதவிகித தொழிலாளர்கள் பெண்கள்தான். ஏற்கெனவே ஜி.எஸ்.டி வரிவிதிப்பினால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிப்பு அடைந்த நிலையில், நீண்டகால கோரிக்கைக்குப் பிறகு 18 சதவிகிதமாக விதிக்கப்பட்டிருந்த ஜி.எஸ்.டி வரியை கடந்த மாதம் 12 சதவிகிதமாகக் குறைத்து அறிவித்தது மத்திய அரசு. இதனால், தீப்பெட்டி உற்பத்தியாளார்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் தமிழகத்தில் தீப்பெட்டித் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.

``ஊரடங்கு தளர்வால் கடந்த சில நாள்களாக 50 சதவிகித தொழிலாளர்களைக் கொண்டு தீப்பெட்டி உற்பத்தி செய்து வருகிறோம். கையிருப்பில் உள்ள தீக்குச்சிகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்தோம். இந்த நிலையில், தீக்குச்சிகள் தயாரிப்புக்கான கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து லாரிகளில் வர வேண்டிய தீக்குச்சி மரத்தடிகள், ஊரடங்கால் தற்போது மாநிலங்களுக்கு இடையேயான லாரிப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வரத்து தடைபட்டுள்ளது. உள்ளூரில் உள்ள தீக்குச்சி உற்பத்தியாளர்களிடமும் தீக்குச்சிகள் இல்லை. பெரும்பாலான ஆலைகளில் தீக்குச்சிகள் தீர்ந்துவிட்டன. இதனால், ஆலைகளை மூட வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

தீப்பெட்டிகளில் அடைக்கப்படும் தீக்குச்சிகள்
தீப்பெட்டிகளில் அடைக்கப்படும் தீக்குச்சிகள்

அதேபோல, தீக்குச்சி மருந்து தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருளான குளோரைடும் தீர்ந்துபோகும் நிலையில் உள்ளது. புதுச்சேரியில் இருந்து வர வேண்டிய இக்குளோரைடு, வெடிபொருள்கள் பட்டியலில் இருப்பதால் அதற்கும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, மரத்தடிகள், குளோரைடு மூலப்பொருளை லாரிகளில் எடுத்துவர அரசு அனுமதி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் தீப்பெட்டி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு