Published:Updated:

மாவீரர் நாள் கொண்டாடியதாக சிங்கப்பூரிலிருந்து வெளியேற்றப்பட்ட இளைஞர்! - நடந்தது என்ன?

குமரேசன்
News
குமரேசன்

சிங்கப்பூர் அரசு குமரேசன் மீண்டும் சிங்கப்பூர் செல்ல முடியாத வகையில் வாழ்நாள் தடைவிதித்து, அவரை அங்கிருந்து வெளியேற்றிவிட்டது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே எடையூரைச் சேர்ந்தவர் செல்வமணி. இவர் எடையூர் கடைவீதியில் கோழி இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இவர் மகன் குமரேசன் கடந்த மூன்று ஆண்டுகளாக சிங்கப்பூரில் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் தொழிலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இவர் நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இருக்கிறார். இந்த நிலையில், இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக மாவீரர் நாள் கொண்டாடியதாக, சிங்கப்பூர் காவல்துறையினரால் கைது அண்மையில் கைது செய்யப்பட்டார். மேலும், சிங்கப்பூர் அரசு குமரேசன் மீண்டும் சிங்கப்பூர் செல்ல முடியாத வகையில் வாழ்நாள் தடைவிதித்து, அவரை அங்கிருந்து வெளியேற்றிவிட்டது.

சிங்கப்பூர்
சிங்கப்பூர்
Pixabay

அதனால், சிங்கப்பூரில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த குமரேசன், ஒருவழியாக சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் எடையூருக்கு வந்து சேர்ந்தார். குமரேசன் சிங்கப்பூரிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டிருப்பது, அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சிங்கப்பூரில் என்ன நடந்தது? என்பது குறித்து குமரேசன் விகடன் இணையதளத்துக்கு பேட்டியளித்த விவரித்தார். ``பத்து நாள்களுக்கு முன்னாடி, சிங்கப்பூர் போலீஸ் என்னை கைது செஞ்சு விசாரணைக்கு அழைச்சிக்கிட்டு போனாங்க. விடுதலை புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக, நான் மாவீரர் நாள் கொண்டியதாகவும், என்னோட கையில விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிராபகரன் படம் இருந்ததாகவும் குற்றம்சாட்டினாங்க. இதுக்கு யார் உங்களுக்கு அனுமதி கொடுத்தாங்கனு கேட்டாங்க. நான் அதுக்கு, `நாம் தமிழர் கட்சியில் நான் உறுப்பினரா இருக்கேன். எங்க தலைவர் சீமான், விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவரை ஆதரிக்கிறார். அதனால்தான் மாவீரர் நாள் கொண்டாடினோம்'னு சொன்னேன். உங்க கட்சியின் தலைவர் சீமான், எல்.டி.டி.ஈ இயக்கத்தை ஆதரிச்சாருனா, அதுல உறுப்பினரா இருக்குற நீங்களும் எல்.டி.டி.இ இயக்கத்தை ஆதரிக்கிறீங்கனுதானே அர்த்தம்’னு சொன்னாங்க.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
குமரேசன்
குமரேசன்

இதுல என்ன வேதனையான வேடிக்கைனா, இந்த வருசம் நாங்க மாவீரர் நாள் கொண்டாடவே இல்லை. போன வருசமும் கொண்டாடல. 2019-ம் வருசம் அதுவும் நாங்க தங்கியிருக்குற ரூம்ல, பிரபாகரன் போட்டோவை வச்சி, மெழுகுவத்தி ஏத்தினோம். அந்த போட்டோவை எங்களோட நண்பர் யாரோ ஒருத்தர் சமூக வலைதளத்துல பகிர்ந்திருக்காங்க. நான் எந்த தவறுமே செய்யலை. இரண்டு வருசத்துக்கு முன்னாடி நடந்த, அதுவும் எங்க ரூம்ல, நடந்த ஒரு சாதாரண நிகழ்வுக்காக தண்டிக்கப்பட்டு வெளியேத்தப்பட்டதை நினைச்சா வேதனையா இருக்கு, 6 நாள் சிங்கப்பூர் ஜெயில்ல இருந்தேன். அதுக்கு பிறகு தான் என்னை இங்க அனுப்பி வைச்சாங்க" என்றார் ஆதங்கத்துடன்.