Published:Updated:

`குருவிக்காக இருளில் மூழ்கிய கிராமம்; பைக்கை நகர்த்தாத வழக்கறிஞர்!’ - நெகிழ்ச்சி சம்பவங்கள்

குருவிக் குஞ்சு
குருவிக் குஞ்சு

`எங்கள் கிராம வாட்ஸ் அப் குழுவில் தகவலைச் சொல்லி தெருவிளக்கைப் பயன்படுத்த வேண்டாம். வீடுகளில் உள்ள விளக்கைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என இளைஞர்கள் சார்பாகக் கேட்டுக்கொண்டேன். அனைவரும் ஆதரவு கொடுத்தனர்.”

உலகில் குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட சில பறவை இனங்கள் கூடு கட்டி வசித்தால் அப்பகுதி சுற்றுச்சூழல் ஆரோக்கியம் நிறைந்த பகுதி என இனம் காணமுடியும். மரங்கள் வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் பறவை இனங்கள், அருகி வரும் சூழலைத்தான் தற்போது பார்க்க முடிகிறது. இயல்பாக சுற்றித் திரிந்த சின்னச் சிறு சிட்டுக் குருவிகளுக்கு கூட மனிதர்கள் கூடு அமைக்கும் நிலைக்கு வந்துவிட்டோம்.

குருவி
குருவி

இந்நிலையில் கிராம மக்கள் மனித நேயம் மலரச் செய்த செயல் பாராட்டப்படுகிறது. சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அருகே உள்ளது பொத்தகுடி. இந்தக் கிராமத்தில் பல்வேறு தெருக்கள் உள்ளன. இந்த ஊரின் கடைசியில் உள்ள போஸ்ட் கம்பம் அருகேதான் கிராமத்தின் தெருவிளக்குகளின் ஸ்விட்ச் போர்டு உள்ளது. இந்த போர்டில் குருவி ஒன்று கூடு கட்டி குஞ்சு பொறித்துள்ளது. இந்நிலையில் குருவியின் நிலையை உணர்ந்த பொதுமக்கள் கிராமம் இருளில் சூழ்ந்தாளும் பரவாயில்லை தற்காலிகமாக ஸ்விட்ச்சை பயன்படுத்த வேண்டாம் என முடிவு செய்து குருவிக் குஞ்சுகளை பாதுகாத்தது நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இது குறித்து கிராம இளைஞர் கருப்புராஜ், ``என் வீட்டின் அருகேதான் தெருவிளக்கு ஸ்விட்ச் போர்டு உள்ளது. இதை தினமும் நான் தன் ஸ்விட்ச் போடுவேன். ஒரு நாள் அப்படி லைட் போட போகும்போது குருவி கூடு கட்டி இருந்ததைப் பார்த்தேன். அதற்கு தொந்தரவு இல்லாத வகையில் சில நாள் ஸ்சுவிட்ச் போட்டேன். பின்னர், எங்கள் கிராம வாட்ஸ் அப் குழுவில் தகவலை சொல்லி தெருவிளக்கைப் பயன்படுத்த வேண்டாம். வீடுகளில் உள்ள விளக்கைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என இளைஞர்கள் சார்பாகக் கேட்டுக்கொண்டேன்.

தெருவிளக்கு
தெருவிளக்கு

அனைவரும் மறுப்பு சொல்லாமல் ஆதரவு கொடுத்தனர். லைட் இல்லாட்டி பரவாயில்லை பாதுகாப்பாக இருந்துகொள்வோம் என பெண்கள் கூட ஆதரவு தெரிவித்தனர். இதனால் கிராமம் இருட்டில் மூழ்கினாலும் பரவாயில்லை எனத் தெருவிளக்கு ஸ்விட்ச் ஒரு மாதத்துக்கு மேல் போடவில்லை. நேற்று முதல் குருவிகள் பறக்கத் தொடங்கிவிட்டது. அதனால் நேற்று இரவு முதல் ஸ்விட்ச்களை பயன்படுத்த தொடங்கிவிட்டோம். எனினும் குருவிகள் வந்து செல்வதால் அதற்கு குருவி கூடுகள் அமைக்க உள்ளோம். எங்கள் கிராமத்தில் பறவைகள் குறித்து விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்த உள்ளோம்" என்றார்.

இதே போல் மதுரை உலகனேரி பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன். பொது முடக்கம் அமலில் உள்ளதால் வீட்டில் குடும்பத்துடன் இருந்து வருகிறார். இந்நிலையில் மே மாதம் தன் மனைவியின் இரு சக்கர வாகனத்தில் சிட்டுக்குருவி ஒன்று கூடு கட்டி உள்ளது. இதை அவர் குழந்தைகள் பார்த்துச் சொல்லி உள்ளனர். சிட்டுக்குருவியின் மேல் ஆசை கொண்ட வழக்கறிஞர் குடும்பம் அது கட்டிய கூட்டை கலைக்க விரும்பாததால் தனது இரு சக்கர வாகனத்தை அந்த இடத்தை விட்டு நகர்த்தாமல் வைத்துள்ளனர்.

குருவி முட்டைகள்
குருவி முட்டைகள்

தற்போது சிட்டுக்குருவி முட்டையிட்டு குஞ்சு பொறித்து உள்ளது. சிட்டுக் குருவி குஞ்சு பொறித்து தானாகப் பறந்து செல்லும் வரை தனது இரு சக்கர வாகனத்தை அந்த இடத்தை விட்டு நகர போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். இதனால் பொத்தகுடி கிராம மக்களுக்கும் மதுரை வழக்கறிஞர் குடும்பத்துக்கும் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு